Wednesday, 26 August 2020

செட்டிநாடும் நகரத்தார் அணிமணிகளும்

தங்கத்தின் மீதான நமது ஆர்வம், 5000 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தின்போதே மக்கள் மத்தியில் தொடங்கியவிட்டது. தங்க நகையின் வரலாறு நாட்டின் வரலாற்றையும் செழுமையையும் எடுத்துரைக்கிறது. கலாச்சாரம், வரலாறு மற்றும் அதன் அழகியலின் பளிச்சென்ற வெளிப்பாடே தங்க நகை. இலக்கியம், பழங்கதைகள், புனைவுகள் மற்றும் கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்ட இவை பாரம்பரியத்தின் சான்றாக விளங்கும் இதற்கு உலகில் ஈடுஇணையே இல்லை.சிந்து சமவெளி நாகரிகம்,ஹரப்பா மொகந்தஜாரோ நாகரிகம் அகழ்வாய்வுகளில் பொன்னால் செய்த நகைகள் கிடைத்துள்ளன.தங்கத் தகட்டிலான நெற்றியில் அணியும் ஆபரணத்தின் தாக்கத்தைக்  கொண்டிருக்கிறது.  மொஹஞ்சதாரோவின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்திய நகை மிகவும் பயன்பாடு மென்மையானதாகவும் நுணுக்கமானதாகவும் மாறியிருந்திருக்கின்றது. சங்க காலத்தின் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் தங்கம் விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் முத்துக்களைப் பயன்படுத்திய தமிழ் சமூகத்தைப் பற்றிக் கூறுகிறது. இதனை அடிப்பயாக கொண்டு பார்க்கும்போது தமிழர் அழகியலில் அணிகலங்களுக்கு  ஒரு முக்கிய இடமுண்டு. பண்டைய காலம்தொட்டு நகைகளை ஆக்குவதும் அணிவதும் தமிழர் பண்பாட்டில் ஒரு முக்கிய. அம்சமாக  இருந்துவந்துள்ளது. பொன்னாலும் நவமணிகளாலும் (வைரம், மரகதம், மாணிக்கம், புட்பராகம், வைடூரியம், நீலம், கோமெதகம், முத்து, பவளம்) ஆன அணிகலன்களே தமிழருள் மதிப்பு பெற்றவை. "அம்மதிப்பு பணமதிப்பு (பொருள் மதிப்பு) மனமதிப்பு என இரண்டாகும்."  இத்தகைய தமிழர்களால் ஆக்கப்பட்ட அணியப்பட்ட அணிகலன்களைத் தமிழர் அணிகலன்கள் எனக் குறிக்கலாம். அவ்வகையில் தமிழ் சமூகத்தின் அங்கமான ஒவ்வொரு குமுகாகங்களும் தங்களுக்கு என்று தனித்துவமான சில அணி மணிகளை பயன்பாட்டில் கொண்டு இருந்துள்ளனர். இக்கட்டுரையில் நகரத்தார் சமுகத்தில் பயன்பாட்டில் இருந்த அணிகலன்கள் பற்றி சற்று விரிவாக பார்போம்.

நகரத்தார்கள் சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினம் நகரத்தை  பூர்வீகமாக கொண்ட வணிகர்க்குழு.பின்னர் சில காரணங்களால்  பாண்டிய நாட்டினெல்லை பகுதியில் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். இவை. தமிழ்நாட்டின் தற்போதைய சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களை பூர்வீகமாகக் கொண்டு நகரத்தார்கள் வாழும் இந்த பகுதி செட்டிநாடு என்று இன்று  அழைக்கபடுகின்றது. வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். லேவாதெவி தொழிலில் அதிக முனைப்போடு 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை இருந்தனர். சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்ததில் நகரத்தார்களின் பங்கு அதிகம் உள்ளது. நகரத்தார்களின் திருமண பதிவு ஆவணமாகிய இசைப் பிடிமானத்தில் மணப்பெண் அணியும் சில அணிமணிகள் பற்றிய குறிப்பு காணப்படுகின்றன அவை பூஷணம், மோதிரம்,பொன்வளையல் என்பவை இதில் இடம் பெறுபவை இவற்றுல் பூஷணம் என்பது கழுத்துருவை குறிக்கும் என்று சில தமிழ் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
இன்று இந்தியாவில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களில் 40% செட்டிநாடு பகுதியை சார்ந்தவர்கள் . பொதுவாக 5 சென்ட் வைரங்களை சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற பல்வேறு பகுதி மக்கள் வாங்குகின்றனர் ஆனால் செட்டிநாடு பகுதி மக்கள் குறைந்தபட்ச 25 சென்டுகள் வைரைத்தை அணிய பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது. ஆனால் முற்காலத்தில் நகரத்தார்கள் மாணிக்கம் கற்களையே தங்களின் வாழ்வியலில் பயன்படுத்தியுள்ளர். தாய்லாந்து, கம்போடியா,பர்மா போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன இலங்கையிலும்  மாணிக்கத்தை காட்டிலும் நீலம் அதிகளவில் கிடைக்கிறது இவற்றையே நகரத்தார்கள் தங்கள் வணிகத் தொடர்பின் காரணமாக பயன்படுத்தி வந்துள்ளனர். மேலும் இத்தோடு முத்து, மரகதத்தின் பயன்பாடும் நகரத்தார்கள் மத்தியில் அதிகளவில் இருந்துள்ளதை  நம்மால் காணமுடிகிறது. செட்டிநாட்டு நகைகள் என்பதனை இரண்டாக பிரிக்கலாம் சடங்குக்கான நகைகள் மற்றும்  ஆபரணவகைகள் என்று வேற்றுமை படுத்திபார்க்க முடியும்.சடங்குசார் நகைகள் என்று பார்த்தால் கழுத்திரு மற்றும் கவுரிசங்கம் போன்றவை விஷேச தினங்களில் பயன்படுத்தும் ஆபரணங்களாகவும் தனித்துவமான ஒன்றாகவும் பார்க்கமுடியும்.

திருச்சோடிப்பு என்ற கழுத்திரு :
 நகரத்தார்களின் தனித்துவமான அடையாளங்களில் ஒன்று கழுத்திரு என்ற திருமங்கலநாண். இதனை திருச்சோடிப்பு ,கழுத்துரு அல்லது கழுத்திரு என அழைக்கப்படுகின்றனது. 
திருவானவள் அழகுற பெண்ணின் கழுத்தில் நின்று அலங்கரிக்கின்றாள் எனவும் மணமகளின் கழுத்தில் உருக்கொண்டிருப்பதால் கழுத்துரு எனவும் மணமகளின் கழுத்தில் திருவாக இருப்பதால்  கழுத்திரு  எனவும் சொல்லப்படுகின்றது. கழுத்திருவாகிய திருமங்கல நாணில் மொத்தம் 34 உருப்படிகள் கொண்டவை அவை திருஏத்தனம் -1 ,ஏத்தனம் -4, திருமங்கலம் -1, உரு - 19 ,சரிமணி -4,கடைமணி -2 , துவாளை -1,குச்சி -1,தும்பு -1 . குச்சி,தும்பு,துவாளை ஆகிய மூன்று உறுப்புகள் திருப்பூட்டுதலின் போது கழுத்துருவில் இணைக்காமல் மணமகன் மூன்று முடிச்சை போடுகிறார்,,பின்னர் இம் மூன்றும் இணைக்கப்படுகிறது.

நகரத்தார் திருமணத்தில் திருப்பூட்டுதல் என்றே சொல்லும் வழமை இன்றுவரை உள்ளது அதன் காரணம் மணமகளின் கழுத்தில் மணமகன் திருவாகிய திருமங்கலநாணை, கடைமணிகளில்   இருந்து வரும் புற அக  நாண்களின்  இருமுனையையும் குச்சி, தும்பு  இடை, துவாளை இட்டு  பூட்டுவதால் திருப்பூட்டுதல் என்று அழைக்கப்படுகிறது. அதுபோல்  பூண் என்பது நகை குறிக்கும் ஒர் தமிழ்சொல்லாகவும் உள்ளது. பூணைப் பூட்டுதல் என்பதே சரியான தொடர் ஆதலால் திருப்பூட்டுதல் என்பது நல்ல இலக்கிய வழக்கு இதனை இன்றுவரை நகரத்தார் மட்டுமே வழங்குகின்றனர். கழுத்திருவின் புறநாண் என்பது மணமகனின் கடமையையும் அகனாண் மணமகளின் கடமையும்  கழுத்துருவில் அகம் புறப் பணிகள் யார் யாருடையதென தெளிவு படுத்தப்பட்டதுடன் -புறத்தில் ஆண் நாண் அகத்தில் பெண் நாண் என்பதனை சுட்டுவதாகவே அமைக்கப்பட்டுள்ளது.
வணிகனின் இல்வாழ்க்கையில், வணிகம் சார்ந்த புற பணிகளை வணிகனான  மணமகன்,  திருஏத்தனம்  துணையை  மனதில் உரு ஏற்றி, பல உருவாக தன் இரு கைகள் எனும் ஏத்தனத்தால் அறவழியில் செய்து திருவை ஈட்டுதலையும் மணமகள் கணவன் ஈட்டிய திருவை தன் இருகை ஏத்தனம் கொண்டு சிந்தாமல் சிதறாமல் பெற்று அதை பல உரு ஆக்கி திருமகளாய் அகத்தில் என்றென்றும் கொலு வீற்றிருப்பதனையும் ஆண், பெண் இருபாலர் குறியீடாக கழுத்துரு  இருப்பது வெளிப்படுத்துகின்றது. பண்டைய காலங்களில், கடற்கரை நகரமான பூம்புகார் போன்ற இடங்களில் வாழ்ந்தபோது இயற்கை பொருட்களான,நண்டின் கால்களை பதப்படுத்தியும், முத்து, பவளம் சேர்த்தும் செய்ததாகவும் பின்னர் உலோகங்களான வெள்ளீயம், பித்தளை, வெள்ளிக்குமாறி தற்போது சில நூற்றாண்டுகளுக்கு  மேலாக தங்கத்தில் செய்துவருவதாகவும் நம்பப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து கிடைக்கு கழுத்திருக்கள் அளவில் மிகப்பெரியதாகவும் அதாவது  300 விராகன் எடை கழுத்திரு கிட்டத்தட்ட 1 கிலோ என்ற அளவில் நேர்த்தியாகவும் செய்தி பயன்படுத்தும் வழக்கு இருந்துள்ளது.அதன் பின் மெல்ல கழுத்திரு அளவு குறைந்து கொண்டே வந்து தற்சமயம் 11 பவன் எடையில் செய்யப்படுகின்றன.  கழுத்துருவை திருமணத்திற்கு பின்னர் மணிவிழா பிறை ஆயிரம் கண்ட பெருவிழா ஆகியவற்றின் விழா நாயகியாக உள்ள மகளிர் அணிந்து கொள்வது வழக்கமாக உள்ளது. மேல்பத்தூர், மேல வட்டகை போன்ற பகுதிகளில் திருமணத்தன்றும்  மணமகனின் தாய், சகோதரி ஆகியோர் கழுத்தில் அணியும் பழக்கம் இன்றுவரை உள்ளது. அதுபோல் துக்கன நிகழ்வுகளின் போது கழுத்திரு கட்டும் வழக்கம் இப்பகுயினரிடம் உள்ளது.

திருவாதிரை கழுத்திரு

திருவாதிரை புதுமையின் என்பது நகரத்தார் குமுகாயத்தில் பத்து வயது முதல் பதினோரு வயசுப் பெண்களுக்கு திருவாதிரைப் புதுமை செய்வார்கள்அக்காலத்தில் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரத்தன்று பெண்ணுக்கு செய்யப்படும் ஒருவகை சடங்கு இதனை அரைக்கல்யாணம் என்று அழைக்கப்படும் இதன் மூலம் எங்க வீட்டுல கல்யாணத்துக்கு பெண் இருக்கின்றாள் என்பதனை அறிவிக்கிற சடங்காவும் இது நிகழ்த்தப்பட்டது. அப்போது  இந்த புதுமைகழுத்திரு என்ற அணிகலன் பெண்ணுக்கு அணிவிக்கப்படும். புதுமை  கழுத்திரு என்பது மொத்தம் 5 உருப்படிகள் கொண்டு  அவை திருஏத்தனம் -1 ,ஏத்தனம் -2,  உரு -2 கொண்டு திருமங்கல நாணில் இணைத்து பூட்டப்படும் அத்துடன் சூரியபிறை, சந்திரபிறை ஜடைநாகம், மாங்காய் மாலை, பவுன் மாலை , காசுமாலை கையில குடங்கை ஒட்டியாணம் என்றுப் வைரம்,மரகதம் மற்றும் மாணிக்கம் கற்கள் கொண்டு செய்யப்பட்ட நகைகள் கொண்டு அலங்கரித்து சிவாலயத்திற்கோ பிள்ளையார் கோவிலுக்கோ சென்றுவருவதை ஒரு சடங்காக நிகழ்த்தப்படும். இவ்விழா தற்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது. 

"காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்" 

மணிவாசகரின் மார்கழி நீராடல்  என்ற 14 வது திருவென்பாவை பாடலை
ஆதாரமாக வைத்து தலை முதல் கால்  வரை வைரநகை அணிவித்து தங்கள் பெண்டுகளுக்கு  மார்கழித்  திருவாதிரைப் புதுமை விழாவை  செய்து மகிழ்ந்துள்ளனர் இதன் மூலம் நகரத்தார்கள் சைவத்தின் மீதும் சைவசிந்தாந்ததின் மீதும் கொண்ட ஈடுப்பாட்டை நம்மால் நன்கு உணரமுடிகிறது. 

கௌரிசங்கம் என்ற சிவகண்டி

கௌரிசங்கம் என்பது தற்கால பேச்சுவழக்கில் சொல்லப்படும் ஐந்து முக உருத்திராட்சம் கொண்டு செய்யப்பட்ட மாலையாகும். இது உண்மையில் கவுரிசங்கம் என்பது இரண்டு முக உருத்ராட்சத்தை சுட்டு ஒர் சொல். நகரத்தார்கள் சைவர்கள் என்பதால் திருமணத்திற்கு முன்பு தங்கள் குருபீடங்களில் உபதேசம் கேட்பது தங்களின் தலையாய கடமையாக கொண்டிருந்தனர் அப்போது ஆண்கள் அணியும் முக்கிய அணிகளில் இதுவும் ஒன்று. அதன் பின் சாந்தி கலியாணத்தின் போதும்  தாய் தந்தையாரின் இறப்பின் போது அதுசார்ந்த சடங்கின் போதும் அணிந்து கொள்ளும் வழமையான அன்று நகரத்தார்கள் கொண்டிருந்தனர். கவுரி+சங்கரர் அதாவது அர்த்தநாரீஸ்வர தத்துவம் சிவன் மற்றும் சக்தியின் சேர்க்கையை சுட்டும் சொல். சிவசக்தியின் சேக்கையே உலகின் இயக்கமாக சைவர்கள் நம்புகிறார்கள் மேலும் இதன் அடிப்படையில் இவ்வகை உருத்ராட்சம் சக மனிதர்களுடனான உறவுகளை மேம்படுத்தும் திறன் மற்றும் இல்வாழ்க்கையினை மேம்பபடுத்தும் போன்ற நம்பிக்கைகள் உண்டு. இதன் காரணமாக நகரத்தார்கள் உருத்திராட்ச மாலையின் மையப்பகுதியில் சிவசக்தியின் உருவங்களை காட்ட முற்பட்டனர். 
கௌரிசங்கரம் என்பதே இதன் சரியான சொல்லாடல் இதனை சிவகண்டி என்றே அன்று நகரத்தார்கள் அழைத்து வந்துள்ளனர் காலபோக்கில் இச்சொல்லாடல் வழக்கொழிந்துவிட்டது. இந்த கௌரிசங்கத்தில்  உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள், தொங்கட்டான் மற்றும் கழுத்துபகுதியில் ஒரு தொங்கட்டான் போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகிறது. தற்காலத்தில் வெள்ளியில் செய்து தங்க உலாம் பூசி பயன்படுத்துகின்றனர் இந்தத் தொங்கட்டானில்  முன்பகுதியில் பெரும்பாலும் இடபாருடர் எனும் இடப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும் அதன் கீழ்புறம் உள்ள குழியில் இருமுக உருத்திராட்சம் வைக்கப்பட்டு இருக்கும்.இதன் பின்புறம் நடராசர் சிவகாமி மற்றும் பிள்ளையார் முருகனின் உருவங்களை செதுக்கியிருப்பர்.ஆனால் முற்காலத்தில் பயன்பாடில் இருந்த கவுரிசங்கங்கள் முழுக்க முழுக்க இருமுக உருத்திராட்சம் கொண்டு செய்து அதில்  அம்ம்பாள் சிவபூசை , நடராசர் சிவகாமி , பாலமுருகன் , சண்முகர் போன்ற உருவங்களும் முன்பகுதியில் காட்டப்படும் வழக்கம் இருந்துள்ளது. இந்த கவரிசங்கத்தில் காணப்படும் நுண்ணிய வேலைப்பாடு செட்டிநாட்டு கம்மாளர்களின்  கலைத்திறனுக்கு ஒர் சிறந்த சான்றாகும்.

 நகரத்தார் குமுகாயத்தினர் பயன்படுத்தும் ஆபரணங்கள் என்று பார்த்தால் இதனை மூன்றாகப் பிரிக்கலாம் அவை பெண்டிர் அணிமனிகள், ஆடவர் அணிமணி, குழந்தைகள் அணிமணி.
ஆண்கள் அணி மணிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் முற்காலத்தில் கவுடு (கழுத்திலணிவதும் பொற்குவளையில் பூட்டிய உருத்திராட்சமணி்), கழுத்துச் சங்கிலி, குருமாத்து என்ற கைச்சங்கிலி, தங்கச்சங்கிலி, வைர மோதிரம் தங்க மோதிரம், அரும்புதடை, ரத்தினமோதிரங்கள், நவரத்தின மோதிரம், உருத்ராட்ச மாலை, நவகண்டி மாலை, மகரகண்டியும், தங்க அரைஞான் கயிறு, ரத்தினகடுக்கன், முடிச்சுகடுக்கன் போன்றவை அணிகளை பயன்படுத்தி இருக்கின்றனர். நகரத்தார் ஆண்கள் கார்த்திகைபுதுமை, உபதேசம்கேட்டல், திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில் கட்டாயம் பயன்படுத்தும் அணிகளாக அன்று இருந்தவை மயூராகண்டி, மகரகண்டி,முத்து மாலை, புலிநகம் போன்றவற்றை அணிந்துள்ளனர் மேலும் அக்காலத்தில் தலைப்பாகை அணியும் வழக்கம் நகரத்தார் மத்தியில் இருந்துள்ளது தலைப்பாகையை விசேஷ காலங்களில் நன்கு அலங்கரித்து பயன்படுத்தியுள்ளனர் அந்த தலைப்பாகையில் வடநாட்டு நகைகளாக கருதப்படும் கலிங்க துராயையும் பயன்படுத்தியுள்ளனர் இவற்றை ரத்தினக் கற்கள், மரகதம் மட்டும் அல்லாது பட்டை தீட்டப்படாத வைரம்  போன்ற கற்கள் கொண்டு செய்தும் பயன்படுத்தி உள்ளனர். இவற்றை ஆடவர்கள் மட்டும் இல்லாது பெரியவர்களும் தங்களின் விழாக்களில் உபயோகித்துள்ளனர் இவையும் மாணிக்கம் மரகதம் வைரம் போன்ற நவரத்தின கற்களை கொண்டு நேர்த்தியான வடிவமைத்து பயன்படுத்தியுள்ளனர். தற்கால வழக்கத்தில் மகரகண்டி, மயூரகண்டி, தாழிபதக்கம், தங்க அரைஞாண் கயிறு போன்றவையின் பயன்பாடு இல்லை. தற்காலத்தில் மகரகண்டி, மயூரகண்டி என்பது மயில் பதக்கம் என்ற பெயரில் பயன்படுத்துகின்றனர் இந்த பதக்கத்தின் மையப்பகுதியில் தோகை விரித்த மயில் உருவம் காட்டப்பட்டுள்ளது இதனையே திருமணத்தின்போது ஆடவர்கள் அணிகின்றனர் அதுபோல் தற்காலத்தில் பெரியவர்கள் தங்களது மணி விழாக்களில் கவுரிசங்கம் மட்டுமே அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 நகரத்தார் ஆச்சிகள் பயன்படுத்திய அணிகள் என்று சற்று விரிவாக காதில் அணிந்தவை என்று பார்த்தால்  சந்திரபாணி, தொங்கட்டான், குச்சி, கொப்பு போன்றவை பயன்பாட்டில் இருந்துள்ளன. சந்திரபாணி என்பது காதோலையை ஓத்த ஒருவகையான காதணி. சற்று சிறிய அளவில் தங்கத்தால் காதோலை செய்து அதன் மையப்பகுதியில் ரத்தினக் கற்களை கொண்டு நிரப்பி காதில் அணியப்பட்டது. இதுவே பின்னாளில்  13 கல் 11 தோடாக உருகொண்டது இதனோடு மாட்டலும் பின் பயன்பாட்டுக்கு வந்தது மாட்டல்கள் ரத்தின கற்கள் பதித்தும் தங்கத்தால் செய்தும் அக்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். 
காலவெள்ளத்தில் இன்று தோடு தொங்கட்டான் மாட்டல் மட்டுமே பயன்பாடில் உள்ளது வெகுசிலரிடம் மட்டுமே கொப்பு போடும் பழக்கம் இன்று உள்ளது. மூக்கினில் அணி பூட்டுவது என்பது  நகரத்தார்கள் மத்தியில் குறைவாகவே அக்காலத்தில் இருந்துள்ளது பெரும்பாலும் மூக்கின் இரு பகுதியிலும் வைர மூக்குத்தி அணிவது வழக்கில் இருந்துள்ளது இந்த  வழக்கம் பெரும்பாலும் நாயக்கர்களின் தாக்கத்தால் நகரத்தார் மத்தியில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

 நகரத்தார் பெண்களின் பயன்பாட்டில் இருந்த கழுத்தணி வகைகளாக சவுடு ( தங்கத்தால் செய்த ஒரு வகை கழுத்தை நெருக்கி அணியப்படும் இதன் மையத்தில் சிறு மாணிக்கபதக்கம் மட்டும் கொண்டிருக்கும் பிற சமூகத்தினர் இதனை அட்டிகை என்று அழைப்பர் ), மணிக்கோவை/ நெல்லிக்காய் மாலை(தங்க மணியும் பவளமும் இணைத்து கோர்க்கப்பட்ட அணிகலன்), கை கட்டை(சிறிய அளவிலான தங்கம் மணிகளும் பவளமும் சேர்த்த செய்யப்பட்ட ஒரு வகை அணி), வெள்ளியால் செய்த இடைச்சூரி/காரி(வெள்ளியால் செய்த மணிகளை இடையில் கோர்த்து கழுத்தில் அணியும் ஒரு வகை வளையம்), கண்டசரம்(கண்டத்தை ஒட்டி அணியும் ஒரு வகை அணி மாணிக்கம்/ வைர கற்கள் கொண்டு சற்றும் பட்டையாய அணியப்படும்), பூச்சரம் ( இதுவும் மரகதம்/மாணிக்கம்/வைர கற்கள் கொண்டு சற்றும் சற்று பெரிய அளவில் பட்டையாய செய்யப்பட்டு அதில் அரும்புகள், பூக்கள், கொடிகள் என்று மிக நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட அணிகள் ) மங்களசரம் (வைரத்தாலியும் அதன் துணை உறுப்புகளாக தாயத்து, பொட்டு மற்றும் சங்கிலிப்பகுதியையும் மாணிக்கம் / வைர கற்கள் கொண்டு செய்து அணியப்படும் அணிகலன்) இவற்றுள் சவுடு, இடைச்சூரி,கைக்கடை போன்றவை அன்றைய காலகட்டத்தில் தினமும் பயன்படுத்தும் கழுத்தணிகளாக இருந்து வந்துள்ளன.திருமணமான பெண்கள் தங்களின் தாலியில் காசுகள், ரத்தினம் தாயத்துகள், பவளங்கள், பவளமணிகள் போன்றவற்றை தங்களது தாலியோடு சங்கிலியுடன் இணைத்து அணிந்து வந்துள்ளனர். மற்ற சமூகத்தவர்களை போல அக்காலக்கட்டத்தில் ஆச்சிகள் மத்தியிலும் காசுமாலை, மோகனமாலை, நவரத்தினமாலை, மாங்காய்மாலை, முத்துமாலை, பாசிமாலை போன்ற கழுத்தணிகள் புழக்கத்தில் இருந்துள்ளது. தற்காலத்தில் சவுடு,  மணிக்கோவை/ நெல்லிக்காய் மாலை, கை கட்டை,இடைச்சூரி/காரி போன்றவை வழக்கில் இல்லை. நகரத்தார் சமூகத்தில் தங்கச் சங்கிலியில் தாலியை கோர்த்து அணியும் பழக்கம்  உள்ளது திருமணத்தின்போது பெரிய தாலி  சின்ன தாலி என்று  இரண்டு தங்கத்தாலி அணிவிக்கப்படும் இதில் ஒன்றை மட்டுமே அன்றாட வாழ்வியல் அணிந்து கொள்ளும் வழக்கம் இன்றுவரை உள்ளது. நகரத்தார் தாலி என்பது பிற சமூகத்தைவிட சற்று  வேறுபட்டு  நடுவில் வீடு போன்ற அமைப்பும் இருபுறமும் மகாலட்சுமி பொட்டும் உடையதாக காணப்படுகின்றது. 

கையில் அணியும் அணிகளாக அன்று பயன்பாட்டில் இருந்தவை திருகுகாப்பு, கங்கணம்காப்பு, தங்ககாப்பு, ரத்தினகாப்பு, தங்கத்தாலான தோள்வளை தின பயன்பாட்டிற்கான வெள்ளியாலான தோள்வளை மற்றும் அரும்புதடை, வங்கிமோதிரங்கள், ரத்தினமோதிரங்கள், வெள்ளி அரும்புதடை போன்றவை இருந்துள்ளன. அக்காலகட்டத்தில் நகரத்தார் பெண்கள் தலையணியாக பயன்படுத்தியவை நெத்திச்சுட்டி, சூரியசந்திர பிறை, சடைநாகம், ராக்கொடி, குஞ்சும் போன்றவை சிறு வயதினர் பயன்படுத்திய தலையணிகளாகும்.  குறிப்பிடத்தக்கவை தலையணி என்றுபார்த்தால் பிறைசிதேவி என்னும் ஒருவகை தலையணி அக்கால பயன்பாட்டில்  இருந்து வந்துள்ளது. இது ராக்கொடியை ஒத்த ஒருவகை அணியாகும் இது இப்பகுதியில் மட்டுமே புழக்கத்தில் இருந்து வந்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில் இவ்வையான தலையணிகள் நகரத்தார் மத்தியில் பயன்பாடில் இல்லை.

நகரத்தார் ஆச்சிமார்கள் மத்தியில் காலில் அணியப்படும் அணிகலன் என்று பார்த்தோமானால்  திருமணத்திற்கு முன்பு பெண்கள் தண்டை, கொலுசு போன்ற அணிகலன்களை பயன்படுத்தியுள்ளனர் திருமணத்திற்குப்பின் ஆச்சிமார்கள் தண்டை, கொலுசு போன்ற அணிகலன்கள் அணிவது கிடையாது திருமணத்தின் அடையாளமாக காலில் வெள்ளி மிஞ்சிகளை மட்டுமே அணியும் வழக்கம் இருந்துள்ளது அதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து பார்த்தோமானால் சிலப்பதிகார காப்பிய நாயகியான கண்ணகியின் நினைவாக காலில் தண்டை, சிலம்பு, கொலு போன்றவற்றை தவிர்ததாக கூறுகின்றனர். சிலம்புச் செல்வர் ஐயா மா.பொ.சி, வா.சுப மாணிக்கனார், சோம.லே போன்ற தமிழ் அறிஞர்கள் கூற்றுப்படி நகரத்தார்கள் கண்ணகியின் வழிவந்தவர்கள் என்றும் காப்பியத்தில் சொல்லப்பட்ட  கோவலன் கண்ணகியின் வாழ்வியல் முறைகளில் சுட்டப்பட்ட பல நிகழ்வுகள் தற்காலத்திலும் நகரத்தார் மத்தியில் காணமுடிகின்றது என்றும் நகரத்தார்கள் பூம்புகார் நகரை பூர்வீகமாகக் கொண்டதையும் கொண்டுஇதனோடு  ஒப்புமைப்படுத்தி  கூறியுள்ளனர். ஆனால் தற்காலத்தில் காலில் கொலுசு அணியும் வழக்கம் திருமணத்திற்குப் பின்பு பல ஆச்சிமார்கள் மத்தியில் உள்ளது  வெகுசிலரே தொன்மை மாறாது இந்த வழமையை பின்பற்றி வருகின்றனர். அது போல் உச்சித்திலகம் (தலைவகுட்டில் குங்குமம்) இடுதல் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குமுகாயத்தில் முற்காலத்தில்  இல்லாத வழக்கமாக இருந்துள்ளது. நகரத்தார் குமுகாய பெரிய பெண்கள் மற்றும்  அவர்களின் பழைய புகைப்படங்கள் போன்றவை உற்று நோக்கும் போது இந்த உச்சித்திலகம் இடும் வழக்கம் இவர்கள் மத்தியிலும் இல்லை.

 இங்கு குறிப்பிடப்பட்ட பல நகைகள் தற்காலத்தில் வழக்கொழிந்து  பயன்பாட்டில் இல்லையென்றாலும் இவற்றை நம்மால் இன்றும் சில படைப்புகளில் நம்மால் காண முடிகின்றன எடுத்துக்காட்டாக கொத்தமங்கலம் ராசாத்தாள் படைப்பு வீட்டில் இன்றும் பிறை சிதேவி,மணிக்கோவை/ நெல்லிக்காய் மாலை, தோள்வளை, சிவகண்டி போன்ற தொன்மையான நகைகள் இன்றும் காணமுடிகிறது.
  நகரத்தார் குமுகாயத்தில் குழந்தைகளுக்கு தங்கதோடு / வைரதோடு, சங்கிலி, காப்பு, மோதிரம், தங்க அரைஞாண் கயிறு, தங்கத்தண்டை, ஐம்பொன் தண்டை போன்ற அணிகலன்களையும் அத்தோடு முற்காலத்தில் குழந்தைகளுக்கு கழுத்தில் ஐம்படைத் தாலியும் அணிவிக்கப்பட்டது அதில் சங்கு, சக்கரம், கதை, வில், வாள்  இடம் பெற்றிருக்கும். பின்னாளில் தங்க அரைஞான் கயிற்றில் இதனை இணைத்து பயன்படுத்தப்பட்டது. திருமூர்த்திகளில் காத்தல் கடவுளாகிய திருமாலின் ஆயுதங்கள் எனவே குழந்தைகளை வைக்கும் என்ற நம்பிக்கை தற்காலத்தில் இந்த ஐம்படைதாலியை பிள்ளைகளுக்கு அணிவிக்கும் வழக்கம் வெகு சிலரிடமே உள்ளது. பிள்ளை பிறந்த 16 நாட்களுக்குள் காது குத்தி பிள்ளைக்கு பொன் நகைகள் அணிவித்து தூக்கும் பழக்கம் இன்றுவரை வழக்கத்தில் இருந்து வருகிறது.
 நகரத்தார்கள் அக்காலத்தில் பயன்படுத்திய அணிகலன்கள் பெரும்பாலும் நவரத்தினகற்கள் கொண்டு செய்யப்பட்டவை குறிப்பாக மாணிக்கம், மரகதம், பவளம், முத்து இவற்றையே பெரும்பாலும் அதிகம்  பயன்பாட்டில் இருந்துள்ளன. வைரத்தின் பயன்பாடு அணிகலன்களில் மிகக்குறைவாகவே காணமுடிகிறது. இவை நகரத்தார்கள்  கிழக்காசிய நாடுகளில் நகரத்தார்கள் செய்த வணிகமே இதற்கு மிகப் பெரும் வித்தாக அமைந்தது அங்கு கிடைத்த மிகவும் உயர்ந்த ரக தராத மாணிக்கம் பவளம் மரகதகற்களையே பயன்படுத்தினர் முதலாம்  உலகப்போரின் காரணமாகவும் அதற்கு பின் சில பத்தாண்டுகளில் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும்   நகரத்தார்களுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமான தொடர்பு மெல்ல துண்டிக்கப்படும் போது நகரத்தார் மத்தியில் இந்த மாணிக்க கற்கள் மரகத கற்களின் பயன்பாடு சற்று குறைய தொடங்கி வைரக்கற்களை பயன்படுத்தும் வழக்கம் வந்தது இது தற்போது வரை நகரத்தார்கள் மத்தியில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இன்று நகரத்தார்கள் மத்தியில் மாணிக்க கற்கள் கொண்டு செய்த நகைகளை காண்பதே அரிதாகிவிட்டது.
 மேலும் இந்த மாணிக்கக் கற்களின் பயன்பாடு நகரத்தார் மத்தியில் அதிகம் இருந்ததற்கான சான்றாக  இருப்பவை நகரத்தார் திருப்பணி செய்த பெரும்பாலான கோயில்களை உற்று நோக்கும்போது இதனை நம்மால் நன்கு உணர முடியும். நகரத்தார் திருப்பணி செய்யும் போது அங்குறையும் இறைவனுக்கு வைரநகைகளை காட்டிலும் மாணிக்க கற்கள் பதித்த நகைகளையே அதிகம் செய்து அர்ப்பணித்துள்ளனர். எடுத்துக்காட்டாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நகரத்தார்களின் திருப்பணிக்கு மிகச் சிறந்த சான்றாகும் இங்கு அண்ணாமலையாருக்கு அணிவிக்கப்படும் ரத்தின கிரீடம், கர்ண பத்திரம், மகரகண்டி, தாளிப்பதக்கம் போன்றவை நகரத்தார்களின் கொடைகளே அது மட்டுமல்லாது திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில், சிக்கல் சிங்காரவேலவர் கோவில் போன்றவை நகரத்தார்களின் திருப்பணியே அங்கும் இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நகை வகைகளில் அதிகம் மாணிக்ககற்கள் கொண்ட நகைகளையே நம்மால் காண முடிகிறது. 
மேலும் செட்டிநாட்டில் உள்ள பல திருக்கோயில்களில் நகரத்தார்கள் மாணிக்க கற்கள் கொண்ட நகைகளையே இறைவனுக்கு சமர்ப்பித்துள்ளனர். செட்டிநாட்டு பகுதிகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் உ.சிறுவயல் பொன்னழகி அம்மன் கோயில்  அம்மனுக்கு நகரத்தார்கள் செய்து வைத்த ஜுவாலை கிரீடம், கண்டனூர் சிவாலயத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு நகரத்தார்கள் செய்துவைத்த பெரும்பான்மையான நகைகள் மாணிக்க நகைகளே இறைவனுக்குத் தான் சமர்ப்பிக்கிறோம் என்று போகின்ற  போக்கில் கடமைக்கு என்று செய்யாமால் நகரத்தார்கள் தாங்கள்  கொண்டிருந்த பக்தியில் சமரசமும் செய்யாமல் விலை உயர்ந்த நல்ல உயர்ந்த மாணிக்கம் மற்றும் மரகத கற்களால் செய்த நகைகளையே இறைவனுக்கு சமர்ப்பித்திருந்துள்ளனர். அணிகலன்களின் பெயர்களை குறிப்பிடும் போது நகரத்தார்கள் சில தனித்துவமான தமிழ் சொல்லாடல்களை இன்றுவரை பயன்படுத்துகின்றனர்.தங்க வளையல், மெட்டி, உத்திராட்சம் போன்றவற்றை நகரத்தார்கள் காப்பு, மிஞ்சி, கவுடு  என்று அழைக்கும் வழக்கம் உள்ளது அதுபோல் கழுத்துரு, மங்களச்சரம், பூச்சரம், கண்டசரம், வைரக்காப்பு  போன்ற நகைகளை பெரிய நகைகள் என்று குறிக்கும் வழக்கமும் உள்ளது. 

வேணும் மலையாளத தொட்டியத்து கருப்பர் துணை
 --தெக்கூர்.இராம.நா.இராமு இராமநாதன் 

புகைப்படங்கள் : தேவகோட்டை.திரு.வள்ளியப்பன் இராமநாதன் அண்ணன்

No comments: