Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Saturday, 15 April 2017

ஆண்டார்குப்பம் அழகன்



சென்னை புறநகர் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள திருப்புகழ் பாடல் பெற்ற தளங்களில் இந்த ஆண்டார் குப்பம் முருகன் தலமும் ஒன்று. தொண்டைநாட்டு திருப்புகழ் பாடல் பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலின் சிறப்பு மூலவர் பால சுப்பிரமணியர் அதிகாலையில் பாலகனாகவும், மதியம் வாலிபக் கோலத்திலும், மாலை வயோதிகக் கோலத்திலும் திருக்காட்சி அளித்து அருளுகிறார். மேலும் இங்கு முருகப்பெருமான் தனித்து இருக்கிறார். வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்காது தனித்தும் இருகரங்களுடன் வேல் , கோழிக் கொடி ,வில் , அம்பு , வஜ்ராயுதம் ,அக்கமாலை என்று ஏதும் இல்லாது அதிகார நிலையில் இடுப்பில் கைவத்துக் கொண்டு அருளுகிறார். 



 ஆலய சிறப்பு :: 

இத்தலத்திற்க்கு வந்து முருகனை வழிபட்டால் வேலை வாய்ப்புகள், உயர் பதவிகள் வந்துசேறும். 

முருகப்பெருமான் இருகரத்துடன் அதிகார தோனியில் அயுதமின்றி பக்கமிரு யானைகள் இருக்க அருளுகிறார்.

 
ஆலயம்  செல்லும்  நுழைவாயில்


ஆலயத் தோற்றம்


அருணகிரிநாதர் இந்த முருகன் மீது ஒரு திருப்புகழ் பாடல் பாடித்தொழுது உள்ளார். 

மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் பிரம்மனின் அம்சமான தாமரை ,ஏடு, அக்கமாலை பொரித்த நடுக்கல் திகழ்கிறது; அதில் பிரம்மதேவன் எக்காலமும் தனக்கு ஆணவம் தலை தூக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடன் முருகனை தியானித்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. 

முன் மண்டபம் 




ராஜகோபுரம்

முருகப்பெருமான் மயில் வாகனம் இங்கு சற்று வித்தியாசமாக உள்ளது. மயிலுடன் சிம்ம வாகனமும் இணைந்து உள்ளது. அம்பிகைக்குரிய வாகனம் சிம்மம். தன் அன்னைக்கு உரிய வாகனத்துடன், இங்கே முருகன் அருள்புரிகிறார். அந்த சிம்ம வாகனமும், மயிலைத் தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம். 


ஆலய அமைப்பு :: 

ஆண்டார் குப்பம் அழகன் முருகன் கோவில் மிகவும் விசாலமாகவும் தனித்துவமான ஒரு கோவிலாகும். ராஜகோபுரம் முன்பு மிகவும் பிரம்மாண்டமான ஒரு மண்டபம் திகழ்கிறது. ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரம் மிகவும் அழகாக நேர்த்தியான கந்தபுரானத்தை விவரிக்கும் சுதை வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே வந்தால் ஆலயத்தின் கொடிமரம் மிகவும் அழகாக உயர்ந்து நிற்கிறது. அதனை அடுத்து பலிபீடம் காட்சிதருகின்றது. அதற்கு அடுத்தபடியாக சிம்மத்தையும் நாகத்தையும் தாங்கிய மயில் வாகனம் மிகவும் எழில் மிகு தோற்றத்தில் காட்சியளிக்கிறது. மயில்வாகனத்தை கடந்தால் 16 கால் மகாமண்டபம் மிகவும் நேர்த்தியாக வேலைப்பாடுகள் நிறைந்து காட்சிதருகின்றது. இந்த மகாமண்டபம் 1940களில் பொன்னேரி பகுதி பிள்ளைமார்கள் சிலரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 


16மண்டபத்தின் மேல்புற சுதை வேலைப்பாடு மூலவரின் சுதை உருவம்

 மகாமண்டபத்தில் வடமுகமாக தென்திசையை பார்த்தவாரு விசாலாட்சி அம்மாள் . உற்சவ மூர்த்திகள் ( வள்ளி தெய்வானை சமயத சுப்பிரமணியர் மற்றும் வள்ளி தெய்வானை சமயத சுப்பிரமணியர் ) மற்றும் சிவகாசி சமயத நடராஜர் காட்சி தருகின்றனர். மற்றும் மகாமண்டபத்தின் மையப்பகுதியில் பிரம்மாவை குறிக்கும் சின்னங்கள் பொரித்த நடுக்கல் வடிவில் முருகனை நோக்கியவாரு பிரம்மன் அருளுகிறார்.


மயில் வாகனம்


 இவர்களை மகாமண்டபத்தில் தரிசித்து கடந்தால் ஆர்த்த மண்டபத்தில் வலதுபுறமாக பிரசன்ன விநாயகரும் இடதுபுறமாக காசிவிசுவநாதர் அருளுகிறார். இவரை வழிபட்டு கடந்தால் மிகவும் நேர்த்தியாக நான்கரை அடியுயரத்தில் ஆதிகார தொனியில் முருகன் இடுப்பில் இருகையையும் வைத்துக்கொண்டு அருளுகிறார். முருகனுக்கு கீழே இருபுறமும் யானைகள்இருக்கின்றன. உடன் இரட்டை விளக்கும் ஏற்றப்பட்டு இருக்கின்றது. இந்த தலத்தின் தனித்துவ சிறப்பு. மிகவும் அழகா பராமரிக்க படவேண்டிய தொன்மையான பழங்கால அர்த்த மண்டத்தை புனரமைப்பு என்கின்ற பெயரில் முழுக்க முழுக்க சலவைக்கற்கள் பதித்து சேதப்படுத்தி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை. இந்த அர்த்த மண்டபக் கொடுங்கைகளில் முற்கால பாண்டியர்களின் அடையாளமான இரட்டை மீன் சின்னம் பொறிக்கப்பட்ட காட்சியை நம்மால் பார்க்கமுடியும். 
இந்த ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு ஆலயமாகும். முருகப்பெருமான் அருளும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்ட கருவரை இன்று அது கற்கோவிலா என்று நம்மை சந்தேகம் வரும் வகையில் கருங்கல் திருப்பணிகள் முழுக்க சிமெண்ட் கொண்டு பூச்சு வேலை செய்து புதிதாக கொஷ்ட மூர்த்திகளும் ஆலயத்தின் சுவற்றில் நிறுவி உள்ளது தமிழக இந்து சமய அற நிலையத்துறை .


ஏகதல விமானம்

மூலவர்,  சிவன் ,மற்றும் பிள்ளயார் விமான தரிசனம் 

 முருகப் பெருமானின் விமானமானது ஏகதல விமானம் என்று சொல்லப்படுகிறது. இந்த விமானத்தில் மிகவும் தத்ரூபமாக சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பார்ப்பவர்கள் மனதை கவரும் வகையில் விமானத்தின் சுதை வேலைப்பாடுகள் உள்ளது . ஆலயத்தின் சுற்றுப்பிரகார்த்தில் வடகிழக்கு மூலையில் கோவில் அலுவலகமும் வடமேற்கு மூலையில் வசந்த மண்டபமும் திகழ்கிறது. வசந்த மண்டபத்தின் அருகில் வாகக் கொட்டகையும் அமைந்துள்ளது தென்மேற்கு மூலையில் மடப்பள்ளி அமைந்துள்ளது. ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு வில்வ மரம் ,யாகசாலை மற்றும் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. 


ஆலய வரலாறு :: 

ஒருமுறை கைலாயம் வந்த பிரம்மன் அப்போது முருகப்பெருமானை காணாதவாரு கடந்து செல்ல முற்பட்டார் கர்வத்தோடு காணாதவாரு கடந்து சென்ற பிரம்மனை தடுத்த முருகன், நீர் யார்? " எனக் கேட்டான். அவரோ, நான் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருக்கும் பிரம்மதேவன்" என்றார். 




நடேசர், உற்சவர் , விசாலாட்சி விமானங்கள்

அவரது தோரணையையும், அகந்தையுடன் பதிலளித்த முறையையும் கண்டு முகம் சுளித்த முருகன், பிரம்மனுக்கு பாடம் புகட்ட எண்ணினார். சரி எதை வைத்து படைப்புத் தொழிலை மேற்கொள்வீர்? எது உமக்கு அடிப்படை?" என்று கேட்டார். அதற்கு பிரம்மன், ஓம் எனும் பிரணவம்தான் அடிப்படை" என்றார். அப்படியெனில் அதன் பொருளை விளக்கிச் சோல்லும்" என்று வினவ, பொருள் தெரியாமல் பிரம்மன் விழித்தார். எனவே, முருகன் அவரைச் சிறை வைத்தான். மேலான பொறுப்புள்ளவன் தானே பிறரிடம் கேள்வி கேட்க முடியும்? எனவே, பிரம்மாவின் முன் அதிகார தோரணையில் தமது இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி, கேள்வி கேட்கிறார் முருகன் அத்தகைய அபூர்வ கோலத்தில் முருகப்பெருமான் இங்கு அருள் புரிகார் . பிரமனின் ஆணவத்தினை அழித்த அதிகார மூர்த்தியா இங்கு அருளுகிறார் கந்தவேல் பெருமான். பிரம்மனின் ஆணவத்தினை அழித்து ஆண்டதால் இந்த இடம் ஆண்டார் குப்பம் என்று அழைக்கப்படுகின்றது என்றும் சொல்லுகின்றனர். 
 
ஆலய விமான சுதை வேலைப்பாடுகள்


வள்ளி திருமணம் தெய்வானை திருணக்காட்சி 



   இந்த தலத்து முருகப்பெருமானை பிற்காலத்தில் ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனர். ஒரு முறை தலயாத்திரை மேற் கொண்டிருந்த வயதான சன்னியாசி ஒருவர், இந்தத் தலத்தில் தங்கினார். மாலை நேரம், புனித தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட எண்ணினார். அங்கேயிருந்த ஆண்டிகளிடம், நீராடும் துறை ஏதேனும் இங்கு உண்டோ?" எனக் கேட்டார். அதற்கு அவர்கள், இங்கே தீர்த்தம் ஏதுமில்லை" என்றனர். அப்போது, ஆண்டிக் கோலத்தில் அங்கே வந்த சிறுவன் ஒருவன், அந்த பக்தரிடம், ‘தாம் ஒரு தெப்பத்தைக் காட்டுவதாக’க் கூறி அழைத்துச் சென்றான். ஓரிடத்தில் தான் கையில் வைத்திருந்த வேலால் நிலத்தைக் கீற, அங்கே தீர்த்தம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடியது . சன்னியாசி பக்தருக்கோ ஆச்சரியம். அதில் நீராடி நிமிர்ந்து பார்த்தால், கையில் வேலோடு முருகப்பெருமான் குழந்தை வேலனாக காட்சி நல்கினார். ஆண்டிகள் ஒன்றாக கூடி தங்கி வழிபட்டதால் இந்த தலம் ஆண்டியர் குப்பம் என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது ஆண்டார் குப்பம் என்று மருவியது என்று சொல்லப்படுகிறது .




ஆலயம் செல்லும் வழி :: 

சென்னை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பொன்னேரிக்கு செல்லும் வழியில் உள்ளது ஆண்டார்குப்பம். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டு ரோடு வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, ஆண்டார்குப்பம். தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது ஆண்டார்குப்பம். செங்குன்றத்தில் (Red Hills) இருந்து 10 கி.மீ. பயண தூரத்திலும் இத்தலத்தை அடையலாம். செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி செல்லும் பேருந்துகள் இந்த ஆலயத்திற்கு செல்லும் நுழைவாயில் அருகில் நின்று செல்லும் . 558 மற்றும் 592 ஆகிய மாநகர பேருந்துகளில் இவாலயத்தை அடையாளம். 




 தரிசன நேரம் மற்றும் பூசைகள் ::: 

காலை 6 மணி முதல் 12.30 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை. இங்கு சைவ ஆகவிதிகளின் படி காமிக மூறையில் மூன்றுகால பூசை நிகழ்கின்றது. இந்த தலத்தின் தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் முருகன் தன் அடியவருக்காக வேலால் பூமியில் குத்தி உருவாக்கிய தீர்த்தம் ஆலயத்துக்கு எதிரில் உள்ளது. திருவிழா::: இந்த தலத்தில் பிரதான விழா சித்திரை பிரம்மோற்ஸவம் 12 நாட்கள். சித்திரை உற்சவத்தின் ஐந்தாம் நாளில் இரவு தெய்வானை திருமணம் , ஆறாம் நாள் இரவு வித்திரமான காட்சிதரும் யானையில் பவனி , ஒன்பதாம் நாளில் இரவு வள்ளி திருமணம் , பத்தாம் நாள் காலை தீர்த்தவாரி உற்சவம் மிகவும் சிறப்பான விழாக்கள் கார்த்திகை மாத குமார சஷ்டியின்போது ஆறு தினங்களுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், தை கிருத்திகை , பங்குனி உத்திரம் , தமிழ் வருடப்பிறப்பு ஆகியவை விசேஷ நாட்கள். செவ்வாய் , வெள்ளி , மாதகார்த்திகை ,சஷ்டி , தமிழ் மாதபிறப்பு ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகளும் நிகழ்கின்றன. 

 தலத்து பதிகம் ::: 

அச்சாய் இறுக்காணி காட்டிக் கடைந்த
     செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்களைப்
         போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து உறவாடி

அத்தான் எனக்காசை கூட்டித் தயங்க
     வைத்தாயெனப் பேசி மூக்கைச் சொறிந்து
          அக்கால் ஒருக்காலம் ஏக்கற்றுறிருந்திர் இலை ஆசை

வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள்
     ஒப்பார் உனக்கீடு பார்க்கில் கடம்பன்
          மட்டோ எனப்பாரின் மூர்க்கத்தனங்கள் அதனாலே

மைப்பாகு எனக் கூறி வீட்டிற் கொணர்ந்து
     புல்பாயலில் காலம் வீற்றுக் கலந்து
          வைப்பார் தமக்காசையால் பித்தளைந்து திரிவேனோ

எச்சாய் மருட்பாடு மேற்பட்டிருந்த
     பிச்சு ஆசருக்கு ஓதி கோட்டைக் கிலங்க
          மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே

எட்டாம் எழுத்தை ஏழையேற்குப் பகர்ந்த
     முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி
        எக்காலும் மக்காத சூர்க்கொத்து அரிந்த சினவேலா

தச்சா மயில் சேவலாக்கிப் பிளந்த
     சித்தா குறப்பாவை தாட்குள் படிந்து
          சக்காகி அப்பேடையாட்குப் புகுந்து மணமாகித்

தப்பாமல் இப் பூர்வ மேற்குத் தரங்கள்
     தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கிசைந்த
          தச்சூர் வடக்காகு மார்க்கத்தமர்ந்த பெருமாளே!!!


 இந்த தலம் மிகவும் ஒரு அபூர்வமான ஒரு முருகன் திருத்தலம் . நேரம் கிடைக்கும் போது தவறாது அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு தலம். பண்டரிபுரம் பாண்டுரங்கனை போல இங்கு முருகன் இடுப்பில் கைவைத்தபடி அருளும் எழிமிகு தலம் ஆண்டார்குப்பம்.

வேணும்
"
மலையாள தொட்டியத்து கருப்பர் துணை "

------ஆ.தெக்கூர். இராம.நா.இராமு இராமநாதன்
 
 

Friday, 24 March 2017

கோனே பால்ஸ் என்ற கைலாச கோனே



  சென்ற வார இறுதி பயணத்தில் கண்டவற்றின் தொகுப்பு. கோனே நீர்வீழ்ச்சி தமிழக எல்லையில் புத்தூர்க்கு அருகில் அமைந்துள்ள ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத் தலம். சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. குடும்பத்துடனும் நண்பர்களுடன் ஒருநாள் சுற்றுலா பயணமாக வந்து பொழுதுதை போக்க மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக இந்த இடம் திகழ்கிறது. அது மட்டும் இல்லாது இது சுற்றுலாத் தலமாக பலருக்கு திகழ்ந்தாலும் இது ஒரு ஆன்மிக தலமாகவும் திகழ்கிறது. வருடம் முழுவதும் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டிக் கொண்டே இருக்கும் என்பது இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சமாகும் .

கைலாச கோனே அருவி

கைலாச கோனே அருவிக்கு செல்லும் வழி 

இந்த நீர்வீழ்ச்சியில் நீர் இயற்கையாகவே வனப்பகுதியில் இருந்து 100 முதல் 120 அடி உயரத்தில் இருந்து அழகாக விழுகிறது. மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் நீர்வீழ்ச்சியில் விழும் நீர் தூரத்தில் இருந்து பார்க்க சிறிதாக இருந்தாலும் சற்று அருகில் சென்று பார்த்தால் நீர்வீழ்ச்சி புத்துணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் பாதுகாப்பான வகையில் உள்ளது .

அருவிக்கு செல்லும் வழியில் உள்ள புத்துக் கோவில்


கைலாச கோனே அருவியும் குகைக்கோவிலும்


கோனே அருவியின் மறுபக்கம் ::

 கோனே நீர்வீழ்ச்சி பலருக்கு சுற்றுலாத் தலமாகத்தான் தெரியும் இதற்கு மற்றொரு முகம் உண்டு.இது பலருக்கு தெரியாத ஒன்றாகும். திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு பத்மாவதிக்குமான திருமணம் புத்தூருக்கு அருகில் நாராயணவனம் என்னும் இடத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது . இந்த திருமணத்தை சிவபெருமானே தலைமையெற்று நடத்தியதாக நம்பப்படுகிறது. அப்படி நாராயண வனத்தில் திருமணம் நடத்திவைக்க வந்த சிவபெருமான் கையிலாயத்துக்கு நிகராக ஒரு இடத்தை தான் தங்கி தேடியபோது ஈசன் இந்த இடத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கியதாக நம்பப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை இந்த பகுதி மக்கள் கைலாச கோனே நீர்வீழ்ச்சி என்றே பரவலாக அழைக்கப்படுகின்றது . இந்த இடம் கைலாயத்துக்கு ஒப்பான ஒரு இடமாகவே இங்கு உள்ள மக்கள் நம்புகின்றனர்.

காஞ்சி விசுவநாத சுவாமிகள் ஜிவசமாதிக்கு செல்லும் வழி எங்கள் பயணத்தில் மேலே செல்லும் வழி அடைக்கப்பட்டிருந்தது
 கையிலாச கோனே அருவிப் பகுதியில் ஒரு சித்தரின் ஜீவசமாதி ஒன்றும் அமைந்துள்ளது . இந்த ஜீவசமாதி பகுதியில் ஒவ்வொரு முழு நிலவு நாளில் வால் நட்சத்திரமாக சித்தர் காட்சி  தருவதாகவும் நம்பப்படுகிறது . இதை காண பக்தர்கள் பலரும் கூடி இரவு கூட்டு வழிபாடு செய்கின்றனர் . முழுநிலவு நாளில் இங்கு வந்து சென்றால் எண்ணங்கள் ஈடேருவதாவும் நம்பப்படுகிறது.

காஞ்சி விசுவநாத சுவாமிகள் தவம் செய்த குகை
 காஞ்சிபுரத்தை சேர்ந்த விசுவநாத சுவாமிகள் என்பவர் காஞ்சி காமாட்சியின் அருளால் இந்த இடத்திற்கு வந்து தவவாழ்வை மேற்கொண்டு ஜீவ சமாதியாகியுள்ளார். விசுவநாத சுவாமிகள் தவம் செய்த குகை ஒன்றும் இங்கு அருவிக்கு அருகில் உள்ளது இந்த இடத்தை ஒரு நாகம் காவல் புரிவதாகவும் நம்பப்படுகிறது. குகைக்கு மேல் புரத்தில் தான் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோனே அருவியின் நீர் மருத்துவ குணம் கொண்டதாகவும் தாது சத்து நிறைந்த ஒரு புனித நீராகவும் இந்தபகுதி மக்களால் நம்பப்படுகிறது. சில நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதாகவும் நம்ம்பிகை உள்ளது. காஞ்சி மகாபெரியவா இந்த இடத்தில் பலமுறை வந்து தவம் செய்தார் என்றும் சொல்லுகின்றனர்.

அறிவிப்பு பலகை
     இந்த நீர்வீழ்ச்சிக்கு மிக மிக அருகிலேயே சிவபெருமான் பார்வதி தேவி உடனும் மற்றும் பரிவார தேவதைகள் சிலா ரூபங்கள் அருவிக்கு அருகில் உள்ள குகையில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. தெய்வங்களுக்கு இரண்டு கால பூசை சிறப்பாக நிகழ்கிறது.

அருவிக்கு அருகில் உள்ள இறை உருவங்கள்
அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ளசிவன் மற்றும் பார்வதி
கையிலாச கோனே அருவிப் பகுதியில் மது மாசிமகம் மற்றும் போதை வஸ்து பொருட்களை வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறையினர் அருவிப்பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். கோனே அருவிப் பகுதியில் அடிவாரத்தில் உள்ளூர் மக்களின் கடைகள் நிறைய அமைத்து உள்ளனர் இங்கு ஆயில் மசாசுகளும் செய்கின்றனர் மேலும் சுற்றுலாப்பயணிகள் தேவைக்கு இனங்க நாட்டுக் கோழி சமைத்து தருகின்றனர் .

அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ள அம்மன்

அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ள
அருவிக்கு செல்வதற்கு முன் ஆர்டர் செய்துவிட்டு முன்பணம் செலுத்திவிட்டு சென்றால் சிறந்த முறையில் சமைத்து தருகின்றனர் உள்ளூர் வாசிகள்.


அருவிக்கு செல்ல காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அருவியில் நீராட சுற்றுலாத் துறையினர் அனுமதிக்கின்றனர். கையிலாச கோனே நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. புத்தூரில் இருந்து 10 கிமீக்கு உள்ளது. கையிலாச கோனே நீர்வீழ்ச்சி

------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்..

Wednesday, 22 March 2017

நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில்

நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில் தமிழக எல்லையோரத்தில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம். தமிழகம் பறிகொடுத்த எல்லை பகுதியில் இந்த நாகலாபுரமும் ஒன்று. திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக இத்தலத்தில் காட்சிதருவது இத்தலத்தின் சிறப்பாகும். இங்கு எழுந்தருளி இருக்கும்      
  


ஆலய விமானம்

ஸ்ரீ தேவி பூதேவி சமயத வேத நாராயண சுவாமி சுதை சிற்பம்

  எம்பெருமானின் திருப்பெயர் :: வேத நாராயணப் பெருமாள்
 தாயார் திருப்பெயர் :: வேதவல்லித்தாயர் 

 ஆலய அமைப்பு :: 

இந்த திருகோவில் விஜய நகர மன்னர் கிருஷ் தேவராயரால் நிறுவப்பட்ட ஆலயமாக சொல்லப்படுகிறது. திருகோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக காணப்படுகிறது .தெலுங்கு கல்வெட்டுகளும் அங்காங்கே காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயன் தன் தாயார் நினைவாக இந்த கோவிலையும் ஊரையும் உருவாக்கி தனது தாயாரின் பெயரான நாகலா தேவி எனபதனையே நாகலாபுரம் என்று சூட்டினார் . இக்கோயிலின் சிறப்பு வேத நாராயணப் பெருமாள் மேற்கு திருக்காட்சி நல்குகின்றார். வேதவல்லி தாயார் கிழக்கு நோக்கி அருளுகிறார். திருக்கோயில் நான்கு புறமும் ராஜகோபுரம் மிகவும் பிரம்மாண்டமான காட்சி தருகிறது. அதனையடுத்து ஆலயத்தின் இரண்டாம் பிரகார ராஜ கோபுரத்தை கடந்தால் ஆலயத்தின் கொடிமரம் , பலிபீடம் , கருடாழ்வார் மேற்கு நோக்கி அருளுகிறார்கள் .அதனை தொடர்ந்து மூன்றாவது ராஜ கோபுரத்தை கடந்தால் ஷேத்தரபாலகர் மற்றும் தும்பிக்கையாழ்வார் அர்த்த மண்டப முகப்பில் அருளுகிறார்கள் மற்றும் உள்ளே பணித்தால் ஜெயன் விஜயன் காட்சி தருகிறார்கள். இவர்களை கடந்தால் உள்ளே கருவறையில் சங்கு சக்கரம் அபய வரத ஹஸ்தத்துடன் மச்சவடியில் வேத நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக காட்சிதருகிறார் . மேலும் ஆலயத்தின் இரண்டாம் பிறகாரத்தில் பிரம்மோற்சவ வாகனங்கள் வருசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் தென்கிழக்கு மூலையில் பக்த ஆஞ்சநேயர் திருக்காட்சி தருகிறார். மற்றும் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் வேதவல்லி தாயார் அருளாட்சி நல்குகின்றார். மேலும் இங்கு லக்‌ஷ்மி நரசிம்மர் , வீர ஆஞ்சநேயர் , பக்தஆஞ்சநேயர் , இராமர் லட்சுமணன் சீதை தனி சன்னதி கொண்டு அருளுகின்றனர். 

 
அறநிலையத்துறை அறிவுப்பு பலகை 



ஆலய தோற்றம்

ஆடல் மகளிர் கிழக்கு ராஜகோபுர வாயிலில்

சிற்ப வேலைப்பாடு ஆலய வாயில் படியின் முகப்பில் 

ஆலயத்தின் தோற்றம் 



ஆலயத்தின் கோபுரத்தின் திருமகள் புடைப்பு சிறப்பும் தமிழக அறநிலையத்துறைக்கு நிகராகவே பராமரிப்பு வேலையை செய்கின்றன 
 
சிதைந்தைத நிலையில் விமானத்தின் மேல் தளத்தில் உள்ள நவகரக சக்கரம் 

தல வரலாறு:: 

மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன்மையான அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.



 நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. 

பலிபீடம் கொடிமரம் மற்றும் கருடாழ்வார் 

பெருமாள் சன்னதிக்கு

திருச்சுற்று

ஆலயப் பெருவிழா ::

 1. இத்திருக்கோயில் பிரம்மோற்சவம் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் மிகவும் சிறப்பாக நிகழ்கிறது .
 2. பங்குனி மாதம் வளர்பிறையில் ( சுக்லபட்சம் ) மூன்று நாட்கள் துவாதசி திரயோதசி சதுர்த்தி ஆகிய திதிகளில் மாலையில் சூரியன் பெருமாளை வழிபடுவதாக ஐதிகம். முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தை தொட்டு வழிபடுகின்றார் .அதை தொடர்ந்து இரண்டாம் நாள் சூரியன் பெருமாளின் திருமார்பை வழிபடுகின்றனர் .மூன்றாம் நாள் பெருமாளின் தலைப்பகுதியை ஒளிக் கதிர்களால் வழிபடுவது சிறப்பு. அதனை தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் இரவு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 

யானைகளின் சிற்பம் ஆலயத்தின் வடகிழக்கு பகுதி திருச்சுற்றில்

ஆலயத்தின் தென்பகுதி திருச்சுற்று

 3.மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா 
 4. தைமாதப் பிறப்பு ( மகர சங்கராந்தி ) மற்றும் ரதசப்தமி
 5.தெலுங்கு வருடப்பிறப்பு .

வேதவல்லி தாயார் சன்னதி

தெற்கு ராஜகோபுரம் அடைக்கப்பட்ட நிலையில்

 பூசை நேரம் :: 

இத்திருக்கோயில் நித்திய பூசையானது ஆறு காலமும் தொய்வின்றி சிறப்பாக நிகழ்கிறது. காலையில் 6.00 முதல் மதியம் 1.00 வரையும் மாலை 4.00 முதல் இரவு 8.00 திறந்திருக்கும். வேத நாராயண பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் 8.00மணியளவில் சிறப்பாக திருமஞ்சனம் நிகழ்கிறது. மற்றும் வேதவல்லி தாயாருக்கு வெள்ளி கிழமை காலை 8.00 மணிக்கு நிகழ்கிறது. இத்திருக்கோயில் திருமலைத் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாடில் செயல்படுகிறது. தற்போது ஆலயத்தின் பராமரிப்பு பணி நிகழ்ந்து வருகிறது . 

------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்

Sunday, 30 November 2014

கடற்கரையில் விந்தையா மாந்தர்கள்







 சென்னையின் முக்கியமான ஒரு பகுதியின்  வழியாக வாரத்தின் தொடக்க நாளான ஞாயிறு அன்று காலையில்  என் நண்பனுடன் ஈருருளியில் (பைக் ) துரைபாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கும் செல்லும் பயணத்தின் பொது சில காட்சிகள் மனதிலும் பதிந்து நின்றது . உலகின் மிக நீளமான கடற்கரையில் நம் மெரீனா கடற்கரை13கீமீ கொண்ட ஒரு கடற்கரை .உலகின் இரண்டாவது நீளமான கடற்க்கரை. சென்னையின் முக்கியமான அடையாளங்களில் இந்த பகுதியும் ஒன்று . மெரினா கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்து நாம் காணமுடியும் .தலைமைச்செயலகம் முதல் கலங்கரைவிளக்கம் வரை பயணத்தில் பொது  காலையில் கடந்தபோது இருருளியை வேகமாக ஒட்டாமல் மெதுவாக மெரினாவை கடந்தோம் .

 நடைமேடைகளில்ஆண் பெண் என்றுவேறுபாடுகள் இல்லமால் முதியோர்கள் , இளைஞர்கள் ,குழந்தைகள் என்று வேறுபாடுகள் கடந்தும் மக்கள் குழுமியிருந்தார்கள், தொளதொளவென பருத்தியுடைகள் அணிந்தும் , விளையாட்டு சீருடைகள் , முக்கால்ச்சட்டை ,கால்சட்டை போன்ற ஆடைகளில் , ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து காதுகளில் ஹீட்செட் போட்டுகொண்டு நடைபயிற்சி செய்கின்றனர் சிலர் தங்கள் செல்ப்பிராணிகளுடன் நடைபயிற்சியும் செய்த்கின்றனர் .சிலர் கைகளை முன்னுக்கும் பின்னுக்கும் வேகமாக வீசக் கொண்டு நடந்தனர் .மற்றும் சிலர் கைகளை சுழற்றிய படியும் நடந்தனர் . வெவ்வேறு விதமாக மக்கள் நடைபயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள்.

இந்த சலசலப்புக்கும் மத்தியில் சிலர் வானமே கூரையாக கொண்டு கடல்காற்றையே தங்களின் வீட்டு குளிர்சாதனமாக காற்றுக் கருவியாக கொண்டு போர்வையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கும் சாமானியர்களும் உள்ளனர் . மேலும் சில முதியவர்களும் ஆங்காங்கே எடை கருவியை வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிழலில் ஓரமாக அமர்ந்துகொண்டு இருந்தார்கள்.

கடற்கரை ஓரம் மணல்பரப்புகளில் ஆடவர்களும் யுவதிகளும் தனித்தனியாக ஆங்காங்கே கடற்கரை கைபந்து (பீச் வாலிபால் ) மிகுந்த கரகோசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள் .சற்றுதொலைவில்புரவிகளின் மீது காவல்த்துறையினரின் குதிரைபடியினர் ஆங்காங்கைங்கே புரவியில் மீது  உலாவி கண்காணிப்பில் இடுபட்டு கொண்டிருந்தனர் .சிலர்விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படும் மிதிவண்டிகள் ஓட்டி பயிற்சி செய்துகொண்டிருந்தனர் .மேலும் சிலர் குழுவாக நின்று குலுங்கி குலுங்கி சதம்மாக சிரித்து கொண்டிருந்தனர் .அதன் பெயர் சிரிப்பு யோகாவாம் (லாபிங் தெரபி ) என்று இதுபோன்றும் ஆங்காங்கே செய்து கொண்டிருந்தனர்

மேலும் சிலர்  கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் காட்சி (ஸ்கேட்டிங் )சாலையின் ஓரத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தனர் .மக்கள் சற்றுநகர்ந்த பொது அங்கு ஒரு தள்ளுவண்டியில் கத்தாளை சாறு , அருகம்புல் சாறு மற்றும் பல இயற்கை மூலிகை சாறுகள் கண்முன்னே தயாரித்து குறைந்த விலைக்கும் தருகிறார்கள். உடன் அருகில் பச்சை தேநீர் , மூலிகை பொடிகள் விற்பனையகம் இதுபோன்ற கடைகள் அங்காங்கே கடற்கரை சாலையோரம் இருந்தன .

மேற்கொண்டு பயணத்தின் பொது சில யுவதிகளும் ஆடவர்களும் கடற்க்கரை மணலில் சிலம்பு பயிற்சிகள் செய்து கொண்டிருந்தனர் . சற்று தொலைவில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள் .அதன் சற்று தொலைவில் கபடி பயற்சியும் நடந்துகொண்டிருந்தது  மேலும் சிலர் மணற்பரப்பில் விரிப்பு விரித்து அதன் மேல் யோகாசன பயற்சியும் செய்துகொண்டிருந்தனர் .
கடற்கரை ஓரத்தில்

கடற்கரை சாலையோரம் பல ஈருருளிகள் , மகிழுந்துகள் என்று பல வாகனங்களில் மக்கள் வந்தும் போனதுமாக இருகின்றனர் .இப்படி பலதரப்பட்ட மனிதர்கள் ஒரு கடற்கரை ஓரமாக பலதரப்பட்ட மக்கள் தங்கள் உடல்நலத்தை பேணவும் தங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவும் இங்கு  இந்த 6 கிலோமீட்டர் பரப்பலவும் கொண்ட கடற்கரை சாலையோர பகுதியை பயன்படுத்துகின்றனர் .என் பயணத்தில் ஈருருளியை வேகமாக செலுத்தி இருந்தால் நாங்கள் அந்த பகுதியை விரைவாக கடந்து சென்றிருப்போம் . ஆனால் தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை வண்டியை மெதுவாக செலுத்தி வாடைகாற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்தபடி பொறுமையாக வித்தியாசமான மனிதர்களின் செய்கைகளை கண்டு ரசித்தபடி நிதானமாக இருபது நிமிடம் பொறுமையாக பயணித்தோம் .ஆரவாரமான இந்த சென்னையில் இப்படியும் தங்களை பேணி பாதுகாத்துக் கொள்ள இத்தனை ஆயிரம் மக்கள் இங்கு குழுமுகிறாகள் காலை 5 மணிக்கு தொடங்கி   9 மணிக்கு குள் இந்த ஆரவாரம் அடங்கி விடுகிறது .எனது பயணதில் 7.30மணியளவில் நான் கடந்த பொது இவற்றை கண்டு ரசிக்க நேர்ந்தது .

கலங்கரைவிளக்கம்
                                                                  ---- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு