நான் கண்ட என்மனதில் நீங்கா இடம்பெற்ற ஆலயம் பற்றிய வராலாறுகள் சிறப்புக்கள் பற்றி தொகுத்து இங்கு எழுத முயல்கிறேன் .அப்படி ஒரு ஆலயம் இந்த திருவதிகை ஆலயமே முதல் தொகுப்பாக இங்கு பகிர்ந்துகொள்ளகிறேன் .
|
ஆலய முகப்பு
|
ஆலய முகப்பு பகுதி |
|
திருவதிகை அழகிய தமிழ் பெயர் கொண்ட ஒரு கிராமம் கெடிலம் ஆற்றின் வடகரைப் பகுதியிலும் பண்ணுருடி எண்ணு ஊருக்கும் அருகில் உள்ளது . இந்த திருவதிகை கடலூருக்கும் பண்ணுருட்டிக்கும் இடையில் உள்ளது . பண்ருட்டியில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள மிகவும் அழகிய ஒரு சிற்றூர் . இங்கு மிகவும் தொன்மையான ஒரு சிவாலயம் உள்ளது .சைவ சமயத்தின் மிகவும் பெரும்பங்கு வகித்த திருநாவுகரசர் சைவத்தை தழுவிய தலம் . சிவபெருமானின் அஷ்ட வீரட்டானத்தில் இந்த தலமும் ஒன்று .என் தந்தை படித்ததும் வளர்ந்ததும் திருவதிகைகும் அருகில் உள்ள பண்ருட்டியில் தான் . என் ஐயா பல முறை மாலை வேளைகளில் சென்று திருவதிகையில் இறைவனை வழிபட்டு பொடிநடையாக திரும்புவார் .ஐயா திருவதிகை பற்றி சொல்லிக் கேட்டதுண்டு. பிரதோஷத்தின் பொது தவறாமல் சென்று வழிபடுவது வழக்கம் இன்று ஐயாவின் வயது இன்று ஆலயம் சென்று வழிபட்டு வர ஒத்துழைக்கவில்லை . வீட்டிலேயே பிரதோஷ பாடல்களை படித்து வழிபாடு செய்துவருகிறார் . எங்க அப்பச்சி இளமை பருவங்களில் தன் தோழர்களுடன் சென்று விளையாடியது சுற்றிபார்த்த பகுதி .என் சிறுவயதிலும் நானும் சென்று பார்த்து வியந்த தலம். நான் 15 வருடங்கள் முன்பு ஒரு மாலைப்பொழுதில் அப்பச்சியுடன் சென்றபோது நான் கண்ட ஒரு காட்சி இன்று யாரும் பார்த்திருக்க முடியாத ஒன்று . சிவபெருமானை உட்பிரகாரம் வளம் வரும் வகையில் சிறிய ஒரு பாதை இருந்தது . இருக்கிறது உடல் பருமனாக உள்ளவர்கள் சுற்றிவர இயலாது படியோறு குறுகிய பாதை .இன்று இந்த பாதை மரக்கதவுகள் போட்டு அடைக்கப்பட்டுள்ளது . ஆணவத்தை அழிக்கும் ஈசன் இவர் .ஆணவம் கொண்டவர்கள் மீண்டும் இங்கு வந்து ஈசனை காணஅனுமதி மறுத்திடும் ஈசன் இவர் என்று என் ஐயா சொல்ல கேட்டுளேன் . இந்த தலம் கைலாயதிருக்கு நிகரான ஒரு தலம்.
திருஅதிகை என்ற பெயர் மருவி இன்று திருவதிகை இந்த தலத்திற்கும் இப்பெயர் வரசில காரணங்கள் கூறப்படுகிறது. தமிழகத்தில் சைவம் தழைக்கும் முன் சமணம் ஓங்கி வளர்ந்து இருந்தது. சமணக் குருமார்களை அதிகைமான்கள் , நந்திகள் என்றும் சமணப்பெரியோர்களை அழைப்பட்டதும் அந்த பகுதிகளில் அவர்கள் வாழ்ந்திருக்ககூடும் அதன்காரணமாக இந்த ஊருக்கும் திருஅதிகை என்று வந்திருக்க வாய்ப்புகள் உள்ளன .திருவதிகை ஆலயம் முற்காலத்தில் வெறும் ஆலயமாக மட்டும் இல்லது வைத்தியசாலை பண்டகசாலை , கலைகூடமாகவும் ,அறச்சாலை , பாடசாலை , அரசாங்க அலுவலகமாகவும் இந்த ஆலயம் விளங்கியுள்ளது . இந்த ஆலயம் ஆயுதக் கிடங்காகவும் விளங்கியுள்ளது . இந்த ஆலயத்தில் சுரங்கப்பாதைகளும் இருந்துள்ளன. இப்படி இந்த ஆலயம் வெறும் வழிபாட்டு தலமாக இல்லாமல் அனைத்து துறையும் சங்கமிக்கும் ஒரு கூடமாகவும் விளங்கியதன் விளைவு பல முறை போர் படையெடுப்புகள் மூலம் அழிவுகளை சந்தித்தது இவற்றை கண்டு அஞ்சி திருவதிகையில் வாழ்ந்த மக்கள் படைஎடுப்புக்கு பயந்து தற்போது உள்ள பண்ணுருடியில் குடியேறினர்.
|
ஆலய சுவற்றில் |
|
ஆலயத்தின் வெளிப்புற தோற்றம்
|
|
நாட்டிய பெண்கள்
|
ஆலய வாயிலில் உள்ள சிற்பங்கள் |
|
|
இரண்டாம் ராஜகோபுரத்தின் முன்பு இருந்து |
மேலும் இவர்களின் வழிவந்த பல பல்லவ மன்னர்கள் தொண்டாற்றியும் பலாயிரம் பொன்னையும் தானமாக வழங்கியும். இங்கு அன்னசத்திரம் அமைத்தும் ஆலயத்துக்கு வரும் சாதுக்களுக்கும் பசியாற அன்னசத்திரம் அமைத்தும் நாவுக்கரசரின் பெயரில் மடம் நிறுவியும் சிறப்பு செய்தனர். அதன் பின் பல்லவனின் வழிவந்தவர்கள் சோழர்கள் இந்த ஆலயத்திற்கும் பல அர்பணிகள் செய்துவந்தனர் . பல்லவர்கள் காலத்தில் இங்கு இந்த ஊரை சுற்றி உள்ள பகுதிகளில் பல புத்தவிகாரங்கள் , பாழிகள் , பள்ளிகள் இருந்ததை உணரும் வகையில் இந்த ஆலயத்தில் மூன்று இடங்களில் புத்தர் சிலைகளை காணலாம் .
இக்கோயில் பல மன்னர்கள் தாக்குதல் நடத்தினர் அதுமட்டும் இல்லது இந்த கோயில் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த பகுதி மாரட்டியர் வசமும் . அதன்பின் முகலாயர்களின் வசமும் சென்றது . 18ஆம் நூற்றாண்டின் போது பிரெஞ்சுகார்கள் வசமும் இருந்தது அப்போது இந்த ஆலயம் போர்காலக்கொடையாக பயன்படுத்தப்பட்டது . மற்றும் இந்த பகுதி பிரிட்ஷ் வசமும் சென்றது . இந்த காலகட்டங்களில் இந்த ஆலயத்தில் விலை உயர்ந்த அணிமணிகள் , அரியபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன . மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் மன்னருக்கும் பின்னோர் என்றுசொல்லப்பட்ட நாட்டுகோட்டை நகரத்தார் சமுகத்தை சேர்ந்தவர்கள் இக்கோயிலை புணரமைத்து குடமுழுக்கும் செய்தனர்
|
ஸ்தல விருட்சம் கொன்றைமரம் . மற்றும் அதன் மருத்துவப்பயன்கள் மற்றும் கொன்றைமரத்தை ஸ்தலவிருட்சமாக கொண்ட தலங்கள்பற்றிய தகவல் |
|
நந்தி தேவர் |
|
ஆலயத்தின் உட்புறத்தில் கொன்றைமரத்தடியில் உள்ள பெரிய லிங்கம் |
|
உட்புறத்தில் உள்ள நந்தி தேவர் |
திருத்தலச் சிறப்புகள்:
சிவபெருமான்
வீரத்திருவிளையாடல் புரிந்த எட்டுத் வீரட்டத்தலங்களுள் இத்தலமும் ஒன்று.
நாவுக்கரசரின் சகோதரி திலகவதியார் ஈசனுக்குத் திருத்தொண்டு புரிந்த தலம்.
திருநாவுக்கரசரை ஆட்கொண்டு சூலை நோய் தீர்த்த பதி. ஞான சாத்திர நூலான உண்மை
விளக்கத்தை அருளிச் செய்தவரும், மெய்கண்ட நாயனாரின் மாணவர்கள் 49ல் ஒருவருமான மனவாசகங்கடந்தாரின் அவதாரப்பதி.
மூவர் பாடல் பெற்ற நடு நாட்டுத்
தலம்.
முப்புரங்களை எரித்த வீரச்செயல் புரிந்த தலம்.
திருநாவுக்கரசர் தனது
முதல் தேவாரத் திருப்பதிகம் பாடி சைவப்பெருநெறிக்கு மீண்டு வந்தது
இத்தலத்தில்தான்.
சிவபிரான் உமையாள் கையை பற்றிய படி திருமணக்கோலத்தில் அருள் புரிந்த அப்பர்பெருமானுகும் திருக்காட்சி புரிந்த தலம்.
அப்பரின்
தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்துவந்த தலம்.
சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான உண்மை விளக்கம் நூலை அருளிய
மனவாசகங்கடந்தார் பிறந்த தலம் இதுவே.
அப்பர் பெருமான் உழவாரப் பணி புரிந்த
தலம் இதுவென்று இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த
சித்தவடமடத்தில் தங்கியதும் இறைவனின் திருவடி தீட்சை பெற்றதும்
இத்தலத்தில்தான்.
திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் திருநடனம் புரிந்த்தது இத்தலத்தில் தான் .
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து சைவநெறிக்கு
மாறி சமணப் பள்ளிகளை இடித்து குணபரவீச்சரம் எழுப்பியது இத்தலத்தில்தான்.
இந்த ஆலயத்தை பார்த்தே ராஜா ராஜா சோழன் பெருவுடையார் கோயிலை தஞ்சையில் அமைத்தார்
தேர் திருவிழா உருவாக வித்திட தலமும் இதுவே.
தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும்.
|
ஆலய உட்புறம் |
தல வரலாலு :
தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.
|
சுற்றுப்பிரகாரத்தில் உள்ள 63நாயன்மார்கள் சந்நிதிகள் |
|
கருவறைக்கும் செல்லும் வழியில் உள்ள உலகின் முதல் முதல் அமைக்கப்பட்ட துவாரபாலகர்கள் சிலைகள் |
|
தீர்த்தக் கிணறு |
மூன்று அசுரர்களும் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடத்திற்கு செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புறங்களையும் வைத்துக்கொண்டு அவர்கள் தேவர்கட்கும் முனிவர்கட்கும் தொல்லைகள் பல கொடுத்துக் கொண்டே வந்தனர். தேவர்கள் ஈசனின் தாழ் பணிந்து புகலிடம் கேட்டனர்.
|
சுற்றுப் பிரகாரத்தில் உள்ள லிங்கத் திருமேனிகள் |
|
பஞ்சமுக லிங்கம் |
ஈசன் தேவர்களைக் காக்கப் பூமியை தேராக்கி, நான்கு வேதங்களை குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய, சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற உலக படைப்புகளையும் வானவர்களையும் போர்கருவிகளாகவும் உடல் உறுப்புகளாகவும் மாற்றினார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று கர்வம் கொள்ளத் தொடங்கின. ஈசன் இப்படையில் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க நினைத்து தேர் தட்டில் கால்வைக்க அதன் அச்சு முறிந்தது. ள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.அமரர்களின் அகந்தையை எண்ணி எம்பெருமான் எள்ளி நகைக்க அவர் சிரித்த உடனேயே வானவர் உதவி ஏதுமின்றி கோட்டைகள் மூன்றும் பொடிபொடியாகின. இச்சம்பவம் நடந்ததுதான் திருவதிகை. சிவபிரான் தேவர்கள் வானவர்கள் உதவி ஏதும் இன்றி தன் புன்சிரிப்பால் அசுரரின் ஆணவத்தையும் தேவர்களது மமதையையும் ஒருசேர அழித்த தலம்
அரக்க மன்னர்கள் மூவரும் சிவபூஜையைத் தவறாது செய்து வந்ததை எண்ணி இருவரைத் தமது வாயில் காப்போராகவும் ஒருவரைக் குடமுழா முழக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டு ஈசன் மறைந்தார். இவ்வாறு மறக்கருணையோடு அறக்கருணையும் புரிந்த பெம்மானின் மூர்த்தத்தை வழிபடும் க்ஷேத்ரம் திருவதிகை. இந்த நிகழ்வே திரிபுர சம்ஹாரம் ஆகும்.
|
கைலாச பர்வத வாகன காட்சி |
|
கருவறை விமான சுதை வேலைப்பாடுகள் |
|
திரிபுர சம்ஹார மூர்த்தி |
|
ஆலய கருவறை விமானம் |
|
அக்னி தேவன் |
திருநாவுகரசர் ( அப்பர் ) பெருமான் வரலாறு :
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் ( திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் )
என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும் மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வந்தார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இறந்துபோக இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலை நோய் தாக்க அவன் துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிக்சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் பாடி முடித்தபின் சூலை நோய் நீங்கப்பெற்று நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.
|
ஆலயத்தின் விமானங்கள் |
|
நடராஜர் மண்டபத்தில் உள்ள வைரவர் |
விழாக்கள் :
திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு 10 நாள் திருவிழா சித்திரை சதயத்தில் நடைபெறுகிறது. விரிசடைக் கடவுள் என்று பழைய தமிழ் நூல்கள் சிறப்பித்துக்கூறும் பெருமை உடையது.
ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள்
மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10நாட்கள்
மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம்
1 நாள் திருவிழா
மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை
கார்த்திகை 5 சோமவாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமி அம்பாள்
1 நாள் உற்சவம்நடைபெறுகிறது
.
|
ராமலிங்க அடிகள் அம்பாள் மீது இயற்றிய திருவருட்பா |
கோயில் அமைப்பு :
இவ்வாலயம் மிகப்பெரிய
ஆலயம் ஆகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடன் 7 கலசங்களுடனும்
காட்சி தருகிறது. கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108
தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி
அளிக்கின்றனர். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள திறந்த வெளி
முற்றத்தில் தென்பக்கம் சங்கர தீர்த்தமும் வடப்பக்கம் பத்மாசக் கோலத்தில்
காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. 5 நிலைகளையுடைய 2வது கோபுர
வாயிலில் உள்ள ஒரு பெரிய நந்தியின் உருவச்சிலை காணப்படுகிறது. 2வது
சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும் அவர் தமக்கை திலகவதிக்கும்
தனித்தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர் சனீஸ்வரர் மற்றும்
துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி சந்நிதி இருக்கிறது.
அம்பாள் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம்.
விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில்
காணப்படுகிறது.உள்சுற்றில் தென்மேற்கே உள்ள
பஞ்சமுகலிங்கம் காணவேண்டிய ஒன்றாகும். இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.
இத்தகைய பஞ்சமுகலிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது.
இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலத்தில் இத்தலம் 218வது தலம்.இங்கு உள்ள சிவமூர்த்தம் 16பட்டைகள் கொண்ட மூர்தமாகும் .
|
சுதை வேலைபாடுகள் |
இத்தலத்தில் இறைவன் பெயர் : வீரட்டேசுவரர், வீரட்ட நாதர், அதிகைநாதர்
அம்மையின் பெயர் : திரிபுரசுந்தரி
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் : கெடிலநதி, சூலதீர்த்தம் (குளம் ), கிணறு திர்த்தம்
|
அம்பாளும் சிவனும் |
பதிகம் பாடியவர்கள்
திருநாவுக்கரசர் - 16
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1
|
அதிகை வீரட்டான ஈசன் |
திருநீறு பூசும் பொது பொதுவாக அண்ணார்ந்து பார்த்து திருநீறு பூசவேண்டும்.ஆனால் இங்கு வழங்கும் திருநீற்றை தலைகுனிந்து பூச வேண்டும் என்பது இந்தலத்தின் தனி சிறப்பு .இங்குள்ள அம்மை மீது இராமலிங்க அடிகள் (வள்ளாளர் ) மீது திருஅருட்பா பாடியுள்ளார்.இங்கு அம்பாளுக்கும் பாதத்தின் அருகே ஸ்ரீ சக்கரம் வைத்து பூசைகள் நிகழ்கிறது.
இத்தலம் சில ஆண்டுகள் முன்பு மீண்டும் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு வெகு விமர்சையாக நிகழ்ந்தது .இந்த ஆலயத்திற்கும் வரும் வழியில் ஒரு திருநந்தவனம் திலகவதியார் பெயரில் உள்ளது அங்கு அவர்க்கும் ஒரு சிறுமண்டபமும் அங்கு தினமும் திலகவதியருக்கு காலை மாலையென இரு வேளையும் விளகேரிக்கப்படுகிறது . இங்கு அப்பருக்கும் சிவபெருமான் திருமணக்காட்சியை காட்டியதால் இங்கு கோயிலும் அருகில் பல திருமனமண்டபங்கள் நிறுவியுள்ளனர் .இங்கு திருமணம் அதிகம் நிகழ்கிறது இங்கு பல புதுமணதம்பதிகள் வந்து வழிபடுகிறார்கள். இங்கு வந்து வழிபடுவதால் அவர்களின் வாழ்வு இனிமையாக அமையும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கை .இத்தலத்து இறவைனின் திருத்தேர் முற்றிலும் பழுதுபட்டது .தற்போது குடமுழுக்கின் பொது தேர் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்துவைக்கப்பட்டடுள்ளது .
இங்கு ஆலயத்தின் உள்ளே புதிதாக 27 நடசத்திர லிங்கங்களும் அவற்றுக்கான விருட்சங்களும். அந்த நட்ச்சதிரம் பற்றிய விபரம் அடங்கிய பலகையும் நிறுவி உள்ளனர் இங்கு அருகிலேயே ஒரு வராகி சிலையும் கிழக்கும் நோக்கி உள்ளது .மேலும் இங்கு நவக்கிரக விருடங்களும் அவற்றின் குணம் பற்றிய பலகையும் வைத்துள்ளனர் .இங்கு நடராஜர் மண்டபத்தின் அருகில் 13 இலைகளை கொண்ட வில்வவிருட்சம் உள்ளது .இங்கு மாலையில் பலர் தியானப்பயிற்சி , யோகாபயிற்சி செய்கின்றனர் .இந்த ஆலயம் மிகவும் அமைதியாகவும் மனதிற்கும் நிறைவாகும் உள்ள ஒரு ஆலயம்.அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது காண வேண்டிய ஒரு ஆலயம் .ஆலயத்திற்கு சென்றால் அங்கு சிற்பிகள் செதுக்கிய கலை வேலைப்பாட்டை சற்று கண்கொண்டு ரசித்து பார்த்துவிட்டு .இறைவனை தொழுதுவிட்டு முடிந்த வரை அசுத்தம் செய்யாமல் தூய்மையாக வைத்து பாதுகாப்போம் .
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகெலாம்
--- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு