Friday, 24 March 2017

கோனே பால்ஸ் என்ற கைலாச கோனே



  சென்ற வார இறுதி பயணத்தில் கண்டவற்றின் தொகுப்பு. கோனே நீர்வீழ்ச்சி தமிழக எல்லையில் புத்தூர்க்கு அருகில் அமைந்துள்ள ஒரு மிகச்சிறந்த சுற்றுலாத் தலம். சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த நீர்வீழ்ச்சி. குடும்பத்துடனும் நண்பர்களுடன் ஒருநாள் சுற்றுலா பயணமாக வந்து பொழுதுதை போக்க மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக இந்த இடம் திகழ்கிறது. அது மட்டும் இல்லாது இது சுற்றுலாத் தலமாக பலருக்கு திகழ்ந்தாலும் இது ஒரு ஆன்மிக தலமாகவும் திகழ்கிறது. வருடம் முழுவதும் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் கொட்டிக் கொண்டே இருக்கும் என்பது இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சமாகும் .

கைலாச கோனே அருவி

கைலாச கோனே அருவிக்கு செல்லும் வழி 

இந்த நீர்வீழ்ச்சியில் நீர் இயற்கையாகவே வனப்பகுதியில் இருந்து 100 முதல் 120 அடி உயரத்தில் இருந்து அழகாக விழுகிறது. மூர்த்தி சிரிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல் நீர்வீழ்ச்சியில் விழும் நீர் தூரத்தில் இருந்து பார்க்க சிறிதாக இருந்தாலும் சற்று அருகில் சென்று பார்த்தால் நீர்வீழ்ச்சி புத்துணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் பாதுகாப்பான வகையில் உள்ளது .

அருவிக்கு செல்லும் வழியில் உள்ள புத்துக் கோவில்


கைலாச கோனே அருவியும் குகைக்கோவிலும்


கோனே அருவியின் மறுபக்கம் ::

 கோனே நீர்வீழ்ச்சி பலருக்கு சுற்றுலாத் தலமாகத்தான் தெரியும் இதற்கு மற்றொரு முகம் உண்டு.இது பலருக்கு தெரியாத ஒன்றாகும். திருமலையில் உள்ள ஏழுமலையானுக்கு பத்மாவதிக்குமான திருமணம் புத்தூருக்கு அருகில் நாராயணவனம் என்னும் இடத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது . இந்த திருமணத்தை சிவபெருமானே தலைமையெற்று நடத்தியதாக நம்பப்படுகிறது. அப்படி நாராயண வனத்தில் திருமணம் நடத்திவைக்க வந்த சிவபெருமான் கையிலாயத்துக்கு நிகராக ஒரு இடத்தை தான் தங்கி தேடியபோது ஈசன் இந்த இடத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கியதாக நம்பப்படுகிறது. இந்த நீர்வீழ்ச்சியை இந்த பகுதி மக்கள் கைலாச கோனே நீர்வீழ்ச்சி என்றே பரவலாக அழைக்கப்படுகின்றது . இந்த இடம் கைலாயத்துக்கு ஒப்பான ஒரு இடமாகவே இங்கு உள்ள மக்கள் நம்புகின்றனர்.

காஞ்சி விசுவநாத சுவாமிகள் ஜிவசமாதிக்கு செல்லும் வழி எங்கள் பயணத்தில் மேலே செல்லும் வழி அடைக்கப்பட்டிருந்தது
 கையிலாச கோனே அருவிப் பகுதியில் ஒரு சித்தரின் ஜீவசமாதி ஒன்றும் அமைந்துள்ளது . இந்த ஜீவசமாதி பகுதியில் ஒவ்வொரு முழு நிலவு நாளில் வால் நட்சத்திரமாக சித்தர் காட்சி  தருவதாகவும் நம்பப்படுகிறது . இதை காண பக்தர்கள் பலரும் கூடி இரவு கூட்டு வழிபாடு செய்கின்றனர் . முழுநிலவு நாளில் இங்கு வந்து சென்றால் எண்ணங்கள் ஈடேருவதாவும் நம்பப்படுகிறது.

காஞ்சி விசுவநாத சுவாமிகள் தவம் செய்த குகை
 காஞ்சிபுரத்தை சேர்ந்த விசுவநாத சுவாமிகள் என்பவர் காஞ்சி காமாட்சியின் அருளால் இந்த இடத்திற்கு வந்து தவவாழ்வை மேற்கொண்டு ஜீவ சமாதியாகியுள்ளார். விசுவநாத சுவாமிகள் தவம் செய்த குகை ஒன்றும் இங்கு அருவிக்கு அருகில் உள்ளது இந்த இடத்தை ஒரு நாகம் காவல் புரிவதாகவும் நம்பப்படுகிறது. குகைக்கு மேல் புரத்தில் தான் சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோனே அருவியின் நீர் மருத்துவ குணம் கொண்டதாகவும் தாது சத்து நிறைந்த ஒரு புனித நீராகவும் இந்தபகுதி மக்களால் நம்பப்படுகிறது. சில நோய் தீர்க்கும் மருத்துவ குணம் கொண்டதாகவும் நம்ம்பிகை உள்ளது. காஞ்சி மகாபெரியவா இந்த இடத்தில் பலமுறை வந்து தவம் செய்தார் என்றும் சொல்லுகின்றனர்.

அறிவிப்பு பலகை
     இந்த நீர்வீழ்ச்சிக்கு மிக மிக அருகிலேயே சிவபெருமான் பார்வதி தேவி உடனும் மற்றும் பரிவார தேவதைகள் சிலா ரூபங்கள் அருவிக்கு அருகில் உள்ள குகையில் அமைந்துள்ளது ஒரு சிறப்பு. தெய்வங்களுக்கு இரண்டு கால பூசை சிறப்பாக நிகழ்கிறது.

அருவிக்கு அருகில் உள்ள இறை உருவங்கள்
அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ளசிவன் மற்றும் பார்வதி
கையிலாச கோனே அருவிப் பகுதியில் மது மாசிமகம் மற்றும் போதை வஸ்து பொருட்களை வனத்துறை மற்றும் சுற்றுலாத் துறையினர் அருவிப்பகுதிக்கு கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். கோனே அருவிப் பகுதியில் அடிவாரத்தில் உள்ளூர் மக்களின் கடைகள் நிறைய அமைத்து உள்ளனர் இங்கு ஆயில் மசாசுகளும் செய்கின்றனர் மேலும் சுற்றுலாப்பயணிகள் தேவைக்கு இனங்க நாட்டுக் கோழி சமைத்து தருகின்றனர் .

அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ள அம்மன்

அருவிக்கு அருகில் உள்ள குகை கோவிலில் உள்ள
அருவிக்கு செல்வதற்கு முன் ஆர்டர் செய்துவிட்டு முன்பணம் செலுத்திவிட்டு சென்றால் சிறந்த முறையில் சமைத்து தருகின்றனர் உள்ளூர் வாசிகள்.


அருவிக்கு செல்ல காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அருவியில் நீராட சுற்றுலாத் துறையினர் அனுமதிக்கின்றனர். கையிலாச கோனே நீர்வீழ்ச்சி சென்னையில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ளது. புத்தூரில் இருந்து 10 கிமீக்கு உள்ளது. கையிலாச கோனே நீர்வீழ்ச்சி

------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்..

No comments:

Post a Comment