Saturday 15 April 2017

ஆண்டார்குப்பம் அழகன்



சென்னை புறநகர் பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள திருப்புகழ் பாடல் பெற்ற தளங்களில் இந்த ஆண்டார் குப்பம் முருகன் தலமும் ஒன்று. தொண்டைநாட்டு திருப்புகழ் பாடல் பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலின் சிறப்பு மூலவர் பால சுப்பிரமணியர் அதிகாலையில் பாலகனாகவும், மதியம் வாலிபக் கோலத்திலும், மாலை வயோதிகக் கோலத்திலும் திருக்காட்சி அளித்து அருளுகிறார். மேலும் இங்கு முருகப்பெருமான் தனித்து இருக்கிறார். வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிக்காது தனித்தும் இருகரங்களுடன் வேல் , கோழிக் கொடி ,வில் , அம்பு , வஜ்ராயுதம் ,அக்கமாலை என்று ஏதும் இல்லாது அதிகார நிலையில் இடுப்பில் கைவத்துக் கொண்டு அருளுகிறார். 



 ஆலய சிறப்பு :: 

இத்தலத்திற்க்கு வந்து முருகனை வழிபட்டால் வேலை வாய்ப்புகள், உயர் பதவிகள் வந்துசேறும். 

முருகப்பெருமான் இருகரத்துடன் அதிகார தோனியில் அயுதமின்றி பக்கமிரு யானைகள் இருக்க அருளுகிறார்.

 
ஆலயம்  செல்லும்  நுழைவாயில்


ஆலயத் தோற்றம்


அருணகிரிநாதர் இந்த முருகன் மீது ஒரு திருப்புகழ் பாடல் பாடித்தொழுது உள்ளார். 

மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரில், நடுகல் அமைப்பில் பிரம்மனின் அம்சமான தாமரை ,ஏடு, அக்கமாலை பொரித்த நடுக்கல் திகழ்கிறது; அதில் பிரம்மதேவன் எக்காலமும் தனக்கு ஆணவம் தலை தூக்கக்கூடாது எனும் பிரார்த்தனையுடன் முருகனை தியானித்து கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. 

முன் மண்டபம் 




ராஜகோபுரம்

முருகப்பெருமான் மயில் வாகனம் இங்கு சற்று வித்தியாசமாக உள்ளது. மயிலுடன் சிம்ம வாகனமும் இணைந்து உள்ளது. அம்பிகைக்குரிய வாகனம் சிம்மம். தன் அன்னைக்கு உரிய வாகனத்துடன், இங்கே முருகன் அருள்புரிகிறார். அந்த சிம்ம வாகனமும், மயிலைத் தாங்கியபடி உள்ளது சிறப்பம்சம். 


ஆலய அமைப்பு :: 

ஆண்டார் குப்பம் அழகன் முருகன் கோவில் மிகவும் விசாலமாகவும் தனித்துவமான ஒரு கோவிலாகும். ராஜகோபுரம் முன்பு மிகவும் பிரம்மாண்டமான ஒரு மண்டபம் திகழ்கிறது. ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரம் மிகவும் அழகாக நேர்த்தியான கந்தபுரானத்தை விவரிக்கும் சுதை வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகின்றது. ராஜகோபுரத்தை கடந்து உள்ளே வந்தால் ஆலயத்தின் கொடிமரம் மிகவும் அழகாக உயர்ந்து நிற்கிறது. அதனை அடுத்து பலிபீடம் காட்சிதருகின்றது. அதற்கு அடுத்தபடியாக சிம்மத்தையும் நாகத்தையும் தாங்கிய மயில் வாகனம் மிகவும் எழில் மிகு தோற்றத்தில் காட்சியளிக்கிறது. மயில்வாகனத்தை கடந்தால் 16 கால் மகாமண்டபம் மிகவும் நேர்த்தியாக வேலைப்பாடுகள் நிறைந்து காட்சிதருகின்றது. இந்த மகாமண்டபம் 1940களில் பொன்னேரி பகுதி பிள்ளைமார்கள் சிலரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 


16மண்டபத்தின் மேல்புற சுதை வேலைப்பாடு மூலவரின் சுதை உருவம்

 மகாமண்டபத்தில் வடமுகமாக தென்திசையை பார்த்தவாரு விசாலாட்சி அம்மாள் . உற்சவ மூர்த்திகள் ( வள்ளி தெய்வானை சமயத சுப்பிரமணியர் மற்றும் வள்ளி தெய்வானை சமயத சுப்பிரமணியர் ) மற்றும் சிவகாசி சமயத நடராஜர் காட்சி தருகின்றனர். மற்றும் மகாமண்டபத்தின் மையப்பகுதியில் பிரம்மாவை குறிக்கும் சின்னங்கள் பொரித்த நடுக்கல் வடிவில் முருகனை நோக்கியவாரு பிரம்மன் அருளுகிறார்.


மயில் வாகனம்


 இவர்களை மகாமண்டபத்தில் தரிசித்து கடந்தால் ஆர்த்த மண்டபத்தில் வலதுபுறமாக பிரசன்ன விநாயகரும் இடதுபுறமாக காசிவிசுவநாதர் அருளுகிறார். இவரை வழிபட்டு கடந்தால் மிகவும் நேர்த்தியாக நான்கரை அடியுயரத்தில் ஆதிகார தொனியில் முருகன் இடுப்பில் இருகையையும் வைத்துக்கொண்டு அருளுகிறார். முருகனுக்கு கீழே இருபுறமும் யானைகள்இருக்கின்றன. உடன் இரட்டை விளக்கும் ஏற்றப்பட்டு இருக்கின்றது. இந்த தலத்தின் தனித்துவ சிறப்பு. மிகவும் அழகா பராமரிக்க படவேண்டிய தொன்மையான பழங்கால அர்த்த மண்டத்தை புனரமைப்பு என்கின்ற பெயரில் முழுக்க முழுக்க சலவைக்கற்கள் பதித்து சேதப்படுத்தி உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை. இந்த அர்த்த மண்டபக் கொடுங்கைகளில் முற்கால பாண்டியர்களின் அடையாளமான இரட்டை மீன் சின்னம் பொறிக்கப்பட்ட காட்சியை நம்மால் பார்க்கமுடியும். 
இந்த ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த ஒரு ஆலயமாகும். முருகப்பெருமான் அருளும் கருங்கல் திருப்பணி செய்யப்பட்ட கருவரை இன்று அது கற்கோவிலா என்று நம்மை சந்தேகம் வரும் வகையில் கருங்கல் திருப்பணிகள் முழுக்க சிமெண்ட் கொண்டு பூச்சு வேலை செய்து புதிதாக கொஷ்ட மூர்த்திகளும் ஆலயத்தின் சுவற்றில் நிறுவி உள்ளது தமிழக இந்து சமய அற நிலையத்துறை .


ஏகதல விமானம்

மூலவர்,  சிவன் ,மற்றும் பிள்ளயார் விமான தரிசனம் 

 முருகப் பெருமானின் விமானமானது ஏகதல விமானம் என்று சொல்லப்படுகிறது. இந்த விமானத்தில் மிகவும் தத்ரூபமாக சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பார்ப்பவர்கள் மனதை கவரும் வகையில் விமானத்தின் சுதை வேலைப்பாடுகள் உள்ளது . ஆலயத்தின் சுற்றுப்பிரகார்த்தில் வடகிழக்கு மூலையில் கோவில் அலுவலகமும் வடமேற்கு மூலையில் வசந்த மண்டபமும் திகழ்கிறது. வசந்த மண்டபத்தின் அருகில் வாகக் கொட்டகையும் அமைந்துள்ளது தென்மேற்கு மூலையில் மடப்பள்ளி அமைந்துள்ளது. ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் ஒரு வில்வ மரம் ,யாகசாலை மற்றும் நவக்கிரக சன்னதி அமைந்துள்ளது. 


ஆலய வரலாறு :: 

ஒருமுறை கைலாயம் வந்த பிரம்மன் அப்போது முருகப்பெருமானை காணாதவாரு கடந்து செல்ல முற்பட்டார் கர்வத்தோடு காணாதவாரு கடந்து சென்ற பிரம்மனை தடுத்த முருகன், நீர் யார்? " எனக் கேட்டான். அவரோ, நான் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருக்கும் பிரம்மதேவன்" என்றார். 




நடேசர், உற்சவர் , விசாலாட்சி விமானங்கள்

அவரது தோரணையையும், அகந்தையுடன் பதிலளித்த முறையையும் கண்டு முகம் சுளித்த முருகன், பிரம்மனுக்கு பாடம் புகட்ட எண்ணினார். சரி எதை வைத்து படைப்புத் தொழிலை மேற்கொள்வீர்? எது உமக்கு அடிப்படை?" என்று கேட்டார். அதற்கு பிரம்மன், ஓம் எனும் பிரணவம்தான் அடிப்படை" என்றார். அப்படியெனில் அதன் பொருளை விளக்கிச் சோல்லும்" என்று வினவ, பொருள் தெரியாமல் பிரம்மன் விழித்தார். எனவே, முருகன் அவரைச் சிறை வைத்தான். மேலான பொறுப்புள்ளவன் தானே பிறரிடம் கேள்வி கேட்க முடியும்? எனவே, பிரம்மாவின் முன் அதிகார தோரணையில் தமது இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி, கேள்வி கேட்கிறார் முருகன் அத்தகைய அபூர்வ கோலத்தில் முருகப்பெருமான் இங்கு அருள் புரிகார் . பிரமனின் ஆணவத்தினை அழித்த அதிகார மூர்த்தியா இங்கு அருளுகிறார் கந்தவேல் பெருமான். பிரம்மனின் ஆணவத்தினை அழித்து ஆண்டதால் இந்த இடம் ஆண்டார் குப்பம் என்று அழைக்கப்படுகின்றது என்றும் சொல்லுகின்றனர். 
 
ஆலய விமான சுதை வேலைப்பாடுகள்


வள்ளி திருமணம் தெய்வானை திருணக்காட்சி 



   இந்த தலத்து முருகப்பெருமானை பிற்காலத்தில் ஆண்டிகள் சிலர் வழிபட்டு வந்தனர். ஒரு முறை தலயாத்திரை மேற் கொண்டிருந்த வயதான சன்னியாசி ஒருவர், இந்தத் தலத்தில் தங்கினார். மாலை நேரம், புனித தீர்த்தத்தில் நீராடி முருகனை வழிபட எண்ணினார். அங்கேயிருந்த ஆண்டிகளிடம், நீராடும் துறை ஏதேனும் இங்கு உண்டோ?" எனக் கேட்டார். அதற்கு அவர்கள், இங்கே தீர்த்தம் ஏதுமில்லை" என்றனர். அப்போது, ஆண்டிக் கோலத்தில் அங்கே வந்த சிறுவன் ஒருவன், அந்த பக்தரிடம், ‘தாம் ஒரு தெப்பத்தைக் காட்டுவதாக’க் கூறி அழைத்துச் சென்றான். ஓரிடத்தில் தான் கையில் வைத்திருந்த வேலால் நிலத்தைக் கீற, அங்கே தீர்த்தம் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடியது . சன்னியாசி பக்தருக்கோ ஆச்சரியம். அதில் நீராடி நிமிர்ந்து பார்த்தால், கையில் வேலோடு முருகப்பெருமான் குழந்தை வேலனாக காட்சி நல்கினார். ஆண்டிகள் ஒன்றாக கூடி தங்கி வழிபட்டதால் இந்த தலம் ஆண்டியர் குப்பம் என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது ஆண்டார் குப்பம் என்று மருவியது என்று சொல்லப்படுகிறது .




ஆலயம் செல்லும் வழி :: 

சென்னை நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் பொன்னேரிக்கு செல்லும் வழியில் உள்ளது ஆண்டார்குப்பம். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டு ரோடு வழியாக பொன்னேரி செல்லும் வழியில் அமைந்துள்ளது, ஆண்டார்குப்பம். தச்சூர் கூட்டு ரோட்டில் இருந்து 2.5 கி.மீ தொலைவில் உள்ளது ஆண்டார்குப்பம். செங்குன்றத்தில் (Red Hills) இருந்து 10 கி.மீ. பயண தூரத்திலும் இத்தலத்தை அடையலாம். செங்குன்றத்தில் இருந்து பொன்னேரி செல்லும் பேருந்துகள் இந்த ஆலயத்திற்கு செல்லும் நுழைவாயில் அருகில் நின்று செல்லும் . 558 மற்றும் 592 ஆகிய மாநகர பேருந்துகளில் இவாலயத்தை அடையாளம். 




 தரிசன நேரம் மற்றும் பூசைகள் ::: 

காலை 6 மணி முதல் 12.30 வரை. மாலை 4 மணி முதல் 8 வரை. இங்கு சைவ ஆகவிதிகளின் படி காமிக மூறையில் மூன்றுகால பூசை நிகழ்கின்றது. இந்த தலத்தின் தீர்த்தம் வேலாயுத தீர்த்தம் முருகன் தன் அடியவருக்காக வேலால் பூமியில் குத்தி உருவாக்கிய தீர்த்தம் ஆலயத்துக்கு எதிரில் உள்ளது. திருவிழா::: இந்த தலத்தில் பிரதான விழா சித்திரை பிரம்மோற்ஸவம் 12 நாட்கள். சித்திரை உற்சவத்தின் ஐந்தாம் நாளில் இரவு தெய்வானை திருமணம் , ஆறாம் நாள் இரவு வித்திரமான காட்சிதரும் யானையில் பவனி , ஒன்பதாம் நாளில் இரவு வள்ளி திருமணம் , பத்தாம் நாள் காலை தீர்த்தவாரி உற்சவம் மிகவும் சிறப்பான விழாக்கள் கார்த்திகை மாத குமார சஷ்டியின்போது ஆறு தினங்களுக்கு லட்சார்ச்சனை நடக்கிறது. வைகாசி விசாகம், ஆடிக்கிருத்திகை, கந்த சஷ்டி, தைப்பூசம், தை கிருத்திகை , பங்குனி உத்திரம் , தமிழ் வருடப்பிறப்பு ஆகியவை விசேஷ நாட்கள். செவ்வாய் , வெள்ளி , மாதகார்த்திகை ,சஷ்டி , தமிழ் மாதபிறப்பு ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகளும் நிகழ்கின்றன. 

 தலத்து பதிகம் ::: 

அச்சாய் இறுக்காணி காட்டிக் கடைந்த
     செப்பார் முலைக்கோடு நீட்டிச் சரங்களைப்
         போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து உறவாடி

அத்தான் எனக்காசை கூட்டித் தயங்க
     வைத்தாயெனப் பேசி மூக்கைச் சொறிந்து
          அக்கால் ஒருக்காலம் ஏக்கற்றுறிருந்திர் இலை ஆசை

வைச்சாய் எடுப்பான பேச்சுக்கு இடங்கள்
     ஒப்பார் உனக்கீடு பார்க்கில் கடம்பன்
          மட்டோ எனப்பாரின் மூர்க்கத்தனங்கள் அதனாலே

மைப்பாகு எனக் கூறி வீட்டிற் கொணர்ந்து
     புல்பாயலில் காலம் வீற்றுக் கலந்து
          வைப்பார் தமக்காசையால் பித்தளைந்து திரிவேனோ

எச்சாய் மருட்பாடு மேற்பட்டிருந்த
     பிச்சு ஆசருக்கு ஓதி கோட்டைக் கிலங்க
          மிக்கா நினைப்போர்கள் வீக்கில் பொருந்தி நிலையாயே

எட்டாம் எழுத்தை ஏழையேற்குப் பகர்ந்த
     முத்தா வலுப்பான போர்க்குள் தொடங்கி
        எக்காலும் மக்காத சூர்க்கொத்து அரிந்த சினவேலா

தச்சா மயில் சேவலாக்கிப் பிளந்த
     சித்தா குறப்பாவை தாட்குள் படிந்து
          சக்காகி அப்பேடையாட்குப் புகுந்து மணமாகித்

தப்பாமல் இப் பூர்வ மேற்குத் தரங்கள்
     தெற்காகும் இப்பாரில் கீர்த்திக்கிசைந்த
          தச்சூர் வடக்காகு மார்க்கத்தமர்ந்த பெருமாளே!!!


 இந்த தலம் மிகவும் ஒரு அபூர்வமான ஒரு முருகன் திருத்தலம் . நேரம் கிடைக்கும் போது தவறாது அனைவரும் பார்க்கவேண்டிய ஒரு தலம். பண்டரிபுரம் பாண்டுரங்கனை போல இங்கு முருகன் இடுப்பில் கைவைத்தபடி அருளும் எழிமிகு தலம் ஆண்டார்குப்பம்.

வேணும்
"
மலையாள தொட்டியத்து கருப்பர் துணை "

------ஆ.தெக்கூர். இராம.நா.இராமு இராமநாதன்
 
 

Monday 10 April 2017

சுயம்பு காரனேஷ்வரர் காரணி (சுருட்டபல்லி)

 சுருட்டப்பல்லி என்றது நினைவுகக்கு வருவது பள்ளிகொண்டேசுவரர் இந்த கோவிலில் இருந்து ஒரு இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் காரணி என்னும் கிராமத்தில் ஆரணி ஆற்றங்கரையில் உள்ள குன்றின்மீது அமைந்துள்ளது இந்த சுயம்பு காரனேசுவர் கோவில். மிகச்சிறிய குன்றின் மீது இந்த சுயம்பு காரனேசுவர் அருள் செய்கின்றார். வனத்துறைக்கு உட்படது இந்த குன்று . அரசு அனுமதியுடன் இந்த கோவில் தனியார் அமைப்பின் மூலம் இந்த கோவில் நிர்வகிக்கப் படுகின்றது. ஆந்திர பயணத்தின் போது பலமுறை இந்த குன்றுக்கோவிலை கடக்கும் போது எல்லாம் என்ன இருக்கும் சென்றுப் பார்க்கலாம் என்று தோன்றும் ஆனால் அதற்கு சரியான வாய்ப்பு கிட்டவில்லை. 







இந்த முறை தற்செயலாக எதிர்பாராத விதமாக இந்த வாய்ப்பு கிட்டியது. தற்போது இந்த கோவிலுக்கு வாகனங்கள் செல்ல சிமிண்ட் சாலை அமைக்கும் பணி கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து கொண்டு உள்ளது. மிகவும் அமைதியான அழகான ஒரு சிறிய கோவில் குன்றுப் பகுதியில் உள்ளது. 






குன்றின் மீது இருந்து பார்த்தால் மனதுக்கு மிகவும் ரம்மியமான காட்சிகளாக பச்சை புல்வெளிகள் தோப்புகள் ஆற்றுப்பகுதிகள் என்று ரம்மியமான காட்சிகளை காண மிகவும் இதமாக இருக்கும். குன்றின் மீது தகரக்கூடத்தினுள் சுயம்பு மூர்த்தியாக ஈசன் நந்தியுடன் எழுந்தருளி இருகின்றார். அருகில் செல்வகனபதி மற்றும் பாலமுருகனுடன் ஈசன் .கோவிலை சுற்றி தற்போது வில்வம் ,வேம்பு, தென்னை , வெள்ளெருக்கு , மா , பலா , முந்தரி வாழை என்று பலவகை மரங்கள் அங்காங்கே நடப்பட்டு சோலையாக்கும் பணியை ஒரு தோட்டக்காரரை பணியமர்த்தி செய்து வருகின்றனர் . மிகவும் சிறப்பாக தோட்டத்தையும் ஆலயப்பகுதியையும் பராமரித்து வருகிறார் அந்த பெரியவர்.






காரனேசுவருக்கு இரண்டு கால பூசை நிகழ்த்தப்படுகின்றன. காலை 8.30 இருந்து 9.30 க்குள் ஒரு கால பூசையும் மாலை 5 மணிக்கு மேல் 6மணிக்குள்ளும் இரண்டாம் கால பூசை நிகழ்ந்தப்படுகின்றது. பிரதோஷ வழிபாடும் இங்கு நிகழ்த்தப்படுகின்றது. இந்த கோவிலுக்கு பூசகர் ஊத்துக்கோட்டையில் இருந்து வந்து சொல்லுகின்றார் . இங்கு அம்பாள் சன்னதி இல்லை . 









ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் உள்ள முந்திரி மரத்தின் அடியில் சிரிய திருவடியாகிய அனுமன் உரைவதாக நம்பப்படுகிறது. சிலர் இந்த இடத்தில் அனுமன் உரைவதை உணர்ந்ததாக சொல்லப்படுகின்றது. அந்த முந்திரி மரத்து அடியில் எந்த ஒரு கருங்கல் சிலைகள் கிடையாது ஆனால் ஒரு சிறு அனுமனின் மண் பொம்மை மட்டும் உள்ளது. அவ்விடத்தில் விளக்கு மட்டும் ஏற்றி வழிபடுகின்றனர் மக்கள். 



 

அனுமன் உறையும் முந்திரி மரம்



சுருட்டப்பல்லி வழியாக உங்கள் பயணத்தின் போது தவராது இந்த ஈசனை வழிபட்டு சொல்லுங்கள் மிகவும் அருகையான அமைதியான ஒரு இடம் .

Friday 31 March 2017

தென்கிழக்கு ஆசியாவின் முதல் தண்டாயுதபாணி கோவில் :



தேனம்மை ஆச்சியின் சும்மா என்ற வலைப்பூவுக்கு எழுதிய ஒரு கிறுக்கல்:

நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் கொண்டுவிற்க சென்ற இடமெங்கும் ஏரகத்து முருகனின் திருக்கை வேலை கொண்டு சென்று நிறுவி வழிபடும் வழக்கம் கொண்டவர்கள். அதுபோல மலேயா மண்ணில் பினாங்கில் கி.பி. 1818ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொழில் துவங்கிய நகரத்தார்கள், பினாங்கு நீர்வீழ்ச்சி அருகில் 1800 வாக்கில் தோட்டத்தொழிலார்களாகவும் கூலிகளாகவும் வெள்ளையர்களால் குடியேற்றப்பட்ட தமிழர்கள் நீர்விழ்ச்சியை ஒட்டிய பகுதியில்  தாமிர வேல் ஒன்றை நிறுவிய வழிபட்டு வந்தனர். அதனை தொழில்துவங்க வந்த நகரத்தார்களும் நீர்விழ்ச்சி பகுதியில் வழிபட்டும் வந்தனர்.



     1850களில் நீர்விழ்ச்சி பகுதிகளில் வழிபட மக்கள் கூட்டம் அதிகரிப்பாலும் நீர்விழ்ச்சியின் இயற்கை சூழல் மாசுபடுவதை கண்ட பிரித்தானிய அரசு அருவிபகுதிக்கு செல்ல தடை விதித்து அந்த பகுதியை தாவரவியல் பூங்காவாக மாற்றியது. ஆங்கிலேய அரசு நீர்விழ்ச்சியில் அமைத்துள்ள முருகன் கோவிலுக்கு செல்ல தடை வித்தித்ததன் எதிரொலியாக நகரத்தார்கள் தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கு, 9-8-1850ல் பினாங்கு ஜீயார் டவுன் வீதியில் 138, எண் கொண்ட கோவில் வீட்டில்      ( கிட்டங்கியில் ) தண்டாயுதபாணியின் தங்க உற்சவ மூர்த்தியை நிறுவி வழிபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக பினாங்கு வாட்டர்பால் ரோட்டில் 1854ல் ஐந்து ஏக்கர் பரப்பளவு நிலம் ஒன்றை வாங்கி 12-12-1857ல் தண்ணீர்மலையானுக்கு ஆகம விதிப்படி ஆலயம் அமைத்து குடமுழுக்கு செய்து மகிழ்ந்தனர்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் பினாங்கு தண்டாயுதபாணி கோவிலின் அமைப்பு என்பது  , செட்டிநாட்டு நகரத்தார் கட்டிடக் கலைச்சாயலில் செட்டிநாட்டு  பகுதியை சேர்ந்த தமிழ் கம்மாளர்கள் (பெருந்தச்சர்கள்) கொண்டு மிகவும் நேர்த்தியாக உருவாக்கப்பட்ட ஆலயமாகும் . இக்கோயில் அமைப்பு முறை சொக்கட்டான் காய் ஆட்டக் கட்டம்போல கூட்டல் குறி அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அதனுள் பழநி மலையில் இருப்பதைப்போலதண்ணீர்மலையாண்டவன் நின்ற கோலத்தில் தங்கி இருக்கிறான். இந்த திருமேனியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அத்தனை கலையழகு கொண்ட திருமேனியாகும். இந்தக் கோவில் கருவறை அர்த்த மண்டபம் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் நந்தவனம், பின்புறம்தென்னந்தோப்பு என்று மிகவும் அழகுற திகழ்கிறது தண்ணீர்மலையான் ஆலயம்.

 

இக்கோவிலில் மிகவும் சிறப்புவாய்ந்தவர் தண்ணீர்மலையானேயாவார் . அதற்கு காரணம் தண்ணீர்மலைத் தண்டாயுதபாணியின் வலது தொடையின் மேல் அழகான மச்சம் ஒன்றுள்ளது.
மரகதம் பதித்தாற்போலத் திகழும் இந்த மச்சத்தை தண்ணீர்மலையானின் அளவற்ற அருட்சக்தியின் அடையாளமாகக் கருதுவர். நின்ற திருக்கோலத்தில் உள்ள திருமுருகப் பெருமானின் இத்திருவுருவம்
காண்பார் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர வல்லதாக அமைந்துள்ளது. இம்மலேசிய மண்ணின் பினாங்கு தீவில்  முருகப்
பெருமான் தண்ணீர்மலையிலே  தண்ணீர்மலையான் தண்டாயுதபாணியாக நின்ற கோலத்தில் அனைவருக்கும்
அருட்பிரசாதம் தந்து காத்து வருகின்றார். தென்கிழக்கு ஆசியாவில் பினாங்கில்தான் முதல் தண்டாயுதபாணி கோவில் அமைந்ததாக சிறப்பித்துச் சொல்லப்படுகிறது.

இக்கோவிலின் சிறப்பு அம்சம், மண்டபங்கள் முழுவதும் பர்மாவிலிருந்து தருவிக்கப்பெற்ற தேக்கு மரத்தில் தமிழ் கம்மாளர்கள் கைவண்ணத்தில் மிகவும் நேர்த்தியாக மிளிர்கிறது. மண்டப மேல் பகுதியில் தேக்கு மரப்பலகையின் மீது பாரத தேசத்து வரலாற்றுச் சித்திரங்கள், இயற்கை வர்ணத்தில் வடித்து இருக்கிறார்கள், அடுத்த கீழ் வரிசையில் கீழ் உலகப்புகழ்பெற்ற இந்தியச் சித்திரக் கலைஞர் இரவி வர்மாவின் அழகிய சித்திரங்கள் கோவில் முழுதும்வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தின் அழகை காண ஒருநாள் போதாது.

 

நகரத்தார்கள் முருகப்பெருமானை என் துறவுக் கோலத்தில் அமைத்து வழிபட்டார்கள் என்பதற்கு நல்ல கருத்துக்களும் நம்மிடையே உண்டு.

"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு" என்று ஔவையின் முதுமொழிக்கு ஏற்ப நம் நகரத்தார்கள் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்பொழுது தங்கள் குடும்பத்தினை விட்டு தனியாகவே சென்று வரும் வழக்கமிருந்ததாலும், தொழில்துறை நடத்தி வாழும் பொழுது மனம் சலனமடையாமல் இருப்பதற்காகவும் தங்களைப்போல தாய் தந்தையாரை விட்டு தனியாக வந்து பழனி மலையில் தனிக்கோயில் கொண்டுள்ள தவக்கோலத் தண்டாயுதபாணியை தங்கள் எண்ணத்தில் வைத்து, ஆலயம் கட்டி வழிபட்டு] வந்தனர். அவனது அருளையே துணையாகக் கருதும் தாங்கள் அயல் நாட்டிலிருந்து தாய்நாட்டுக்கு எழுதும் கடிதங்களில், கடைசியாகத் தங்கள் கையெழுத்தைப் போடாமல்,
ஸ்ரீ தண்டாயுதபாணி துணை என்றே பல நகரத்தார்கள் முடிப்பார்கள். இன்றும் இப்பழக்கம் நகரத்தார்கள் எழுதும் கடிதங்களில் கையாளப்படுகிறது என்பதும் சிறப்புக்குறிய ஒன்றாகும் .

 

தைப்பூசம் சிவபெருமானுக்கு உரிய விழாவாக இருப்பினும் குன்று தோறாடும் குமரனுக்கு உரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத் திருவிழா என்றால் நிச்சயம் காவடிகள் இடம்பெறும். காவடிகள் என்றால் கண்ணைக்கவரும் வண்ணக் காவடிகள், பால் காவடி, பன்னீர் காவடி, இளநீர் காவடி, கரும்புக் காவடி இப்படி இன்னும் எத்தனையோ வகைவகையான காவடிகள் திருவிழாவில் காணிக்கையாக எடுக்கப்படுகின்றன.

பினாங்கில் தைப்பூசத் திருவிழாவைக் காணவரும் இலட்சக்கணக்கான மக்களில் பல இனத்தவரும் கலந்து கொள்வது சிறப்பாகும். இனமத வேறுபாடு இன்றி இங்கே ஒன்று கூடுகிறார்கள். தைப்பூச நாளைப்
பொது விடுமுறையாக மலேயா அரசு அறிவித்து தமிழர்களை கவுரவித்துள்ளது .

தனவணிகர்,வேள்வணிகர் என்ற சிறப்புப் பெயர் படைத்த நாட்டுக்கோட்டை செட்டியார்கள், தாம் கொண்டாடி கும்பிட்டு மகிழும் தண்டாயுதபாணிக்கு பினாங்கில் சிறப்பான விழாவாக தைப்பூசத்திருநாளை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.


 

பினாங்கில் தண்ணீர்மலையில் நடைபெறும் மூன்று நாள் தைப்பூசத் திருநாள்விழா புகழ் மிக்கதும்,வெளிநாட்டவர்கள் அதிகம் பங்குபெரும் தனிச்சிறப்பு வாய்ந்த விழாவாகும். காரணம் நூறாண்டுகள் பழமைவாய்ந்த வெள்ளி இரதத்தில் தண்ணீர்மலையான் நகர் வலமாய் வந்து,பினாங்கு நகரின் முக்கிய சாலைகள் முழுவதும் நின்று, பக்தர்களின் காணிக்கை ஏற்று, அருள்பாலித்து, இலட்சக்கணக்கான சிதறு தேங்காய்கள் உடைபெற்று அதன் இளநீர்கழுவிய தெருப்பாதைகளின் வழியே சென்று தண்ணீர்மலை கோவிலை அடையும் காட்சி, மலையகத்தில் தனிச்சிறப்புமிக்க, பெருவிழாக்களில் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.

"செட்டி பூசம்" என்று சிறப்பாக சொல்லப்பெறும் பினாங்கு தைப்பூச விழாவின் மூன்றாம் நாள் மாலை மின்
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி இரதம் இரவு முழுவதும் பினாங்கு நகரை வலம்வரும் திருக்காட்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் .நூற்றாண்டுகளுக்கு  மேலாக (123 ஆண்டுகள்) பவனி வரும் இந்த வெள்ளி இரதத்தின் வரலாறு சரித்திரப் பெருமையும் புகழும் வாய்ந்ததாகும்.
கடந்த 1894ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் நாட்டில், செட்டி நாட்டுப் பகுதியான காரைக்குடி பகுதியை சேர்ந்த தமிழ் கம்மாளர்கள் கைவண்ணத்தில் இந்த வெள்ளி இரதம் செய்யப்பட்டு "எஸ். எஸ். ரோனா" என்ற கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டு பினாங்கு நகர் வந்து இரதம் பூட்டப்பெற்று இன்று வரை எந்தப் பழுதுமில்லாமல் சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இரதத்தோடு உபரிப் பாகங்களாக வந்தது, நான்கு சக்கரங்களும், மூக்கணைப் பகுதிகள் 1994வாக்கில்  புதுச் சக்கரங்களை மாற்றினார்கள். பழைய சக்கரங்கள் 99 ஆண்டுகள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இந்த வெள்ளி இரதத்தின் உயரம் 25 அடி, அகலம், அதாவது சுவாமி பீடமுள்ள பகுதி 10 1/2 அடியாகும். சக்கரம்தவிர இரதத்தின் முழுப் பகுதியும் கனமான வெள்ளிக் கவசத்தால் (தகடுகளால்) உருவாக்கப்பட்டதாகும். நூறாண்டுகளுக்கு மேலாக எந்தவிதப் பெரிய பழுதுபார்ப்பும் செய்யப்படவில்லை. இது இந்த இரத்தின் உறுதித்தன்மையையும் தமிழ் பேருந்தச்சர்களின் வேலைப்பாடுகளின் சிறப்பை எடுத்து இயம்புகின்றது. ஒவ்வொரு வருடமும் இந்த இரதம் மெருகு மட்டும் போட்டு துடைத்து ஒளி பெறுகின்றது.

பினாங்கு நகரில் தைப்பூச திருநாளுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக நடைபெறும் கந்தர் சஷ்டிதிருநாள், தண்ணீர்மலையானின் தனிப்பெறும் விழாக்களிலே சிறப்பு வாய்ந்தது.

இந்த கந்தர் சஷ்டி விழாவின் ஏழு நாட்கள் இரவிலும் அருள்மிகு தண்ணீர்மலையான் முறையே பாலசுப்பிரமணியன், சுவாமிநாதன், வேலன், வேடன், விருத்தன், தெய்வானை திருமணம், வள்ளியம்மை
திருமணம் ஆகிய ஏழு திருவேடங்களில் காட்சி தந்து மக்களுக்கு அருள்புரிகின்றார். திருக்கல்யாண விழாவுடன் கூடிய இந்த ஏழு நாட்களில் அவர் வழங்கும் அருள்காட்சிகள் நம் மனதை விட்டு அகலாத தெய்வீகத் திருக்காட்சிகளாகும். நல்விழா கந்தர் சஷ்டித் திருநாளாகும்.
மேலும் தண்ணீர்மலையானுக்கு தமிழ் வருடபிறப்பு, தமிழ்மாதப்பிறப்பு, திருக்கார்த்திகைபெருவிழா , கார்த்திகை சோமவாரம் போன்ற மாதக்கார்த்திகை போன்ற நாட்க்களில் சிறப்பு பூசைகள் தண்ணீர்மலையானுக்கு செய்யப்படுகின்றனர்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் தண்ணீர்மலை தண்டாயுதபாணிக்கு  காலையில் காலசந்தி பூசையும், மதியம் உச்சிக்கால பூசையும், மாலையில் சாயரட்டை பூசையும்,இரவு அர்த்தசாம பூசைகளும் நாள் வழிபாடுகளாக தொய்வின்றி சிறப்பாக நடைபெறுகின்றன.
வேணும்
"
அருள்மிகு தண்ணீர்மலை தண்டாயுதபாணியே துணை"
------ஆ.தெக்கூர். இராம.நா.இராமு இராமநாதன்