Tuesday 2 December 2014

என்னுள்ளம் கவர்ந்த திருத்தலம் 2

சாயவனம் (திருச்சாய்க்காடு)

சாயாவனம் இந்த தலம்  பூம்புகாருக்கு அருகில் உள்ளது. ஆடிமாதம் பூம்புகார் நகரில்  பட்டினத்தார் விழாவினை காணச்செல்வோர் இந்த தலத்தை கண்டிருப்பர் .இந்த தலம் காசிக்கு நிகரான ஒரு தலம்.பூம்புகார் பட்டினத்தார் விழாவை காண சென்றபோது இந்த ஆலயத்தை காண நேர்ந்தது. பார்த்த மாத்திரத்திலேயே மனதை கொள்ள கொண்ட ஒரு தலம்.

" சங்கு முகமாடி சாயா வனம் பார்த்து
 முக்குளமும் ஆடி 
முத்திபெற்று வந்த கண்ணோ  "


என்ற செட்டிநாட்டு  ஆச்சிகள்  தாலாட்டு பாடி குழந்தைகளை தூங்கவைத்த தாலாட்டு வரிகள் இவை . சங்கு முகம் என்று கூறுவது காவேரி ஆறு கடலுடன் கலக்கும் முகத் துவாரத்தில் நீராடுதல் மிகவும் சிறப்பு புண்ணியம் வாய்ந்த ஒன்று . அப்படி சங்குமுகத்தில் தீர்த்தமாடி சாயாவனத்தில் உள்ள ஈசனை வழிபட்டு பின் அருகில் உள்ள திருவெண்காடு தலத்தில் உள்ள மூன்று குளங்களில் (சூரிய தீர்த்தம் ,சந்திர தீர்த்தம் , அக்னி தீர்த்தம் ) நீராடி அங்கு உள்ள சிவபெருமானை வழிபாட்டால் முத்தி கிட்டும் என்பதுநம்பிக்கை  இந்த தாலாட்டில் தெரியவருகிறது .அத்தகைய புகழ் பெற்ற ஒரு தலம்.
முகப்பு வாயில்  சிவபெருமான் ரிஷபத்தின் மீது ஏறி இந்திரனுக்கும் இயற்பகையாற்கும் காட்சி நல்கும் சுதை சிற்பம்
சாயவனம் :

இந்த தலத்திற்கும் இப்பெயர் வரக்காரணம் இங்கு  கோரைப் புற்கள் அதிகம் அடர்ந்து வளர்ந்து காணப்பட்டது .சாய் என்பது கோரைப் புல்லை குறிக்கும் சொல் அதன் பெயரால் இந்த தலம் சாய்க்காட்டுடன் திரு என்ற  அடைமொழியும் சேர்த்து  திருச்சாய்காடும் என்று அழைக்கப்பட்டது . சாயாவனம் .கோரைபுற்கள் அதிகம் காணப்பட்டதால் இந்த தலம் சயாவனம் என்றும் அழைக்கப்பட்டது .

இறைவன் திருப்பெயர் : சாயாவனநாதர் 
இறைவியின் பெயர் :  குயிலினும் இன்மொழி அம்மை 
ஸ்தல விருட்சம் : கோரைப்புல் 
தீர்த்தம் : சங்கு முகம் (காவேரி ), ஐராவததீர்த்தம் 
பாடியவர்கள்: அப்பர் (2) , திருஞானசம்பந்தர் (2)
ஆலயத் தோற்றம் கொடிமரக்கணபதியின் காட்சியும்

ஆலயத்தின் மூன்று நிலை ராஜ கோபுரம்
அதிகார நந்திஉயர்ந்த பீடத்தில்
திருக்கோயில் சிறப்பு :

இக்கோயிலை இந்திரன் , ஐராவதம் , ஆதிசேசன் ,உபமன்யு முனிவர் , இயற்பகையார் , குபேரன் , இந்திரனின் தாய் அதிதி , பட்டினத்தார் ,சிவகலை ஆகியோர் வழிபட்டு மருதீசனையே பிள்ளையாக பெற பெறனர். இங்கு தினமும் இந்திரன் தினமும் பூசிப்பதாக ஐதீகம் .இந்த ஆலயம் காவேரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது .வடகரையில் இந்த தலம் 9வது பாடல் பெற்ற ஆலயம் . இக்கோவில்  274 சிவத்தலங்களில் இதுவும் ஒன்று .
சுற்றுப்ராகாரத்தில் உள்ள விநாயகர் சன்னதி
தேர்போன்ற அமைப்பு 
அம்பாள் பார்வையை மறைக்காமல் வெளியில் செல்லும் பாடியுள்ள ஜன்னல் கீழே நாட்டியமங்கைகள் மற்றும் இசைக்கலைஞர்கள் சிற்பம்

வெளிப்ராகாரம்
வெளிப்பிரகாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமயத முருகன்
சாயாவனனாதர்  , அம்பாள், நடராஜர் , சண்டிகேஸ்வரர்  விமானங்கள்
நவகிரகங்கள் சன்னதியும் வைரவர் சன்னதி உள்ள பகுதி
தேர்போன்ற வடிவின் காட்சி

உட்புறத்தில் அஷ்டஇலக்குமியின் தோற்றம்
வில்லேந்திய வேலவன்: 
இந்த தலத்தில் முருகப்பெருமான் வில் ஏந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ரு சம்ஹார மூர்த்தியாக காட்சி தருகிறார். கடலில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த முருகன் தன் வலது காலில் சிவனால் கொடுக்கப்பட்ட வீர கண்டரமணியை அணிந்திருக்கிறார். இந்த முருகன் ஒருமுகத்துடன் நான்கு கரத்துடன்  கையில் வில் அம்புடன் காட்சிதருகிறார். உடன் மற்இரு கரத்திலும் சேவற்கொடி , வேல் ஏந்தி கட்ட்சிதருகிறார் .எதிரிகளை அழிக்க முருகனுக்கு சக்தி கொடுத்த வேல் எப்படியோ, அதே போல் சிவன் கொடுத்தது தான் இந்த வீர கண்டரமணி. எதிரி பயம் இருப்பவர்கள் இவரை வழிபட்டு சங்கடங்களைச் சமாளிக்கும் தைரியம் பெறலாம்.

வில்லேந்திய வேலவர்
வில்லேந்திய வேலன் சன்னதி

தலவராலறு :

                          ஒருமுறை இந்திரனின் தாயான அதிதிக்கு பூமியில் உள்ள சாயாவனேஸ்வரரை வழிபட வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்ற அவர் பூமிக்கு வந்தார். தாயைக் காணாத இந்திரன், அவர் சாய்க்காட்டில் இருப்பதை அறிந்து, இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து கொண்டான். இந்திரனின் தாயார்  தினமும் இத்தலத்தை தரிசிக்கும் வகையில், இந்த கோயிலையே தனது ஐராவத யானையை வைத்து தேர் பூட்டி இந்திரலோகம் இழுத்து செல்ல முயற்சித்தான்.அப்போது  கோயிலை இழுத்ததுமே பார்வதி குயில் போல இனிமையாக கூவி ஈசனுக்கும் தெரிவித்தாள். (எனவே தான் அம்மனுக்கு "குயிலினும் இனிமொழியம்மை' என்ற திருநாமம் ஏற்பட்டது.) உடனே சிவன் அங்கு தோன்றி, ""இந்திரா! இந்த கோயிலை தேவலோகம் கொண்டு சென்று வழிபடவேண்டும் என்று நினைக்காமல், இங்கு வந்து வழிபட்டு நலமடைவாயாக,'' என அருள்புரிந்தார். ஐராவதம் தேரை இழுக்க முயற்சித்த பொது தன் தந்தம் பூமியில் பட்டு கீர் நீர் வெளிப்பட்டு உருவானதே இங்குள்ள ஐராவத தீர்த்தம்  . சிவபெருமான் கூறியபடியே தினமும் மாலையில் இந்திரன் இங்கு வந்து ஈசனும் பூசை செய்வதாக ஐதீகம்.
சாயாவனநாதர் சன்னதி
தில்லை கூத்தன் சன்னதி
சாயாவனநாதர் சன்னதியின் உட்புறார சிற்பங்கள்
குயிலினும்இன்மொழியம்மை 
வெளிப்பிராகாரத்தில் உள்ள வைரவர்
வெளிப் பிராகாரத்தில் உள்ள இந்திரன் சன்னதி
இயற்பகை நாயனார் வரலாறு :

                                63 நாயன்மார்களில் ஒருவரான  இயற்பகை நாயனார். இவர் பிறந்து, வளர்ந்து ,முக்தியடைந்தது இத்தலத்தில் தான். இவரது மனைவி கற்பினுக்கரசியாரும் சிறந்த சிவ பக்தை.  இயற்பகையார் சிவனடியார்கள் வேண்டும் பொருளையும் பொன்னையும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து சிவத்தொண்டு செய்து வந்தார் .இவர்களது சிவபக்தியை உலகிற்கு எடுத்துக்காட்ட சிவன் விரும்பினார். ஒரு முறை இவர்களது இல்லத்திற்கு, சிவனடியார் வேடமிட்டு வந்தார். இயற்பகையாரிடம், ""நீ கேட்டதையெல்லாம் இல்லை என்று கூறாமல் அள்ளி கொடுப்பவன் என்பதை அறிவேன். எனவே உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை,'' என்றார். இயற்பகையாரும் சிறிதும் யோசிக்காமல் தன் மனைவியை சிவனுடன் அனுப்பி வைத்தார். அதற்கு இவரது மனைவியும் சம்மதித்தார். அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என இயற்பகையார் சிவனடியாரிடம் கேட்க அதற்கு அவர், ""நான் உனது மனைவியை அழைத்து செல்வதால் உனது உறவினர்கள் என் மீது வெறுப்பு கொள்ள நேரிடும். எனவே இந்த ஊர் எல்லையை கடக்கும் வரை எங்களுக்கு நீ பாதுகாப்பு தர வேண்டும்'' என்றார்.
                                  
                                 இயற்பகையார் அதற்கும் சம்மதித்து கையில் பெரிய வாளுடன் சிவனடியாரையும் தன் மனைவியையும் முன்னே செல்ல கூறிவிட்டு அவர்களுக்கு பாதுகாப்பாக பின்னே சென்றார். சுற்றத்தார் அவர்களைத் தடுத்தனர். இயற்பகையார் அவர்களை எல்லாம் வென்றார்.ஊர் எல்லையை அடைந்தவுடன் சிவனடியார், ""நான் உன் மனைவியுடன் செல்கிறேன், நீ ஊர் திரும்பலாம்'' என்கிறார். இயற்பகையாரும் அதன்படி செய்தார். திடீரென அங்கிருந்த சிவனடியார் மறைந்து, வானத்தில் அன்னை உமையவளுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி,""நீ உனது துணைவியாருடன் இந்த பூவுலகில் பல காலம் சிறப்புடன் வாழ்ந்து என் திருவடி வந்து சேர்க'' எனக்கூறி மறைந்தார்.அவ்வாரே அவரும் அவர் துணைவியும் சிறப்புற பல தொண்டுகள் புரிந்து இத்தலத்தில் இருந்து கைலயம்பதி சென்றடைந்தனர் .மனிதன் மனஉறுதி மிக்கவனாகவும், தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த நாடகம் இறைவனால் நிகழ்த்தப்பட்டது.
இயற்பகையார் மற்றும் அவர் மனைவி வெளிப்பிராகாரத்தில் உள்ள சன்னதி

இறைவன் இயற்பகையாற்கும்  காட்சி நல்கிய ஓவியம்  இறைவன்சன்னதிக்கும்முன் உள்ள ஓவியம்
திருவிழா :
  • சித்திரைப் பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாள்களுக்கு நடைபெறுகிறது. 
  • ஆடி அமாவாசையில் அன்னமளிப்பு.
  • சித்திரை வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப் பந்தல்.
  • வைகாசியில் குமரகுருபரர் பூஜை.
  • மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு ஐந்துநாள் விழா அதில் நான்காம் நாளிரவு இறைவன் காட்சி கொடுக்கும் விழாக்களும் நடைபெறுகின்றன.
பிரதோஷ நாயகர் வெள்ளி ரிஷபத்தின் மீது
ஆலயத்தோற்றம் :

          கோபெருஞ்சிங்கன் என்ற சோழ மன்னன் நிறைய சிவாலயங்கள் கட்டினான். அதில் மாடக்கோயில்கள் தான் அதிகம். மாடக்கோயில் என்றால் "யானையால் புக முடியாத கோயில்' என்பதாகும். இக் கோயிலும் ஓர் மாடக்கோயிலாகும். இந்த ஆலயம் தேர் வடிவில் ஆனது .இங்கு 13 கல்வெட்டுகள் உள்ளன.சோழர்காலக் 10 கல்வெட்டுகளும் பாண்டியர்கள் கால 3 கல்வெட்டுகளும் உள்ளன .கோயில் குளத்திற்கு தெற்கில்  அமைந்துள்ளது.  மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் முகப்பு வாயிலைக் கடந்ததும் கொடி மரம் இல்லை. கொடிமரத்து விநாயகர் மட்டும் உள்ளார். மாடக் கோயிலாதலின் நந்தி உயரத்தில் உள்ளார். வெளிப்பிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகைநாயனார் ,மங்கையர்க்கரசியாருடன் உள்ள சன்னதிகள் உள்ளன.அடுத்துள்ள நால்வர் சன்னதியில் "மூவர் முதலிகளே' உளர். விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, சற்று பெரிய உயர்ந்த பீடத்தில் பைரவர், நவக்கிரக சன்னதி முதலிய சன்னதிகளைத் தொழுதவாறே வலம் முடித்து படிகளேறி, வெளவால் நெத்தி மண்டபத்தை அடைந்தால் வலப்பால் பள்ளியறையும் பக்கத்தில் அம்மன் சன்னதியும் உள்ளனஅம்மன் சன்னதியை தனியாக உட்புராரம் வலம்வரும் வகையில் அமைந்துள்ளது . அம்மையின் பார்வையை மரிக்காமல் பார்வை வெளியில் படும்படி கற்ஜன்னல்  எதிரில் அமைத்துள்ளனர் .அதேபோல் ஜன்னலுக்கு கீழே நாட்டிய மங்கைகள் இசைக்கருவிகள் வாசிப்புக்கும் ஏற்ப ஆடும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ள காட்சியை காணலாம் . அம்மனின் சன்னதிக்கும்  சிவபெருமான் சன்னதிக்கும் நடுவில் 3அடி முருகன் வில் ஏந்தி காட்சி தருகிறார்  முருகன் . சிவபெருமான் சன்னதிக்கும் மேல்புறம் இயற்பகை நாயனார் தம்பதிக்கு சிவபெருமான் உமையாளோடு விடையேறி காட்சி தரும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது . சிவபெரும்மன் சன்னதியில் உட்புறம் வலம்வரும் வகையில் காற்றோட்டமாக மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் சன்னதிக்கும் அருகிலே நடராஜர் சந்நிதியும் அமைத்துள்ளது .
இந்த ஆலயம் மிகவும் அமைதியான ஒரு தலம் . இங்கு வந்து வழிபடுவது மிகவும் புண்ணிய தலமாகும் . காசிக்கும் நிகரான ஒரு தலம்.இக்கோயில் காலை 7 மணி முதல் 12மணி வரையும் மாலை 4 மணி முதல் 8மணி வரை திறந்திருக்கும் கோயில் .
ஐராவத தீர்த்தம்

சாயாவனநாதர்
வழித்தடம் :
இந்த ஆலயம் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது .சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருவெண்காடு தாண்டி 3 கி.மி. தொலைவில் உள்ளது சாயாவனம் கிராமம். சாயாவனேஸ்வரர் கோவிலுக்கு அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. சாலையோரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறை - பூம்புகார் சாலை வழியாகவும் சாயாவனம் அடையலாம். மாயவரம் மற்றும் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் அணைத்து பேருந்துகளும் இந்தஆலயத்தை கடந்தே செல்லவேண்டும் .

சாயாவனநாதர் ஆலயமுகப்பு பகுதி
ராஜகோபுர தோற்றம்

                        சாயாவேஸ்வரர் ஆலயம் பூம்புகார் கடற்கரைக்கும் செல்லும் வழியில் உள்ளது . இந்த ஆலயத்தின் அருகில் சாம்பாதிக்கோயில் உள்ளது . இந்த சாம்பதி கோயில் அம்மனே பூம்புகார் நகரின் காவல்தெய்வம் . இந்த ஆலயம் பற்றி சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ளது . சிலப்பதிகாரச் சான்றுகளுள் இந்த ஆலயமும் ஒன்று . சாயாவனத்தில் இருந்து அரைக் கிலோமீட்டர்  தொலைவு பூம்புகார் செல்லும் வழியில் பட்டினத்தார் கோயில் உள்ளது பல்லவனிஸ்வரர் கோயில் உள்ளது. அருகில் மற்றொரு சிலப்பாதிகார சான்றாக இந்திரவிகாரம் . நாட்டுகோட்டை நகரத்தார் மடத்துக்கும் அருகிலயே உள்ளது . சாயவனத்தில் இருந்து மாயவரம் சாலையில் அரைக்கிலோமீட்டர் பயணித்தால் பத்தினிக்கோட்டம் உள்ளது . இந்த புகுதியின் பெயர் மேலையூர் . பூம்புகார் கடற்கரையை பார்க்க செல்லும்போது வழியில் உள்ள இந்த ஆலயத்தையும் மறக்காமல் தரிப்போம். கீழ்பெரும்பள்ளம் , திருவெண்காடு செல்லும்போது இந்த ஆலயத்தையும் முடிந்தவரை கண்டு வழிபடுவோம் . திருவெண்காட்டில் இருந்து 5 கீமீட்டருக்குள் இந்த ஆலயத்தை அடைந்துவிடலாம் . கீழப்பெரும்பள்ளம் செல்லும் வழியில் பூம்புகாருக்கும் அருகிலே இந்த ஆலயம் உள்ளது . பெரிய ஆலயத்திற்கு தான் சென்று நாம் திரளாக சென்று சாரைசாரையாக சென்று வழிபடுகிறோம் . இதுபோன்ற சிறு ஆலயத்திற்கும் சென்று வழிபடுவோம். புகழ்பெற்ற ஆலயத்திற்கும் செல்லும் வழியில் உள்ள பழமையான ஆலயங்களையும் நாம் தரிசித்து வருவோம் .இறைவனின் திருவருளால் இந்த ஆலயத்தில் நான்கு கால பூசைகள் நிகழ்த்து வருகிறது . ஆலயத்தை தூய்மையாகவும் சிறப்பாகவும் பராமரித்து வருகிறார்கள்.

--ஆ.தெக்கூர் இராம.நா.இராமு


No comments: