Tuesday 22 September 2020

#கம்பரும்_செட்டிநாடும்



நாட்டரசன்கோட்டை அருகேயுள்ள கருதுப்பட்டி என்ற கிராமத்தில்தான் கம்பர் நினைவிடம் அமைந்துள்ளது. “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” என்பார்கள். கம்பர் இயற்றிய ராமாயணத்தில் காதல் தமிழ், வீரத் தமிழ், ஆன்மிகத் தமிழ் என அனைத்தும் இருக்கும். அதனால்தான் இன்றும் இந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு கம்பர் சமாதி உள்ள இடத்திலிருந்து மண் எடுத்து குழந்தையின் நாக்கில் வைப்பது வழக்கமாக உள்ளது. அப்படிச் செய்வதால், குழந்தை  நல்ல தமிழாற்றலுடனும் மிகுந்த தமிழ் அறிவுடனும் வளரும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை.
கம்பன் வாழ்ந்த காலம் கி.பி 11-ம் நூற்றாண்டு. தஞ்சை மாவட்டம் தேரெழுந்தூர் எனும் ஊரில் பிறந்தவர். தான் எழுதிய ராமாயணத்தை  திருவெண்ணெய் நல்லூரில் அரங்கேற்றினார் என்றும் திருவரங்கத்தில் அரங்கேற்றினார் என்றும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரே அவர் 'கவிச் சக்கரவர்த்தி' என அழைக்கப்பட்டார். சோழ மன்னன் குலோத்துங்க சோழனின் மகளுக்கும் கம்பன் மகனுக்கும் காதல் ஏற்படவே சோழ மன்னன் கோபம் கொண்டான். குலோத்துங்க சோழனின் அரசவையில் கொடிகட்டிப் பறந்தவர் கம்பர். புலவரின் குடும்பத்தில் தன் மகளுக்கு ஏற்பட்ட காதலை மன்னன் ஏற்கவில்லையென்றதும், மனம் வெறுத்தநிலையில் கம்பர் நாடோடியாகப் பல்வேறு இடங்களிலும் சுற்றித்திரிந்தார். இறுதியாக, சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில் மாடு மேய்க்கும் சிறுவனிடம் முடிக்கரைக்கு கம்பர் வழிகேட்க, அந்த சிறுவனோ, "அடிக்கரை போனால் முடிக்கரை சென்றடையலாம்" என்று கவிநயத்துடன் சொன்னதைக் கேட்டு, அச்சிறுவனின் பேச்சாற்றல், கவிநயத்தால் கவரப்பட்ட கம்பர், "நாம் தங்க வேண்டிய இடம் முடிக்கரை அல்ல; நாட்டரசன்கோட்டைதான்" என்று முடிவு செய்தார். இதையடுத்து அங்கேயே தங்கினார் கம்பர். தன் இறுதி காலத்தையும் அங்கு கழித்தார்.
"தாடியுடன் தள்ளாத வயதில் வந்திருப்பவர் கம்பர்" என்று தெரிந்துகொண்டார் ஆவிச்சி செட்டியார். அதன் பிறகு ஆவிச்சி செட்டியார் தோட்டத்திலேயே தங்கியிருந்தார் கம்பர். மிகக் கொடிய வறுமையில் வாடிய கம்பர், நாட்டரசன்கோட்டையின் எல்லைப்புறத்தில் உள்ள ஆவிச்சி செட்டியார் தோட்டத்திலேயே மரணமடைந்தார். அவர் இறந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டு இன்றளவும் அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள நாட்டார் நகரத்தார்கள் தங்களுக்கு பிள்ளைகளை இங்கு கொண்டுவந்து கம்பர் சாமதியின் முன் போட்டு குழந்தைகளுக்கு நாக்கில் மண் தொட்டு வைப்பது வழக்கம். 

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதற்கேற்ப சீக்கிரம் பேச்சு வராத சிறு குழந்தைகளுக்கு கம்பன் சமாதி அடைந்த இங்கு ,மண் எடுத்து நாக்கில் வைக்கப்படுகிறது. இந்த வழக்கம் இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.
மேலும் செட்டி நாட்டு பகுதியெங்கும் புரட்டாசி மாதத்தில் கம்பருக்கும் இன்தமிழுக்கும்  அணிசேர்க்கும் வகையில் கம்பராமாயணம் படித்தல் என்ற நிகழ்வு மிகவும் சிறப்புற நிகழ்த்தப்டுகின்றது. 1939 களில் இராமாயணம் வடவர் பண்பாட்டை முன்மொழிகிறது எனக்கூறி, பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தினர் இராமாயணத்தை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
 அந்நிலையில் கம்பனது இலக்கிய ஆளுமையை தமிழர்களிடையே பரப்புவதற்காக திரு சா. கணேசன்  அவர்கள் 1939 ஏப்ரல் 2, 3 ஆகிய நாள்களில் இரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார் தலைமையில் காரைக்குடியில் கம்பன் விழாவை நடத்தி, கம்பன் கழகத்தைத் தொடங்கினார்.
கம்பன், தான் இயற்றிய இராமகாதையை பங்குனி மாதம் அத்தத் திருநாளில் கவியரங்கேற்றினார் எனக்கூறும் தனிப்பாடல் ஒன்றைச் சான்றாகக் கொண்டு, கி.பி. 886 பிப்ரவரி 23 ஆம் நாளில்தான் அவ்வரங்கேற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும் என சா. கணேசன் கணித்தார். எனவே ஒவ்வோராண்டும் பங்குனி மாதம் அத்தத் திருநாளில் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் உள்ள கம்பன் சமாதி கோயிலில் கம்பன் விழாவின் நிறைவு நாளும் அந்நாளுக்கு முந்தைய பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகிய நாள்களில் காரைக்குடியில் கம்பன் விழா தொடக்க நாளும் தொடரும் நாள்களும் காரைக்குடி கம்பன் கழகத்தால் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. அன்றுமுதல் இன்றுவரை செட்டிநாடு கம்பருக்கும் கம்பர் இயற்றிய கம்பராமாயணத்தையும் தொய்வின்றி போற்றி வருகின்றனர்.


--Ramu.Rm.N




No comments: