Wednesday, 22 March 2017

நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில்

நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோயில் தமிழக எல்லையோரத்தில் ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு சிறு கிராமம். தமிழகம் பறிகொடுத்த எல்லை பகுதியில் இந்த நாகலாபுரமும் ஒன்று. திருமால் மச்சவடிவில் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக இத்தலத்தில் காட்சிதருவது இத்தலத்தின் சிறப்பாகும். இங்கு எழுந்தருளி இருக்கும்      
  


ஆலய விமானம்

ஸ்ரீ தேவி பூதேவி சமயத வேத நாராயண சுவாமி சுதை சிற்பம்

  எம்பெருமானின் திருப்பெயர் :: வேத நாராயணப் பெருமாள்
 தாயார் திருப்பெயர் :: வேதவல்லித்தாயர் 

 ஆலய அமைப்பு :: 

இந்த திருகோவில் விஜய நகர மன்னர் கிருஷ் தேவராயரால் நிறுவப்பட்ட ஆலயமாக சொல்லப்படுகிறது. திருகோவிலில் தமிழ் கல்வெட்டுகள் அதிகமாக காணப்படுகிறது .தெலுங்கு கல்வெட்டுகளும் அங்காங்கே காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயன் தன் தாயார் நினைவாக இந்த கோவிலையும் ஊரையும் உருவாக்கி தனது தாயாரின் பெயரான நாகலா தேவி எனபதனையே நாகலாபுரம் என்று சூட்டினார் . இக்கோயிலின் சிறப்பு வேத நாராயணப் பெருமாள் மேற்கு திருக்காட்சி நல்குகின்றார். வேதவல்லி தாயார் கிழக்கு நோக்கி அருளுகிறார். திருக்கோயில் நான்கு புறமும் ராஜகோபுரம் மிகவும் பிரம்மாண்டமான காட்சி தருகிறது. அதனையடுத்து ஆலயத்தின் இரண்டாம் பிரகார ராஜ கோபுரத்தை கடந்தால் ஆலயத்தின் கொடிமரம் , பலிபீடம் , கருடாழ்வார் மேற்கு நோக்கி அருளுகிறார்கள் .அதனை தொடர்ந்து மூன்றாவது ராஜ கோபுரத்தை கடந்தால் ஷேத்தரபாலகர் மற்றும் தும்பிக்கையாழ்வார் அர்த்த மண்டப முகப்பில் அருளுகிறார்கள் மற்றும் உள்ளே பணித்தால் ஜெயன் விஜயன் காட்சி தருகிறார்கள். இவர்களை கடந்தால் உள்ளே கருவறையில் சங்கு சக்கரம் அபய வரத ஹஸ்தத்துடன் மச்சவடியில் வேத நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி சமயதராக காட்சிதருகிறார் . மேலும் ஆலயத்தின் இரண்டாம் பிறகாரத்தில் பிரம்மோற்சவ வாகனங்கள் வருசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் தென்கிழக்கு மூலையில் பக்த ஆஞ்சநேயர் திருக்காட்சி தருகிறார். மற்றும் ஆலயத்தின் வடமேற்கு மூலையில் வேதவல்லி தாயார் அருளாட்சி நல்குகின்றார். மேலும் இங்கு லக்‌ஷ்மி நரசிம்மர் , வீர ஆஞ்சநேயர் , பக்தஆஞ்சநேயர் , இராமர் லட்சுமணன் சீதை தனி சன்னதி கொண்டு அருளுகின்றனர். 

 
அறநிலையத்துறை அறிவுப்பு பலகை 



ஆலய தோற்றம்

ஆடல் மகளிர் கிழக்கு ராஜகோபுர வாயிலில்

சிற்ப வேலைப்பாடு ஆலய வாயில் படியின் முகப்பில் 

ஆலயத்தின் தோற்றம் 



ஆலயத்தின் கோபுரத்தின் திருமகள் புடைப்பு சிறப்பும் தமிழக அறநிலையத்துறைக்கு நிகராகவே பராமரிப்பு வேலையை செய்கின்றன 
 
சிதைந்தைத நிலையில் விமானத்தின் மேல் தளத்தில் உள்ள நவகரக சக்கரம் 

தல வரலாறு:: 

மச்ச அவதாரம் திருமாலின் தசாவதாரங்களில் முதன்மையான அவதாரமாகும். கோமுகன் என்னும் அசுரன் பிரம்மனிடம் இருந்து நான்கு வேதங்களைத் திருடி மீன் வடிவில் கடலுக்கு அடியில் சென்று ஒளிந்து வைத்து கொண்டான் . அசுரனை கண்டுப்பிடித்த திருமால் மச்சவடிவில் அவராதம் செய்து கடலுக்கு அடியில் அசுரனை வதைத்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார் என்று மச்ச புராணம் சொல்லுகின்றது.



 நான்கு வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இத்தலத்தில் கொடுத்தன் காரணமாக இங்கு அருளும் பெருமாளின் திருப்பெயர் வேத நாராயணப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறது. 

பலிபீடம் கொடிமரம் மற்றும் கருடாழ்வார் 

பெருமாள் சன்னதிக்கு

திருச்சுற்று

ஆலயப் பெருவிழா ::

 1. இத்திருக்கோயில் பிரம்மோற்சவம் சித்திரை மாதத்தில் பத்து நாட்கள் மிகவும் சிறப்பாக நிகழ்கிறது .
 2. பங்குனி மாதம் வளர்பிறையில் ( சுக்லபட்சம் ) மூன்று நாட்கள் துவாதசி திரயோதசி சதுர்த்தி ஆகிய திதிகளில் மாலையில் சூரியன் பெருமாளை வழிபடுவதாக ஐதிகம். முதல் நாள் சூரியனின் ஒளிக்கதிர் பெருமாளின் பாதத்தை தொட்டு வழிபடுகின்றார் .அதை தொடர்ந்து இரண்டாம் நாள் சூரியன் பெருமாளின் திருமார்பை வழிபடுகின்றனர் .மூன்றாம் நாள் பெருமாளின் தலைப்பகுதியை ஒளிக் கதிர்களால் வழிபடுவது சிறப்பு. அதனை தொடர்ந்து பங்குனி உத்திர நாளில் இரவு தெப்பத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. 

யானைகளின் சிற்பம் ஆலயத்தின் வடகிழக்கு பகுதி திருச்சுற்றில்

ஆலயத்தின் தென்பகுதி திருச்சுற்று

 3.மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா 
 4. தைமாதப் பிறப்பு ( மகர சங்கராந்தி ) மற்றும் ரதசப்தமி
 5.தெலுங்கு வருடப்பிறப்பு .

வேதவல்லி தாயார் சன்னதி

தெற்கு ராஜகோபுரம் அடைக்கப்பட்ட நிலையில்

 பூசை நேரம் :: 

இத்திருக்கோயில் நித்திய பூசையானது ஆறு காலமும் தொய்வின்றி சிறப்பாக நிகழ்கிறது. காலையில் 6.00 முதல் மதியம் 1.00 வரையும் மாலை 4.00 முதல் இரவு 8.00 திறந்திருக்கும். வேத நாராயண பெருமாளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் 8.00மணியளவில் சிறப்பாக திருமஞ்சனம் நிகழ்கிறது. மற்றும் வேதவல்லி தாயாருக்கு வெள்ளி கிழமை காலை 8.00 மணிக்கு நிகழ்கிறது. இத்திருக்கோயில் திருமலைத் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாடில் செயல்படுகிறது. தற்போது ஆலயத்தின் பராமரிப்பு பணி நிகழ்ந்து வருகிறது . 

------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்

Thursday, 16 March 2017

குருவும் சீடனும்




ஒரு ஊரில் ஒரு சீடன்  தன்  குருவிடம் தனது நெடுநாள் சந்தேகத்தை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள முற்பட்டான்  அவன் தன் குருவிடம் பகுத்தறிவுக்கும் விதிக்கும் என்ன வித்தியாசம்என்ன என்று கேட்டான். 


 அதற்கு குரு சீடனைபாத்து உனது வலதுகாலை  மட்டும் ஊனாது நில் என்றார் அதன் படி அவனும் நின்றான். அடுத்து  சில நொடியில் குரு சீடனிடம்வலதுகாலை கீழே ஊனாது இடதுகாலையும் தூக்கு என்றார் அவனும் சற்றும் சிந்திக்காது தூக்க முற்பட்டான். அதன் விளைவாக கீழே விழுந்தான்.

அதன் பின் குரு சீடனிடன் பகுத்தறிவு என்பது ஊன்னால் ஒருகாலை தூக்க முடிந்தது அதுதான் பகுத்தறிவு. இரண்டு காலையும் ஒரு சேர தூக்கினால் அடிபடும் அது தான் விதி இப்போது புரிகிறதா என்று சீடனின்  சந்தேகத்திற்கு விளக்கம் கொடுத்தார். சீடனோ விதியை நினைத்து நொந்து கொண்டு இடுப்பை பிடித்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.  

Friday, 10 March 2017

அரளிப்பாறை



குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்.அதுபோல் செட்டிநாட்டின் ஒரு அங்கமாகவும் பாண்டிய நாட்டின் ஒரு அங்கமாகவும் விளங்கும் அரளிப்பறை ஆ.தெக்கூருக்கும் சிங்கம்புனரிக்கும். அருகில் அமைந்துள்ள ஒரு சிறுகிராமம்.இங்கும் தெற்கு வடக்காக ஈராயிரம் அடி நீளமும் கிழக்கு மேற்கில் முன்னுறு அடி நீளமும் நூறு அடி உயரமும் கொண்டுள்ள பாறை மீது முருகப்பெருமான் தண்டாயுதபாணி ஆண்டிக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு எழுந்தருளியிருக்கும் தண்டாயுதபாணியை அரவக்கிரியான் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இந்த கோவில் ஐந்து நிலை நாட்டார்களுக்கு உட்பட்ட ஒரு கோவிலாகும். இங்கு முருகப்பெருமான் தனித்து காட்சி தருகிறார். இங்கு மலையில் தண்டாயுதபாணியுடன் இடும்பன் மற்றும் அண்ணாமலையார் காட்சி தருகின்றனர்.




கோவில் அமைப்பு :

பொதுவாக முருகன் கோவில்களில் கிழக்கு திசை நோக்கியே அருள் புரியும் இறைவன் இக்கோவிலில் இறைவன் பக்கதர்களின் வம்சவிருத்திக்காவும் குடும்பநலனுக்காவும் மேற்கு நோக்கியபடி நின்றபடி காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. முருகன் கோவிலுக்கு தெற்கே குடைவரைகோவிலில் அண்ணாமலையார் காட்சி தருகிறார்.



குடைவரைக்கோவில் :


பாலதண்டாயுதபாணிசுவாமி கோவிலின் தெற்கே கிழக்கு நோக்கியபடி குடைந்தெடுத்த குகையில் அருள்புரியும் அரவங்கிரிஸ்வரர் ஆலயம் அரிகேசரி மாறவர்ம சுந்தர பாண்டியன் என்ற கூண்பாண்டியனால் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கருவறையை மட்டும் கொண்டது. அதில் ஆவுடையாருடன் கூடிய லிங்கத் திருவுரு பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் நுழைவாயிலை ஒட்டி வடக்கு நோக்கிய புரையில் முகலிங்கம் புடைசிற்பமாக உருவாக்கப்பட்டுள்ளது இத்தகுலிங்கங்கள் சில இடங்களில் தான் காணப்படுகின்றன. இங்குள்ள முகலிங்கம் முற்றுபெறாத நிலையில் உள்ளது. அதில் ஒரு முக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளது. குடவரைக் கோவிலில் வேறு எங்கும் முகலிங்கம் இருப்பதாக தெரியவில்லை. தெற்கு நோக்கிய புரையில் முற்று பெறாத வடிவம் ஒன்று காணப்படுகிறது. இவ்வாலய பணி துவங்கிய காலத்தில் மன்னர் சமண மதத்தை தழுவியதால் திருப்பணி தடைபட்டது. திருஞானசம்பந்தரால் மீண்டும் சைவ மதத்திற்கு மதமாற்றம் செய்யப்பட்டார். என்று சொல்லப்படுகிறது.


தல வரலாறு:

பாண்டியமன்னன் கனவில் இறைவன் தோன்றி இவ்விடத்தில் கோவில் எழுப்பி வழிபட சொன்னதாக சொல்லப்படுறது. இங்கு அரவத்தில் வடிவில் இறைவன் தோன்றி கோவில் நிருமாணிக்க இடத்தை தேர்வு செய்து கொடுத்ததாகவும் நம்பப்படுகிறது. மேலும் இந்த மலையே அரவத்தின் உருகா காட்சி தருகிறது. இத்தலம் முன்பு அரவக்கிரி என்று அரவக்குன்று என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வந்தது.பின் இதுவே பேச்சு வழக்கில் அரளிப்பாறைஎன்று மாருவு பெற்றுள்ளது. இந்த தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி காட்சி தருவது மிகவும் சிறப்பு. அரவக்கிரியானை வழிபட குடும்ப ஒற்றுமை பலப்படும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது. இங்கு முருகப்பெருமான் எந்த ஒரு ஆயுதமும் தாங்காமல் தண்டாயுதத்தை மட்டுமே கையில் ஏந்தி இறைவன் ஏகாந்தமாக தனித்து நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.



திருவிழா:

அரவக்கிரியானுக்கு வருடாந்திர திருவிழா என்பது மாசிமகத்தையோட்டி காப்பு கட்டி பத்துநாள் மிகபெரிய உற்சவமாக நாட்டார் நகரத்தார்கள் ஊரார் என்று இணைந்து முருகப்பெருமானை தொழுகின்றனர். மாசி மகத்தன்று மிகவும் விமர்சையாக முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். மாசி மகத்தன்று ஐந்து நிலை நாட்டார்கள் ஒன்று கூடி ஜவுளி கொண்டுவந்து முருகனை வழிபடுகின்றனர்.அதன் தொடர்ச்சியாக மகத்தன்று நண்பகலில் மிகவும் பிரசித்திபெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டை தொடங்கக்படுகிறது. அரளிப்பாறை மஞ்சுவிரட்டை என்பது அரளிப்பாறையை சுற்றி நூறு கிலோமீட்டர் தொலைவுக்கு அரளிப்பாறை மஞ்சுவிரட்டை மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். இந்த மஞ்சுவிரட்டை காண பாலாயிரம் மக்கள்மலையில் ஒன்றுகூடுகின்றனர்.



மாசிமகம் விழாக்காலம் கோடைக்காத்தின் துவக்க காலம் என்பதால் ஆங்காங்கே வழியெங்கும் தண்ணீர்பந்தல்கள் நீர்மோர் பந்தல்கள் பானகம் மாங்காய் நெல்லிக்காய் சுண்டல் என்று மக்களின் களைப்புகள் தீர்க்கும் வகையில் ஆங்காங்கே நாட்டார் நகரத்தார்கள் பந்தல்கள் அமைத்து தொன்றுதொட்டு வழங்கிவருகின்றனர்.



மேலும் அரவக்கிரியானுக்கு ஒவ்வொரு மாதக்கார்த்திகையின் போதும் மிகவும் சிறப்பாக முருகனுக்கு அபிஷேகம் செய்து நகரத்தார்கள் கோவிலுக்கு அருகில் உள்ள நகர விடுதியில் அன்னம் வடிக்கப்பட்டு மாதம்தோறும் தெக்கூர் நகரத்தார்களால் அன்னதாம் செய்யப்பட்டு வருகின்றது. அரவக்கிரியான் கோவில் திருப்பத்தூரில் இருந்து 16கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வேணும் அரவக்கிரியான் துணை
- ------- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Saturday, 11 July 2015

ஆ.தெக்கூர் மீனாட்சி சுந்தரர்



எங்கள் ஆ.தெக்கூர் நகரில் உறைகின்ற மீனாட்சி சுந்தரரின் மீதும் எழுதிய என்தன் சிறுகவிதை 

தெக்கூர் நகரசிவன் கோவில்

தெக்கூர் நகரின் தெய்வமே  திங்களணிந்தொனே
கலகங்கள் நீக்கும் கயிலையின் கருணாமூர்த்தியே !
தெக்கூரின்  மையத்தில் குடிகொண்ட தென்னவனே !
மங்கலங்கள் அருளிடும் மங்கையொருபாகநாதா !
தெக்கூர் நகரில் உறைகின்ற கோமகனே !
வேள்வணிகர் குடியது விளங்கிடவே வந்தமர்ந்தாள்
மீனாளும் மாங்காத புகழுடன் மேன்மையும் நல்க
ஊரினழகில் மயங்கியே சொக்கருடன் மீனாளும்
நித்தியமாய் இப்பதி யதனில் உறைந்தனரே !!!
ஊரின் ஆச்சிமாருக்கும் நாச்சிமாருகும் வாவரசியாய்
வாழ்ந்திடவே உச்சிதிலகத்தில் மீனாளும் நின்றாள் !!!
இப்பதியில் நாட்டாரும் நகரத்தாரும் நலமுடன்வாழ
மதுரையம்பதி தன்னைவிட்டு தெக்கூர் புகுந்தகோவே !!!
தானதருமங்கள் செய்திடவே நித்தியத்தை நல்கும்நாதா
பஞ்சாச்சரம் உரைக்க பிறவாநிலை நல்கும்ஈசனே !!!
மீனாட்சிசுந்தரர் பெயரதைநாளும் சொல்ல திருமகளும்
இல்லத்தில் உறைய இல்லாமையுடன் இருளதுவையும்
அகற்றியேயங்கு ஒளியத்தை நிலைபெறச் செய்வாளே !!!
தெக்கூர்நகரில் மும்மாரியுடன் முப்போக வெள்ளாமை
விளைந்து வறுமைகள் ஒழித்திடவே நீங்காதக்
மீன்விழியாள் மீனாள்கடைக்கண் பார்வை வைத்தாள் !!!
கன்னியர்கள் கைதொழ நல்லமணவாழ்வை கோடையாய்
சொக்கர்மீனாள் அருள்மழையை பொழியும் தெக்கூர்
காளையர்கள் நாடிவந்தால் இந்திரப்பதிவி நல்கும்
சோமேசனின் கடைக்கண் பார்வை பட்டதனாலே !!!
காலத்தே நல்லமண வாழ்க்கை நல்கிடும்
சொக்கர் மகிழ் பிரியாவிடையாளின் அருளாலே
இப்பத்தியில் தம்பதியர் பிரதோஷ பூசையில்வழிபட  
நந்திதேவரின் அருளாலே குலமதுவும் தழைக்கும் !!!
காலத்தேயெங்கள் தேவையை பூர்த்தியாகும் தெக்கூர்நாதன்
கொஞ்சும் கிளியுடைமீனாளும் நித்தியமாய் உறையும்
எங்கள் தெக்கூரின் புகழதுதிக்கெட்டும் பரவுமே !!!!

       ------ஆ.தெக்கூர் லெனா.கண.இராம.நா.இராமநாதன்


  






Wednesday, 8 July 2015

நடுவீட்டுக் கோலம்

கோலமீது கோலமீது அழகான கோலமீது
பச்சருசி மாவுகொண்டு தீட்டும்  கோலமீது
நகரத்தாரின்  தனித்துவ கவின்மிகு கோலமீது
ஆச்சிகள் கைவண்ணத்தில்  மிளிரும் கோலம்
மங்கள நிகழ்வுக்கு முந்திவரும் கோலமீது
பாங்குடனே பொட்டிகட்டி சிறப்புறவே அதை
சுற்றி  அழகுடனே முத்துமுத்தாய் புள்ளிகுத்திட
திருவும் கண்டுமகிழ மங்கலங்கள் கூடியதே !!!


காவடிப் பூசையிலும் பிள்ளையார் நோன்பினிலும்
தைதிங்கள்  பங்குனியில் பிறக்கும் பொங்கலிலும்
வீட்டுப் படைப்பின்போதும் சித்திரை முழுமதியன்றும்
திருமணம்  சொல்லையிலும் வேவுயிறகையின் போதும்
மருந்து குடிகையிலும் பிள்ளைபேற்றிலும்  என்று
குடும்பத்தில் ஒற்றுமையில்  உருக்கொண்ட  கோலமீது
செட்டிமகன் வாழ்வோடு கலந்துநிற்கும் கோலமீது
செட்டிநாட்டவர் தனித்துவ அடையாளக் கோலமீது !!!



- ஆ.தெக்கூர் கண. இராம. நா. இராமநாதன்






Saturday, 13 December 2014

அழகிய மார்கழித் திங்கள்



மார்கழிமாத நிகழ்வு பற்றி ஒரு சிறு கிறுக்கல் . அழகிய இந்த குளிர்காலத்தின் தொடக்கத்தின் தமிழகத்தில் நிகழ்பவைகள்


மாதமீது மாதமீது
கன்னியர்கள் போற்றுமாதம்
கண்ணனின்  மாதம்

வீடெங்கும் வாயிலில்
வண்ணக்கோலங்கள்   நிரம்பும்
மார்கழி  மாதம்

திருப்பள்ளியெழுச்சி பார்பதற்கும்
திருப்பாவை திருவெம்பாவை
ஓதிடவே  உவந்தமாதம்

மாலையிலே முத்தாய்கோலமிட்டு
பெண்கள் போற்றித்தொழும்
செவ்வாப்  பிள்ளையாரின்மாதம்

வைணவர்கள் கண்விழிக்கும்
ஏகாதசியும் ஆதிரையான்
மகிழ்ந்திட முழுமதியுடையமாதம்

நகரத்தாரும் ஈழத்தாரும்
கொண்டாடிமகிழ பிள்ளையார்
நோன்புடைய மாதமீது

உழுதுவிதைத்த உழவனுக்கு
மகிழ்வூட்டும் அறுவடைகள்
துவங்குகின்ற மாதம்

சிறப்புறவே  இல்வாழ்வுபுரியும்
மகளைதேடி வரும்பொங்கட்
பானைகளின்  மாதம்

---ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Tuesday, 2 December 2014

என்னுள்ளம் கவர்ந்த திருத்தலம் 2

சாயவனம் (திருச்சாய்க்காடு)

சாயாவனம் இந்த தலம்  பூம்புகாருக்கு அருகில் உள்ளது. ஆடிமாதம் பூம்புகார் நகரில்  பட்டினத்தார் விழாவினை காணச்செல்வோர் இந்த தலத்தை கண்டிருப்பர் .இந்த தலம் காசிக்கு நிகரான ஒரு தலம்.பூம்புகார் பட்டினத்தார் விழாவை காண சென்றபோது இந்த ஆலயத்தை காண நேர்ந்தது. பார்த்த மாத்திரத்திலேயே மனதை கொள்ள கொண்ட ஒரு தலம்.

" சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
 முக்குளமும் ஆடி 
முத்திபெற்று வந்த கண்ணோ  "


என்ற செட்டிநாட்டு  ஆச்சிகள்  தாலாட்டு பாடி குழந்தைகளை தூங்கவைத்த தாலாட்டு வரிகள் இவை . சங்கு முகம் என்று கூறுவது காவேரி ஆறு கடலுடன் கலக்கும் முகத் துவாரத்தில் நீராடுதல் மிகவும் சிறப்பு புண்ணியம் வாய்ந்த ஒன்று . அப்படி சங்குமுகத்தில் தீர்த்தமாடி சாயாவனத்தில் உள்ள ஈசனை வழிபட்டு பின் அருகில் உள்ள திருவெண்காடு தலத்தில் உள்ள மூன்று குளங்களில் (சூரிய தீர்த்தம் ,சந்திர தீர்த்தம் , அக்னி தீர்த்தம் ) நீராடி அங்கு உள்ள சிவபெருமானை வழிபாட்டால் முத்தி கிட்டும் என்பதுநம்பிக்கை  இந்த தாலாட்டில் தெரியவருகிறது .அத்தகைய புகழ் பெற்ற ஒரு தலம்.
முகப்பு வாயில்  சிவபெருமான் ரிஷபத்தின் மீது ஏறி இந்திரனுக்கும் இயற்பகையாற்கும் காட்சி நல்கும் சுதை சிற்பம்
சாயவனம் :

இந்த தலத்திற்கும் இப்பெயர் வரக்காரணம் இங்கு  கோரைப் புற்கள் அதிகம் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது .சாய் என்பது கோரைப் புல்லை குறிக்கும் சொல் அதன் பெயரால் இந்த தலம் சாய்க்காட்டுடன் திரு என்ற  அடைமொழியும் சேர்த்து  திருச்சாய்காடும் என்று அழைக்கப்பட்டது . சாயாவனம் .கோரைபுற்கள் அதிகம் காணப்பட்டதால் இந்த தலம் சயாவனம் என்றும் அழைக்கப்பட்டது .

இறைவன் திருப்பெயர் : சாயாவனநாதர் 
இறைவியின் பெயர் :  குயிலினும் இன்மொழி அம்மை 
ஸ்தல விருட்சம் : கோரைப்புல் 
தீர்த்தம் : சங்கு முகம் (காவேரி ), ஐராவததீர்த்தம் 
பாடியவர்கள்: அப்பர் (2) , திருஞானசம்பந்தர் (2)
ஆலயத் தோற்றம் கொடிமரக்கணபதியின் காட்சியும்

ஆலயத்தின் மூன்று நிலை ராஜ கோபுரம்
அதிகார நந்திஉயர்ந்த பீடத்தில்
திருக்கோயில் சிறப்பு :

இக்கோயிலை இந்திரன் , ஐராவதம் , ஆதிசேசன் ,உபமன்யு முனிவர் , இயற்பகையார் , குபேரன் , இந்திரனின் தாய் அதிதி , பட்டினத்தார் ,சிவகலை ஆகியோர் வழிபட்டு மருதீசனையே பிள்ளையாக பெற பெறனர். இங்கு தினமும் இந்திரன் தினமும் பூசிப்பதாக ஐதீகம் .இந்த ஆலயம் காவேரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது .வடகரையில் இந்த தலம் 9வது பாடல் பெற்ற ஆலயம் . இக்கோவில்  274 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று .
சுற்றுப்ராகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி
தேர்போன்ற அமைப்பு 
அம்பாள் பார்வையை மறைக்காமல் வெளியில் செல்லும் பாடியுள்ள ஜன்னல் கீழே நாட்டியமங்கைகள் மற்றும் இசைக்கலைஞர்கள் சிற்பம்

வெளிப்ராகாரம்
வெளிப்பிரகாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமயத முருகன்
சாயாவனனாதர்  , அம்பாள், நடராஜர் , சண்டிகேஸ்வரர்  விமானங்கள்
நவகிரகங்கள் சன்னதியும் வைரவர் சன்னதி உள்ள பகுதி
தேர்போன்ற வடிவின் காட்சி

உட்புறத்தில் அஷ்டஇலக்குமியின் தோற்றம்
வில்லேந்திய வேலவன்: 
இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். இந்த முருகன் ஒருமுகத்துடன் நான்கு கரத்துடன்  கையில் வில் அம்புடன் காட்சிதருகிறார். உடன் மற்இரு கரத்திலும் சேவற்கொடி , வேல் ஏந்தி கட்ட்சிதருகிறார் .எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களைச் சமாளிக்கும் தைரியம் பெறலாம்.

வில்லேந்திய வேலவர்
வில்லேந்திய வேலன் சன்னதி

தலவராலறு :

                          ஒருமுறை இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவர் பூமிக்கு வந்தார். தாயைக் காணாத இந்திரன், அவர் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். இந்திரனின் தாயார்  தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.அப்போது  கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவி ஈசனுக்கும் தெரிவித்தாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது.) உடனே சிவன் அங்கு தோன்றி, ""இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,'' என அருள்புரிந்தார். ஐராவதம் தேரை இழுக்க முயற்சித்த பொது தன் தந்தம் பூமியில் பட்டு கீர் நீர் வெளிப்பட்டு உருவானதே இங்குள்ள ஐராவத தீர்த்தம்  . சிவபெருமான் கூறியபடியே தினமும் மாலையில் இந்திரன் இங்கு வந்து ஈசனும் பூசை செய்வதாக ஐதீகம்.
சாயாவனநாதர் சன்னதி
தில்லை கூத்தன் சன்னதி
சாயாவனநாதர் சன்னதியின் உட்புறார சிற்பங்கள்
குயிலினும்இன்மொழியம்மை 
வெளிப்பிராகாரத்தில் உள்ள வைரவர்
வெளிப் பிராகாரத்தில் உள்ள இந்திரன் சன்னதி
இயற்பகை நாயனார் வரலாறு :

                                63 நாயன்மார்களில் ஒருவரான  இயற்பகை நாயனார். இவர் பிறந்து, வளர்ந்து ,முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவி கற்பினுக்கரசியாரும் சிறந்த சிவ பக்தை.  இயற்பகையார் சிவனடியார்கள் வேண்டும் பொருளையும் பொன்னையும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து சிவத்தொண்டு செய்து வந்தார் .இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு, சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம், ""நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை,'' என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், ""நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்'' என்றார்.
                                  
                                 இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார்.ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், ""நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்'' என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி,""நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து என் திருவடி வந்து சேர்க'' எனக்கூறி மறைந்தார்.அவ்வாரே அவரும் அவர் துணைவியும் சிறப்புற பல தொண்டுகள் புரிந்து இத்தலத்தில் இருந்து கைலயம்பதி சென்றடைந்தனர் .மனிதன் மனஉறுதி மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது.
இயற்பகையார் மற்றும் அவர் மனைவி வெளிப்பிராகாரத்தில் உள்ள சன்னதி

இறைவன் இயற்பகையாற்கும்  காட்சி நல்கிய ஓவியம்  இறைவன்சன்னதிக்கும்முன் உள்ள ஓவியம்
திருவிழா :
  • சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. 
  • ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு.
  • சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல்.
  • வைகாசியில் குமரகுருபரர் பூஜை.
  • மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுகின்றன.
பிரதோஷ நாயகர் வெள்ளி ரிஷபத்தின் மீது
ஆலயத்தோற்றம் :

          கோபெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் "யானையால் புக முடியாத கோயில்' என்பதாகும். இக் கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும். இந்த ஆலயம் தேர் வடிவில் ஆனது .இங்கு 13 கல்வெட்டுகள் உள்ளன.சோழர்காலக் 10 கல்வெட்டுகளும் பாண்டியர்கள் கால 3 கல்வெட்டுகளும் உள்ளன .கோயில் குளத்திற்கு தெற்கில்  அமைந்துள்ளது.  மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் ,மங்கையர்க்கரசியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன.அடுத்துள்ள நால்வர் சன்னதியில் "மூவர் முதலிகளே' உளர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சற்று பெரிய உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி முதலிய சன்னதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி, வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சன்னதியும் உள்ளனஅம்மன் சன்னதியை தனியாக உட்புராரம் வலம்வரும் வகையில் அமைந்துள்ளது . அம்மையின் பார்வையை மரிக்காமல் பார்வை வெளியில் படும்படி கற்ஜன்னல்  எதிரில் அமைத்துள்ளனர் .அதேபோல் ஜன்னலுக்கு கீழே நாட்டிய மங்கைகள் இசைக்கருவிகள் வாசிப்புக்கும் ஏற்ப ஆடும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியை காணலாம் . அம்மனின் சன்னதிக்கும்  சிவபெருமான் சன்னதிக்கும் நடுவில் 3அடி முருகன் வில் ஏந்தி காட்சி தருகிறார்  முருகன் . சிவபெருமான் சன்னதிக்கும் மேல்புறம் இயற்பகை நாயனார் தம்பதிக்கு சிவபெருமான் உமையாளோடு விடையேறி காட்சி தரும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது . சிவபெரும்மன் சன்னதியில் உட்புறம் வலம்வரும் வகையில் காற்றோட்டமாக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் சன்னதிக்கும் அருகிலே நடராஜர் சந்நிதியும் அமைத்துள்ளது .
இந்த ஆலயம் மிகவும் அமைதியான ஒரு தலம் . இங்கு வந்து வழிபடுவது மிகவும் புண்ணிய தலமாகும் . காசிக்கும் நிகரான ஒரு தலம்.இக்கோயில் காலை 7 மணி முதல் 12மணி வரையும் மாலை 4 மணி முதல் 8மணி வரை திறந்திருக்கும் கோயில் .
ஐராவத தீர்த்தம்

சாயாவனநாதர்
வழித்தடம் :
இந்த ஆலயம் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது .சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மி. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறை - பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனம் அடையலாம். மாயவரம் மற்றும் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் அணைத்து பேருந்துகளும் இந்தஆலயத்தை கடந்தே செல்லவேண்டும் .

சாயாவனநாதர் ஆலயமுகப்பு பகுதி
ராஜகோபுர தோற்றம்

                        சாயாவேஸ்வரர் ஆலயம் பூம்புகார் கடற்கரைக்கும் செல்லும் வழியில் உள்ளது . இந்த ஆலயத்தின் அருகில் சாம்பாதிக்கோயில் உள்ளது . இந்த சாம்பதி கோயில் அம்மனே பூம்புகார் நகரின் காவல்தெய்வம் . இந்த ஆலயம் பற்றி சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது . சிலப்பதிகாரச் சான்றுகளுள் இந்த ஆலயமும் ஒன்று . சாயாவனத்தில் இருந்து அரைக் கிலோமீட்டர்  தொலைவு பூம்புகார் செல்லும் வழியில் பட்டினத்தார் கோயில் உள்ளது பல்லவனிஸ்வரர் கோயில் உள்ளது. அருகில் மற்றொரு சிலப்பாதிகார சான்றாக இந்திரவிகாரம் . நாட்டுகோட்டை நகரத்தார் மடத்துக்கும் அருகிலயே உள்ளது . சாயவனத்தில் இருந்து மாயவரம் சாலையில் அரைக்கிலோமீட்டர் பயணித்தால் பத்தினிக்கோட்டம் உள்ளது . இந்த புகுதியின் பெயர் மேலையூர் . பூம்புகார் கடற்கரையை பார்க்க செல்லும்போது வழியில் உள்ள இந்த ஆலயத்தையும் மறக்காமல் தரிப்போம். கீழ்பெரும்பள்ளம் , திருவெண்காடு செல்லும்போது இந்த ஆலயத்தையும் முடிந்தவரை கண்டு வழிபடுவோம் . திருவெண்காட்டில் இருந்து 5 கீமீட்டருக்குள் இந்த ஆலயத்தை அடைந்துவிடலாம் . கீழப்பெரும்பள்ளம் செல்லும் வழியில் பூம்புகாருக்கும் அருகிலே இந்த ஆலயம் உள்ளது . பெரிய ஆலயத்திற்கு தான் சென்று நாம் திரளாக சென்று சாரைசாரையாக சென்று வழிபடுகிறோம் . இதுபோன்ற சிறு ஆலயத்திற்கும் சென்று வழிபடுவோம். புகழ்பெற்ற ஆலயத்திற்கும் செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களையும் நாம் தரிசித்து வருவோம் .இறைவனின் திருவருளால் இந்த ஆலயத்தில் நான்கு கால பூசைகள் நிகழ்த்து வருகிறது . ஆலயத்தை தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரித்து வருகிறார்கள்.

--ஆ.தெக்கூர் இராம.நா.இராமு