Sunday 30 November 2014

கடற்கரையில் விந்தையா மாந்தர்கள்







 சென்னையின் முக்கியமான ஒரு பகுதியின்  வழியாக வாரத்தின் தொடக்க நாளான ஞாயிறு அன்று காலையில்  என் நண்பனுடன் ஈருருளியில் (பைக் ) துரைபாக்கத்தில் உள்ள நண்பர் வீட்டிற்கும் செல்லும் பயணத்தின் பொது சில காட்சிகள் மனதிலும் பதிந்து நின்றது . உலகின் மிக நீளமான கடற்கரையில் நம் மெரீனா கடற்கரை13கீமீ கொண்ட ஒரு கடற்கரை .உலகின் இரண்டாவது நீளமான கடற்க்கரை. சென்னையின் முக்கியமான அடையாளங்களில் இந்த பகுதியும் ஒன்று . மெரினா கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்து நாம் காணமுடியும் .தலைமைச்செயலகம் முதல் கலங்கரைவிளக்கம் வரை பயணத்தில் பொது  காலையில் கடந்தபோது இருருளியை வேகமாக ஒட்டாமல் மெதுவாக மெரினாவை கடந்தோம் .

 நடைமேடைகளில்ஆண் பெண் என்றுவேறுபாடுகள் இல்லமால் முதியோர்கள் , இளைஞர்கள் ,குழந்தைகள் என்று வேறுபாடுகள் கடந்தும் மக்கள் குழுமியிருந்தார்கள், தொளதொளவென பருத்தியுடைகள் அணிந்தும் , விளையாட்டு சீருடைகள் , முக்கால்ச்சட்டை ,கால்சட்டை போன்ற ஆடைகளில் , ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து காதுகளில் ஹீட்செட் போட்டுகொண்டு நடைபயிற்சி செய்கின்றனர் சிலர் தங்கள் செல்ப்பிராணிகளுடன் நடைபயிற்சியும் செய்த்கின்றனர் .சிலர் கைகளை முன்னுக்கும் பின்னுக்கும் வேகமாக வீசக் கொண்டு நடந்தனர் .மற்றும் சிலர் கைகளை சுழற்றிய படியும் நடந்தனர் . வெவ்வேறு விதமாக மக்கள் நடைபயிற்சி செய்துகொண்டு இருந்தார்கள்.

இந்த சலசலப்புக்கும் மத்தியில் சிலர் வானமே கூரையாக கொண்டு கடல்காற்றையே தங்களின் வீட்டு குளிர்சாதனமாக காற்றுக் கருவியாக கொண்டு போர்வையை இழுத்திப் போர்த்திக் கொண்டு தூங்கும் சாமானியர்களும் உள்ளனர் . மேலும் சில முதியவர்களும் ஆங்காங்கே எடை கருவியை வைத்துக்கொண்டு ஆங்காங்கே நிழலில் ஓரமாக அமர்ந்துகொண்டு இருந்தார்கள்.

கடற்கரை ஓரம் மணல்பரப்புகளில் ஆடவர்களும் யுவதிகளும் தனித்தனியாக ஆங்காங்கே கடற்கரை கைபந்து (பீச் வாலிபால் ) மிகுந்த கரகோசத்துடன் விளையாடி மகிழ்கிறார்கள் .சற்றுதொலைவில்புரவிகளின் மீது காவல்த்துறையினரின் குதிரைபடியினர் ஆங்காங்கைங்கே புரவியில் மீது  உலாவி கண்காணிப்பில் இடுபட்டு கொண்டிருந்தனர் .சிலர்விளையாட்டுப் போட்டியில் பயன்படுத்தப்படும் மிதிவண்டிகள் ஓட்டி பயிற்சி செய்துகொண்டிருந்தனர் .மேலும் சிலர் குழுவாக நின்று குலுங்கி குலுங்கி சதம்மாக சிரித்து கொண்டிருந்தனர் .அதன் பெயர் சிரிப்பு யோகாவாம் (லாபிங் தெரபி ) என்று இதுபோன்றும் ஆங்காங்கே செய்து கொண்டிருந்தனர்

மேலும் சிலர்  கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் காட்சி (ஸ்கேட்டிங் )சாலையின் ஓரத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் சூழ்ந்து நின்றுகொண்டு இருந்தனர் .மக்கள் சற்றுநகர்ந்த பொது அங்கு ஒரு தள்ளுவண்டியில் கத்தாளை சாறு , அருகம்புல் சாறு மற்றும் பல இயற்கை மூலிகை சாறுகள் கண்முன்னே தயாரித்து குறைந்த விலைக்கும் தருகிறார்கள். உடன் அருகில் பச்சை தேநீர் , மூலிகை பொடிகள் விற்பனையகம் இதுபோன்ற கடைகள் அங்காங்கே கடற்கரை சாலையோரம் இருந்தன .

மேற்கொண்டு பயணத்தின் பொது சில யுவதிகளும் ஆடவர்களும் கடற்க்கரை மணலில் சிலம்பு பயிற்சிகள் செய்து கொண்டிருந்தனர் . சற்று தொலைவில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள் .அதன் சற்று தொலைவில் கபடி பயற்சியும் நடந்துகொண்டிருந்தது  மேலும் சிலர் மணற்பரப்பில் விரிப்பு விரித்து அதன் மேல் யோகாசன பயற்சியும் செய்துகொண்டிருந்தனர் .
கடற்கரை ஓரத்தில்

கடற்கரை சாலையோரம் பல ஈருருளிகள் , மகிழுந்துகள் என்று பல வாகனங்களில் மக்கள் வந்தும் போனதுமாக இருகின்றனர் .இப்படி பலதரப்பட்ட மனிதர்கள் ஒரு கடற்கரை ஓரமாக பலதரப்பட்ட மக்கள் தங்கள் உடல்நலத்தை பேணவும் தங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ளவும் இங்கு  இந்த 6 கிலோமீட்டர் பரப்பலவும் கொண்ட கடற்கரை சாலையோர பகுதியை பயன்படுத்துகின்றனர் .என் பயணத்தில் ஈருருளியை வேகமாக செலுத்தி இருந்தால் நாங்கள் அந்த பகுதியை விரைவாக கடந்து சென்றிருப்போம் . ஆனால் தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை வண்டியை மெதுவாக செலுத்தி வாடைகாற்றின் ஸ்பரிசத்தை அனுபவித்தபடி பொறுமையாக வித்தியாசமான மனிதர்களின் செய்கைகளை கண்டு ரசித்தபடி நிதானமாக இருபது நிமிடம் பொறுமையாக பயணித்தோம் .ஆரவாரமான இந்த சென்னையில் இப்படியும் தங்களை பேணி பாதுகாத்துக் கொள்ள இத்தனை ஆயிரம் மக்கள் இங்கு குழுமுகிறாகள் காலை 5 மணிக்கு தொடங்கி   9 மணிக்கு குள் இந்த ஆரவாரம் அடங்கி விடுகிறது .எனது பயணதில் 7.30மணியளவில் நான் கடந்த பொது இவற்றை கண்டு ரசிக்க நேர்ந்தது .

கலங்கரைவிளக்கம்
                                                                  ---- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Monday 24 November 2014

என்னுள்ளம் கவர்ந்த திருத்தலம் 1

நான் கண்ட என்மனதில் நீங்கா இடம்பெற்ற ஆலயம் பற்றிய வராலாறுகள் சிறப்புக்கள் பற்றி தொகுத்து இங்கு எழுத முயல்கிறேன் .அப்படி ஒரு ஆலயம் இந்த திருவதிகை ஆலயமே முதல் தொகுப்பாக இங்கு பகிர்ந்துகொள்ளகிறேன் .

ஆலய முகப்பு

ஆலய முகப்பு பகுதி

                        திருவதிகை அழகிய தமிழ் பெயர் கொண்ட ஒரு கிராமம் கெடிலம் ஆற்றின் வடகரைப் பகுதியிலும் பண்ணுருடி எண்ணு ஊருக்கும் அருகில் உள்ளது . இந்த திருவதிகை கடலூருக்கும் பண்ணுருட்டிக்கும் இடையில் உள்ளது .  பண்ருட்டியில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள மிகவும் அழகிய ஒரு சிற்றூர் . இங்கு மிகவும் தொன்மையான ஒரு சிவாலயம் உள்ளது .சைவ சமயத்தின் மிகவும் பெரும்பங்கு வகித்த திருநாவுகரசர் சைவத்தை தழுவிய தலம் . சிவபெருமானின் அஷ்ட வீரட்டானத்தில் இந்த தலமும் ஒன்று .என் தந்தை படித்ததும் வளர்ந்ததும் திருவதிகைகும் அருகில் உள்ள பண்ருட்டியில் தான் . என் ஐயா பல முறை மாலை வேளைகளில் சென்று திருவதிகையில் இறைவனை வழிபட்டு பொடிநடையாக திரும்புவார் .ஐயா திருவதிகை பற்றி சொல்லிக் கேட்டதுண்டு. பிரதோஷத்தின் பொது தவறாமல் சென்று வழிபடுவது வழக்கம் இன்று ஐயாவின் வயது இன்று ஆலயம் சென்று வழிபட்டு வர ஒத்துழைக்கவில்லை . வீட்டிலேயே பிரதோஷ பாடல்களை படித்து வழிபாடு செய்துவருகிறார் . எங்க அப்பச்சி இளமை பருவங்களில் தன் தோழர்களுடன் சென்று விளையாடியது சுற்றிபார்த்த பகுதி .என் சிறுவயதிலும் நானும் சென்று பார்த்து வியந்த தலம்.  நான் 15 வருடங்கள் முன்பு ஒரு மாலைப்பொழுதில் அப்பச்சியுடன் சென்றபோது நான் கண்ட ஒரு காட்சி இன்று யாரும் பார்த்திருக்க முடியாத ஒன்று . சிவபெருமானை உட்பிரகாரம் வளம் வரும் வகையில் சிறிய ஒரு பாதை இருந்தது . இருக்கிறது உடல் பருமனாக உள்ளவர்கள் சுற்றிவர இயலாது படியோறு குறுகிய பாதை .இன்று இந்த பாதை மரக்கதவுகள் போட்டு அடைக்கப்பட்டுள்ளது . ஆணவத்தை அழிக்கும் ஈசன் இவர் .ஆணவம் கொண்டவர்கள் மீண்டும் இங்கு வந்து ஈசனை காணஅனுமதி மறுத்திடும் ஈசன் இவர் என்று என் ஐயா சொல்ல கேட்டுளேன் . இந்த தலம் கைலாயதிருக்கு நிகரான ஒரு தலம்.

                                திருஅதிகை என்ற பெயர் மருவி இன்று திருவதிகை இந்த தலத்திற்கும் இப்பெயர் வரசில காரணங்கள் கூறப்படுகிறது. தமிழகத்தில் சைவம் தழைக்கும் முன் சமணம் ஓங்கி வளர்ந்து  இருந்தது. சமணக் குருமார்களை அதிகைமான்கள் , நந்திகள் என்றும் சமணப்பெரியோர்களை அழைப்பட்டதும் அந்த பகுதிகளில் அவர்கள் வாழ்ந்திருக்ககூடும் அதன்காரணமாக இந்த ஊருக்கும் திருஅதிகை என்று  வந்திருக்க வாய்ப்புகள் உள்ளன .திருவதிகை ஆலயம் முற்காலத்தில் வெறும் ஆலயமாக மட்டும் இல்லது வைத்தியசாலை பண்டகசாலை , கலைகூடமாகவும் ,அறச்சாலை , பாடசாலை , அரசாங்க அலுவலகமாகவும்  இந்த ஆலயம் விளங்கியுள்ளது . இந்த ஆலயம் ஆயுதக் கிடங்காகவும் விளங்கியுள்ளது . இந்த ஆலயத்தில் சுரங்கப்பாதைகளும் இருந்துள்ளன. இப்படி இந்த ஆலயம் வெறும் வழிபாட்டு தலமாக இல்லாமல் அனைத்து துறையும் சங்கமிக்கும் ஒரு கூடமாகவும் விளங்கியதன் விளைவு பல முறை போர் படையெடுப்புகள் மூலம் அழிவுகளை சந்தித்தது இவற்றை கண்டு அஞ்சி திருவதிகையில் வாழ்ந்த  மக்கள் படைஎடுப்புக்கு பயந்து தற்போது உள்ள பண்ணுருடியில் குடியேறினர்.
ஆலய சுவற்றில் 



ஆலயத்தின் வெளிப்புற தோற்றம்

நாட்டிய  பெண்கள்


ஆலய வாயிலில் உள்ள சிற்பங்கள்

இரண்டாம் ராஜகோபுரத்தின் முன்பு இருந்து 


ஆலயத்தின் உட்புறத்தில் இருந்து ராஜகோபுர தோற்றமும் 16 மண்டபமும் ஒரு பௌர்ணமி பொழுதில் 
             
16 கால் மண்டபம் ஆலயத்தில் நுழைந்தது 
16கால் மண்டபத்தின் வலதுபுறம் உள்ள தீர்த்தத்தின் நுழைவாயில் 

       நடுநாட்டில் உள்ள 22 சிவாலயகளில் மிகவும் புகழ்வாய்ந்தது.இந்த ஆலயம் எந்த நூற்றாண்டை சார்ந்தது என்று சரிவர புலப்படவில்லை  இந்த ஆலயம் பல மன்னர்கள் படையெடுப்பில் புனரமைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் பல மாற்றங்கள் செய்யப்பட்டும் உள்ளது பற்றி இக்கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன . இத்தல ராஜகோபுரம் அமைப்பு தஞ்சை பெருவுடையார் கோயில் கோபுர அமைப்பை ஒத்தது . இந்த கோபுர நிழல் காலில் மிதிபடாத வகையில் கணித சாஸ்திரமுறைப்படி வடிவமைகபட்டுளது. இந்த விமானத்தை வடிவமைத்த பெருமை பல்லவ மன்னர்களையே சாரும் .இவர்களுக்கு பின் வந்த பல்லவ மன்னர்களான பரமேஸ்வரவர்மன் இந்த ஆலயத்தை முழுவது கற்கோவிலாக மாற்றினான் அதுமட்டும் இல்லது சுண்ணாம்பு சுதை சிற்பவேலைபாடுகளை அமைத்தவராவார்.  மேலும் நாம் இன்று ஆலயத்தில் கருவறை முகப்பு பகுதியில் உள்ள துவாரபாலகர்கள் அமைப்பு முதலில் இங்கு இருந்து தான் தோன்றியது என்பது இந்த கோயில் கல்வெட்டுகள் முலம் புலப்படுகிறது. பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன் சமணத்தில் இருந்து சைவத்தை தழுவியது இந்த தளத்தில்தான் . மகேந்திரவர்மனின் ஆட்சி காலம் ( கிபி 615 -63௦ ) ஆகும் .இந்த காலகட்டத்தில்தான் நாவுக்கரசர் சமணத்தில் இருந்து சைவத்திற்கும் மாறினார் . மேலும் இந்த மன்னன் செங்கல் , மண் , சுண்ணாம்பு , மரம் இவைகள் மட்டும் இன்றி கருங்கற் திருப்பணியும் செய்வித்தவர் ஆவர்
நடராஜர் மண்டபம் 1௦௦ கால் மண்டபம் 
இரண்டாம் ராஜகோபுரம் கொடிமரத்தின் தோற்றம் 

வாயிலுக்கும் முன்புறம் உள்ள வராகி 
கொடிமரத்திற்கும் முன்பு உள்ள நந்தி 
இரண்டாம் ராஜகோபுரம்

உட்புறத்தில் இருந்து கொடிமரத்தின் தோற்றம் 

மேலும் இவர்களின் வழிவந்த பல பல்லவ மன்னர்கள் தொண்டாற்றியும் பலாயிரம் பொன்னையும் தானமாக வழங்கியும். இங்கு அன்னசத்திரம் அமைத்தும் ஆலயத்துக்கு வரும் சாதுக்களுக்கும் பசியாற அன்னசத்திரம் அமைத்தும் நாவுக்கரசரின் பெயரில் மடம் நிறுவியும்  சிறப்பு செய்தனர். அதன் பின் பல்லவனின் வழிவந்தவர்கள் சோழர்கள் இந்த ஆலயத்திற்கும் பல அர்பணிகள் செய்துவந்தனர் . பல்லவர்கள் காலத்தில் இங்கு இந்த ஊரை சுற்றி உள்ள பகுதிகளில் பல புத்தவிகாரங்கள் , பாழிகள் , பள்ளிகள் இருந்ததை உணரும் வகையில் இந்த ஆலயத்தில் மூன்று இடங்களில் புத்தர் சிலைகளை காணலாம் .
                    இக்கோயில் பல மன்னர்கள் தாக்குதல் நடத்தினர் அதுமட்டும் இல்லது இந்த கோயில் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த பகுதி மாரட்டியர் வசமும் . அதன்பின்  முகலாயர்களின் வசமும் சென்றது . 18ஆம் நூற்றாண்டின்  போது பிரெஞ்சுகார்கள்  வசமும்  இருந்தது அப்போது இந்த ஆலயம் போர்காலக்கொடையாக பயன்படுத்தப்பட்டது . மற்றும் இந்த பகுதி பிரிட்ஷ் வசமும் சென்றது . இந்த காலகட்டங்களில் இந்த ஆலயத்தில் விலை உயர்ந்த அணிமணிகள் , அரியபொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன .  மற்றும் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்  19ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் மன்னருக்கும் பின்னோர் என்றுசொல்லப்பட்ட நாட்டுகோட்டை நகரத்தார் சமுகத்தை சேர்ந்தவர்கள் இக்கோயிலை புணரமைத்து குடமுழுக்கும் செய்தனர் 


ஸ்தல விருட்சம் கொன்றைமரம் . மற்றும் அதன் மருத்துவப்பயன்கள் மற்றும் கொன்றைமரத்தை ஸ்தலவிருட்சமாக கொண்ட தலங்கள்பற்றிய தகவல் 
நந்தி தேவர் 
ஆலயத்தின் உட்புறத்தில் கொன்றைமரத்தடியில் உள்ள பெரிய லிங்கம் 

உட்புறத்தில் உள்ள நந்தி தேவர் 



திருத்தலச் சிறப்புகள்: 

சிவபெருமான் வீரத்திருவிளையாடல் புரிந்த எட்டுத் வீரட்டத்தலங்களுள் இத்தலமும் ஒன்று.

 நாவுக்கரசரின் சகோதரி திலகவதியார் ஈசனுக்குத் திருத்தொண்டு புரிந்த தலம்.

திருநாவுக்கரசரை ஆட்கொண்டு சூலை நோய் தீர்த்த பதி. ஞான சாத்திர நூலான உண்மை விளக்கத்தை அருளிச் செய்தவரும், மெய்கண்ட நாயனாரின் மாணவர்கள் 49ல் ஒருவருமான மனவாசகங்கடந்தாரின் அவதாரப்பதி. 

மூவர் பாடல் பெற்ற நடு நாட்டுத் தலம். 

முப்புரங்களை எரித்த வீரச்செயல் புரிந்த தலம்.

திருநாவுக்கரசர் தனது முதல் தேவாரத் திருப்பதிகம் பாடி  சைவப்பெருநெறிக்கு மீண்டு வந்தது இத்தலத்தில்தான்.

சிவபிரான் உமையாள் கையை பற்றிய படி திருமணக்கோலத்தில் அருள் புரிந்த அப்பர்பெருமானுகும் திருக்காட்சி புரிந்த தலம்.

அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்துவந்த தலம்.

 சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான உண்மை விளக்கம் நூலை அருளிய மனவாசகங்கடந்தார் பிறந்த தலம் இதுவே.

அப்பர் பெருமான் உழவாரப் பணி புரிந்த தலம் இதுவென்று இத்தலத்தை மிதிக்க அஞ்சி சுந்தரர் அருகிலிருந்த சித்தவடமடத்தில் தங்கியதும் இறைவனின் திருவடி தீட்சை பெற்றதும் இத்தலத்தில்தான்.

திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் திருநடனம் புரிந்த்தது இத்தலத்தில் தான் .

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணத்திலிருந்து சைவநெறிக்கு மாறி சமணப் பள்ளிகளை இடித்து குணபரவீச்சரம் எழுப்பியது இத்தலத்தில்தான்.

இந்த ஆலயத்தை பார்த்தே ராஜா ராஜா சோழன் பெருவுடையார் கோயிலை தஞ்சையில் அமைத்தார்

தேர் திருவிழா உருவாக வித்திட தலமும் இதுவே.

தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும்.

ஆலய உட்புறம் 


தல வரலாலு  : 

                    தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.
சுற்றுப்பிரகாரத்தில் உள்ள 63நாயன்மார்கள் சந்நிதிகள் 
கருவறைக்கும் செல்லும் வழியில் உள்ள உலகின் முதல் முதல் அமைக்கப்பட்ட துவாரபாலகர்கள் சிலைகள்
தீர்த்தக் கிணறு 
மூன்று அசுரர்களும் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். இந்த கோட்டைகளுக்கு விமானம் போல் நினைத்த இடத்திற்கு செல்ல வசதியாக சிறகுகளும் இருந்தன. இந்த முப்புறங்களையும் வைத்துக்கொண்டு அவர்கள் தேவர்கட்கும் முனிவர்கட்கும் தொல்லைகள் பல கொடுத்துக் கொண்டே வந்தனர். தேவர்கள் ஈசனின் தாழ் பணிந்து புகலிடம் கேட்டனர்.
சுற்றுப் பிரகாரத்தில் உள்ள லிங்கத் திருமேனிகள் 
பஞ்சமுக லிங்கம் 


                                      ஈசன் தேவர்களைக் காக்கப் பூமியை தேராக்கி, நான்கு வேதங்களை குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய, சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற உலக படைப்புகளையும் வானவர்களையும் போர்கருவிகளாகவும் உடல் உறுப்புகளாகவும் மாற்றினார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று கர்வம் கொள்ளத் தொடங்கின. ஈசன் இப்படையில் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க நினைத்து தேர் தட்டில் கால்வைக்க அதன் அச்சு முறிந்தது. ள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.அமரர்களின் அகந்தையை எண்ணி எம்பெருமான் எள்ளி நகைக்க அவர் சிரித்த உடனேயே வானவர் உதவி ஏதுமின்றி கோட்டைகள் மூன்றும் பொடிபொடியாகின. இச்சம்பவம் நடந்ததுதான் திருவதிகை. சிவபிரான் தேவர்கள் வானவர்கள் உதவி ஏதும் இன்றி தன் புன்சிரிப்பால் அசுரரின் ஆணவத்தையும் தேவர்களது மமதையையும் ஒருசேர அழித்த தலம்

                            அரக்க மன்னர்கள் மூவரும் சிவபூஜையைத் தவறாது செய்து வந்ததை எண்ணி இருவரைத் தமது வாயில் காப்போராகவும் ஒருவரைக் குடமுழா முழக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டு ஈசன் மறைந்தார். இவ்வாறு மறக்கருணையோடு அறக்கருணையும் புரிந்த பெம்மானின் மூர்த்தத்தை வழிபடும் க்ஷேத்ரம் திருவதிகை. இந்த நிகழ்வே திரிபுர சம்ஹாரம் ஆகும்.
கைலாச பர்வத வாகன காட்சி 
கருவறை விமான சுதை வேலைப்பாடுகள்

திரிபுர சம்ஹார மூர்த்தி 

ஆலய கருவறை விமானம் 
அக்னி தேவன் 


திருநாவுகரசர் ( அப்பர் ) பெருமான் வரலாறு :

                 திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூர் ( திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 கி.மீ. தொலைவில் திருவாமூர் ) என்ற ஊரில் புகழனார் மாதினியார் தம்பதிகளுக்கு மகளாக திலவதியும் மகனாக மருள்நீக்கியாரும் பிறந்தனர். மருள்நீக்கியார் வளர்ந்தவுடன் சமண சமயத்தில் ஈடுபாடு கொண்டு சமண சமயத்தைச் சார்ந்து தருமசேனர் என்று பெயரோடு வாழ்ந்து வந்தார். தமக்கை திலவதியாரோ தனக்கு மணம் புரிய நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையார் போரில் இறந்துபோக இனி தனக்கு திருமணம் வேண்டாம் என்று வெறுத்து சைவ சமயம் சார்ந்து இறைப்பணி வேண்டி சிவபெருமானிடம் முறையிடுகிறார். இந்நிலையில் தம்பி தருமசேனரை கொடிய சூலை நோய் தாக்க அவன் துன்பப்படுவதைக் கண்ட திலகவதி திருவதிகை இறைவனிடம் கூட்டிக்சென்று அங்குள்ள திருநீறை அவருக்குப் பூசி இறைவன் மேல் மனமுருகிப் பாடச் சொல்கிறார். அவரும் பாடி முடித்தபின் சூலை நோய் நீங்கப்பெற்று நாவுக்கரசர் என்று சிவபெருமானால் அழைக்கப்பட்டு தருமசேனராக இருந்தவர் திருநாவுக்கரசர் என்று சிவபெருமான் சூட்டிய திருநாமத்துடன் சைவ சமயத்திற்குப் பெரும் தொண்டு செய்யத் தொடங்கினார். தனது சூலை நோய் நீங்கப் பாடிய பதிகமே இவர் பாடிய முதல் பதிகமாகும்.
ஆலயத்தின் விமானங்கள் 

நடராஜர் மண்டபத்தில் உள்ள வைரவர் 



விழாக்கள் :

                திருநாவுக்கரசு சுவாமிகளுக்கு 10 நாள் திருவிழா சித்திரை சதயத்தில் நடைபெறுகிறது. விரிசடைக் கடவுள் என்று பழைய தமிழ் நூல்கள் சிறப்பித்துக்கூறும் பெருமை உடையது.

              ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை கார்த்திகை 5 சோமவாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமி அம்பாள் 1 நாள் உற்சவம்நடைபெறுகிறது .
ராமலிங்க அடிகள் அம்பாள் மீது இயற்றிய திருவருட்பா 
கோயில் அமைப்பு : 

                     இவ்வாலயம் மிகப்பெரிய ஆலயம் ஆகும். கிழக்கு நோக்கிய ராஜகோபுரம் 7 நிலைகளுடன் 7 கலசங்களுடனும் காட்சி தருகிறது. கோபுர வாயிலின் இரு பக்கமும் நாட்டியக் கலையின் 108 தாண்டவ லட்சணங்களை விளக்கும் வகையில் பெண்கள் அழகிய சிற்பங்களாகக் காட்சி அளிக்கின்றனர். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் உள்ள திறந்த வெளி முற்றத்தில் தென்பக்கம் சங்கர தீர்த்தமும் வடப்பக்கம் பத்மாசக் கோலத்தில் காணப்படும் ஒரு புத்தர் சிலையும் உள்ளன. 5 நிலைகளையுடைய 2வது கோபுர வாயிலில் உள்ள ஒரு பெரிய நந்தியின் உருவச்சிலை காணப்படுகிறது. 2வது சுற்றின் தென்புறத்தில் திருநாவுக்கரசருக்கும் அவர் தமக்கை திலகவதிக்கும் தனித்தனியாக சந்நிதி உள்ளது. அதற்கடுத்து பைரவர் சனீஸ்வரர் மற்றும் துர்க்கையம்மன் சந்நிதிகள் உள்ளன. அதன்பின் இறைவி சந்நிதி இருக்கிறது. அம்பாள் கோவில் வாசலில் இருந்து இறைவி சந்நிதி விமானத்தைக் காணலாம். விமானத்தில் உள்ள சுதை வேலைப்பாடு சிற்பங்கள் பல வண்ணங்களில் காணப்படுகிறது.உள்சுற்றில் தென்மேற்கே உள்ள பஞ்சமுகலிங்கம் காணவேண்டிய ஒன்றாகும். இது பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய பஞ்சமுகலிங்கம் தமிழ்நாட்டில் வேறெங்கும் காண முடியாது.

இத்தலம் தேவாரப்பாடல் பெற்ற தலத்தில் இத்தலம் 218வது தலம்.இங்கு உள்ள சிவமூர்த்தம் 16பட்டைகள் கொண்ட மூர்தமாகும் .
சுதை வேலைபாடுகள் 



இத்தலத்தில் இறைவன் பெயர்  : வீரட்டேசுவரர்,  வீரட்ட நாதர், அதிகைநாதர்
அம்மையின் பெயர்  : திரிபுரசுந்தரி
தலமரம் : சரக்கொன்றை
தீர்த்தம் கெடிலநதி, சூலதீர்த்தம் (குளம் ), கிணறு திர்த்தம்
அம்பாளும் சிவனும் 
பதிகம் பாடியவர்கள்

திருநாவுக்கரசர் - 16
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1

அதிகை வீரட்டான ஈசன்

                          திருநீறு பூசும் பொது பொதுவாக அண்ணார்ந்து பார்த்து திருநீறு பூசவேண்டும்.ஆனால் இங்கு வழங்கும் திருநீற்றை தலைகுனிந்து பூச வேண்டும் என்பது இந்தலத்தின் தனி சிறப்பு .இங்குள்ள அம்மை மீது இராமலிங்க அடிகள் (வள்ளாளர் ) மீது திருஅருட்பா பாடியுள்ளார்.இங்கு அம்பாளுக்கும் பாதத்தின் அருகே ஸ்ரீ சக்கரம் வைத்து பூசைகள் நிகழ்கிறது.
இத்தலம் சில ஆண்டுகள் முன்பு மீண்டும் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு வெகு விமர்சையாக நிகழ்ந்தது .இந்த ஆலயத்திற்கும் வரும் வழியில் ஒரு திருநந்தவனம் திலகவதியார் பெயரில் உள்ளது அங்கு அவர்க்கும் ஒரு சிறுமண்டபமும் அங்கு தினமும் திலகவதியருக்கு காலை மாலையென இரு வேளையும் விளகேரிக்கப்படுகிறது . இங்கு அப்பருக்கும் சிவபெருமான் திருமணக்காட்சியை காட்டியதால் இங்கு கோயிலும் அருகில் பல திருமனமண்டபங்கள் நிறுவியுள்ளனர் .இங்கு திருமணம் அதிகம் நிகழ்கிறது இங்கு பல புதுமணதம்பதிகள் வந்து வழிபடுகிறார்கள். இங்கு வந்து வழிபடுவதால் அவர்களின் வாழ்வு இனிமையாக அமையும் என்பது இங்குள்ளவர்கள் நம்பிக்கை .இத்தலத்து இறவைனின் திருத்தேர் முற்றிலும் பழுதுபட்டது .தற்போது குடமுழுக்கின் பொது தேர் முற்றிலும் புதிதாக வடிவமைக்கப்பட்டு பாதுகாப்பு செய்துவைக்கப்பட்டடுள்ளது .
                     இங்கு ஆலயத்தின் உள்ளே புதிதாக 27 நடசத்திர லிங்கங்களும் அவற்றுக்கான விருட்சங்களும். அந்த நட்ச்சதிரம் பற்றிய விபரம் அடங்கிய பலகையும் நிறுவி உள்ளனர்  இங்கு அருகிலேயே ஒரு வராகி சிலையும் கிழக்கும் நோக்கி உள்ளது .மேலும் இங்கு நவக்கிரக விருடங்களும் அவற்றின் குணம் பற்றிய பலகையும் வைத்துள்ளனர் .இங்கு நடராஜர் மண்டபத்தின் அருகில் 13 இலைகளை கொண்ட வில்வவிருட்சம் உள்ளது .இங்கு மாலையில் பலர் தியானப்பயிற்சி , யோகாபயிற்சி செய்கின்றனர் .இந்த ஆலயம் மிகவும் அமைதியாகவும் மனதிற்கும் நிறைவாகும் உள்ள ஒரு ஆலயம்.அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது காண வேண்டிய ஒரு ஆலயம் .ஆலயத்திற்கு சென்றால் அங்கு சிற்பிகள் செதுக்கிய கலை வேலைப்பாட்டை சற்று கண்கொண்டு ரசித்து பார்த்துவிட்டு .இறைவனை தொழுதுவிட்டு முடிந்த வரை அசுத்தம் செய்யாமல் தூய்மையாக வைத்து பாதுகாப்போம் .

                          மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகெலாம்

                                                              --- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Friday 21 November 2014

பொன்னனும் துறவியின் சுருக்கு பையும்

                                 ஒரு ஊரில் பொன்னன் என்ற ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான் அவனுக்கும் திடிரென ஒரு சந்தேகம் எழுந்துதது. நம் ஊரில் மக்கள் மூன்று பிரிவாக வாழ்கிறார்கள்  வறியவன் , செல்வந்தன் மற்றும் ஓர் பிரிவு இரண்டிற்கும் இடையில் உள்ள நடுதரமானனவர்கள் இவர்களில் யார் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினான். பொன்னன் மனதில் ஒரு எண்ணம் வந்தது இரவு மக்கள் தூங்குவதை  வைத்து முடிவுக்கும் வரலாம் என்று நினைத்தான்  

                   பொன்னன் அன்று இரவு அந்த ஊரை சுற்றி பார்த்தான். முதலில் செல்வந்தர்கள் குடியிருக்கும் பகுதிக்குள் சென்றான் அங்கு அவர்கள  மாளிகைகள் விளக்கொளியில் மின்னியது . அங்கு வீட்டில்  ஏற்றி வைக்கப் பட்டிருந்த ஊதுபத்தி வாசனை தெருவரைக்கும் வீசியது.மற்றும் விருந்து உணவு சமைக்கும் வாடை கமகமத்தது உடன் நாட்டியம் இசை யென கலைகட்டியது அங்கு இதையெல்லாம் மனதில் கணக்கும் பொட்டுவைத்துக்கொண்டார்.



                    
                     அடுத்து உள்ள  வீதி நடுத்தர மக்கள் வாழும் வீதிக்கும் சென்றான்.அங்கு வீடுகள் மிகப்பெரிய ஆளவில் இல்லாமல் சற்று நடுத்தரமான அளவில் இருந்தன ஓரிரு தீபங்கள் ஏற்றப்பட்டும் சற்று ஆரவாரம் குறைந்து காணப்பட்டது . இவற்றையும் பொன்னன் மனதில் வைத்துக்கொண்டு அடுத்த பகுதிக்கும் சென்றான் . 

                           மூன்றாவது பகுதி வறியவர்கள் வாழும் பகுதிக்கும் சென்றான் .அங்கு வீடுகள் புனையோலை , தென்னை ஓலையால் முடியப்பட்ட வீடுகள் மிகவும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தனர். இவற்றையும் மனதில் எற்றிகொண்டான் . பொன்னன் இந்த மூன்று காட்சியையும் கண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது  அங்கு வழியில் ஒரு மரத்தடியில் ஒரு துறவியை கண்டான் .
  
                        பொன்னன் அந்த துறவியை பார்த்து தனக்கு வந்த சந்தேகத்தை கூறினான்.உடன் அவன் கண்ட காட்சியையும் துறவியிடம் கூறினான். நீங்கள் தான் விளக்கம் தரவேண்டும் என்றான் .துறவி  பொன்னனிடம் நீ எனக்கும்  ஒரு உதவி செய்யவேண்டும் என்றான். பொன்னன் என்ன உதவி நான்  செய்கிறேன் என்றான் .துறவி தன் பையில் வைத்திருந்த ஒரு கைப்பையை எடுத்து இதில் 5 கை பிடி மண்ணை நிரப்பி தரவேண்டும்  என்று  சொன்னார் .  பொண்ணா நீ பையை பிடித்துக்கொள் நான் மண்ணை நிரப்புகிறேன் என்றார் . 

                      ஒரு கைப்பிடி மண்ணை நிரப்பினர் உள்ளே சென்றது. அடுத்த கைப்பிடி மண்ணை நிறப்ப பை நிரம்பியது . மூன்றாவது கை மண்ணை நிரப்பினார் கீழே கொட்டியது. அடுத்து நான்காவது கை மண்ணையும் பையில் போட முயன்றார் மண் கீழே சிந்தியது . இதை கன்னட பொன்னன் துறவியை பார்த்து  பை தான் கொள்ளவில்லையே ஏன் மீண்டும் முயற்சி செய்துகொண்டு நேரத்தை விரையமாக்குகிறோம் என்றான் பொன்னன்.

                                துறவி  சிரித்த படியே சொன்னார் நீ தெரிந்துகொள்ள நினைக்கும் கேள்விக்கு  பதில் நீயே ஒன்றை மனதில் இதுதான் என்று  நினைத்துக்கொண்டு என்னிடம் பதில் கேட்பது அது எப்படி ஏற்புடையதாக இருக்கும் . சிலரிடம் கலந்து ஆலோசனை செய்து விட்டு முடிவுசெய்தால் சிறப்பான ஒன்று .ஆனால் நீயே  ஒரு கருத்தை மனதில் வைத்துகொண்டு மற்றவரிடம் நீ யூகித்து வைத்தது சரியென்ற மனநிலையில் பிறரிடன் கேட்கும் அவர்கள் பதில் எப்படி உள்ளே உனக்கு சென்றடையும் என்றார் .



           உங்கள் கருத்து முற்றிலும் உண்மை தான் இனி இது போல் யாரிடமும் நடந்து கொள்ள மாட்டேன்  மன்னியுங்கள் என்றான் பொன்னன் . சரி ஐயா பதில் சொல்லுங்கள் என்றான் .அதற்கு துறவி நீ மக்களை மூன்று வகையாக பிரித்து பார்க்காதே . அனைவரும் ஒன்று தான் .அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள் என்றால் செல்வந்தன் மேலும் செல்வதை சேர்க்கவும் பாதுகாக்கவும் நினைப்பு . வறியவன் செல்வம் சேரக் ஆசைபடுகிறான் . இரண்டிற்கும் இடையில் உள்ளவன் தான் தாழ்ந்துவிடக்கூடாது மேலே உயரிய நிலைக்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறான் . இருப்பதை வைத்து எவன் ஒருவன் வைத்து நிறைவா வாழ்கிறானோ அவனே மகிழ்ச்சியுடன் வாழ்கிறான் என்றார் துறவி .   
                                                                                                     ---- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

                                                                                    

Thursday 20 November 2014

மாலியும் அவனது சிந்தனையும்



              கருப்பையாவும் அவரது பேரன் மாலி என்ற மாகலிங்கமும்  தினமும் மாலையில் தனது பேரனை அழைத்துக்கொண்டு கருப்பர் கோயிலுக்கும் சென்று வழிபட்டுவிட்டு வரும்போது தன் பேரனை வழியில் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் உள்ள திண்ணையில் அவர் அமர்ந்து கொண்டு தன் பேரனை சிறிது நேரம் விளையாட விட்டு தன் பேரன் விளையாடும் அழகை ரசித்துக்கொண்டு இருப்பார் தினமும் அவர் தன் பேரனுக்கும் அறவுரைகள் நீதிக்கதைகள் , பக்திகதைகள் , தன் வெளிநாட்டு பயண அனுபவங்களை சொல்லி கொண்டு அழைத்துச் 
செல்வார் .






தினமும் மாலி பள்ளியில் இருந்து வந்ததும் அவன் அப்பாதா சாலியாச்சி உடை மாற்றிவிட்டு தன் கையால் தேநீர் கலக்கி கொடுப்பாள் .மாலியின் அத்தா வள்ளியம்மை மாலையில் தேன்குழல் , வெள்ளைப்பணியாரம் , கந்தரப்பம் என்று மகன் வரும் போது செய்துதருவாள் . மாலையில் இடைப்பலகாரமும் தேதீர் (தேத்தண்ணீ ) குடித்ததும் தன் பேரனை அழைத்துக்கொண்டு கோயிலுக்கும் கிளம்புவார்.


                  அன்று வழக்கம்போல் கருப்பையாவும் பேரன் மாலியும் வழக்கமாக கோயிலுக்கும் செல்லும் வழியில் மாலிவிளையாடும் ஆலமரத்தின் அருகில் உள்ள திண்ணையை அடைந்தனர். அந்த பருவத்தில் ஆலமரத்தில் ஆலம்பழம் பழுது கொத்து கொத்தாக காய்த்து தொங்கியது . மாலியும் வழக்கமாக விளையாடிக்கொண்டு இருந்தான் . அப்போது அங்கு சற்று தொலைவில் கண்மாய் கரை அருகில் ஒரு சுமைதாங்கி கல் இருந்தது அதன் பின்புறம் ஓரமாக ஒரு பெரிய பரங்கிகோடியில் பரங்கிக்காய்கள் பெரிது பெரிதாக காய்த்து மண்ணில் கிடந்தன. அதை கண்ட மாலி உடனே மரத்தடியில் அமர்ந்திருந்த ஐயாவை நோக்கி ஓடிவந்தான் .

ஐயா அவன் வருவதை கண்டு பதை பதைத்து போனார் . என்னடா மாலி பூச்சி போட்டு கடுட்சுடிச்சா என்ன டா என்று வினவினார் அதற்கு அவன் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா என்றான்

என்னடா என்றார் அவன் உடனே ஐயா இந்த உலகை படைத்தது யார் என்றான் ??
அதற்கும் ஐயா உலகை ஈசன் படைத்தான் என்றார் ஐயா .
மாலி உடனே அவர் படைத்ததில் தவறு உள்ளது அவர் தப்பு செய்துள்ளார் என்றான்

என்ன தப்பு என்று சொல் என்றார் ஐயா

                     மாலி உடனே இந்த ஆலமரம் ரொம்பவும் பெருசா உள்ளது ஆனா இதோட பழங்களோ ரொம்பவும் சின்னதா இருக்கும் இதுக்கும் மரத்துக்கும் சம்பந்தமேயில்லாமல் படைத்ததுவிட்டார் . அதோ பாருங்கள் அந்த பரங்கி கொடியை அந்த செடியோ தரையில் கிடைக்கிறது அந்த செடிக்கும் பரங்கிப் பழத்திற்கும் சற்றும் பொருந்தவில்லை என்றான் . இந்த பரங்கிப்பழம் ஆலமரத்தில் காயத்தால் பொருத்தமாக இருக்கும் . இந்த ஆலம்பழம் பரங்கிக்கொடியில் காயத்தால் அதற்கும் ஏதுவாக இருக்கும் இப்படி ஈசன் தவறு செய்துவிட்டான் என்றான் மாலி

                             மாலியின் கேள்வியை கேட்டு மனதில் நகைத்தபடியே தன் பேரனின் கேள்வி ஞானத்தை பார்த்து மிகிழ்ந்து தன் பேரனுக்கும் பதில் சொல்ல முற்பட்டார். தன் பேரன் மாலியை பார்த்து கருப்பையா ஒரு கேள்வியை தன் பேரன் மாலியிடம் கேட்டார் ஈசன் தன் படைப்பில் தவறு செய்தார் என்றே வைத்துக் கொள்வோம் . இந்த மரத்தில் பரங்கிப்பழங்கள் காய்த்து தொங்கட்டும் பரங்கிக்கொடியில் ஆலம்பழம் பழுத்துதொங்கட்டும் . இப்போது இந்த மரத்தில் ஆலம்பழம் மரத்தில் பழுத்து கீழ் விழுகின்றது . பழம் பழுத்தால் கீழே விழும் என்பதை ஒத்துக்கொள்கிறாயா மாலி என்றார் .

                                        ஆம் ஐயா பழம் பழுத்தால் அதன் எடை அதிகம் மற்றும் காம்பினால் பாரம் தாங்காமல் கீழே விழும் என்றான் . சரி நீ சொன்னது போல் இந்த மரத்தில் பரங்கிக்காய்கள் அளவில் பழம் பழுத்தால் என்னவாகும் என்றார் . மாலியுடனே கிழே விழும் என்றான் .இப்பொது நாம் இங்கு ஆலமரத்தின் கீழ் அமர்ந்துகொண்டுளோம் . இப்பொது நீ சொன்ன பரங்கிப்பழம் பழுது கீழ் விழுந்தால் அல்லது மந்திகள் பரித்து போட்டால் என்னவாகும் என்றார் . நம் மீது விழும் என்றான் மாலி . விழுந்தால் என்னவாகும் என்று ஐயா சற்றும் பொறுமையாக கேட்டார் . நமக்கு வலிக்கும் அடிபடும் என்றான் மாலி


                                இப்போது ஐயா பேரனை பார்த்து ஈசன் படைப்பில் தவறு உள்ளதா என்றார் . மாலி இல்லை என்றான் . ஐயா மாலியை பார்த்து நீ சொன்னது போல் இருந்தால் நமக்கும் அடிபடும் இங்கு யாரும் ஓய்வுபெற்று செல்லவும் முடியாது . இந்த மர நிழல் யாருக்கும் உதவாது போயிருக்கும் .நீ பரங்கிக்கொடியின் நிழலில் யாரும் ஓய்வு எடுக்கப்போவதில்லை அதன் காய்கள் மண்ணில் கிடக்கின்றன. இதனால் யாருக்கும் ஆபத்தும் இல்லையென்றார் . இந்த உலகில் உள்ள இயற்கையின் படைப்பின் பின்னும் ஒரு காரணம் இருக்கும் . நாம் இயற்கையை போற்றி பாதுகாக்க வேண்டும் . பாதுகாக்க முடியாவிட்டாலும் அழிக்கக்கூடாது என்றார் .

                     ஈசன் படைப்பில் எந்த குறையும் உள்ளதா இப்போது சொல்லு மாலி என்றார் ஐயா . இல்லை ஐயா என்றான் . மாலி ஐயாவிடம் இயற்கையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்றான் மாலி .ஐயா மரம் நடவேண்டும் என்றார் .மாலி உடனே நான் மரம் நடவேண்டும் என்று கேட்டான் . ஐயா நட்ட பத்தாதுடா தினமும் பராமரிக்க வேண்டும் தண்ணீ உத்தனும் என்றார் . மாலி உடனே அதற்கும் என்ன ஐயா தினமும் நாம் தான் கருப்பர் கோயிலுக்கு போகும் போது தண்ணீர் உத்துவோம் என்றான் . நீங்களும் நானும் சேர்ந்து மரம் இப்போவே வைச்சுட்டு கருப்பர் கோயிலுக்கும் போயிட்டு வீட்டுக் போவோம் என்று அழுத்தமாக சொல்லி அங்கேயே சுற்றி தேடி ஒரு வேப்பமரக்கன்றையும் , மாமரக்கன்றையும் தேடிப்பார்த்து பிடுங்கி வந்தான் மாலி. இன்று ஐயாவை விடுவதாக இல்லை மாலி . சரி பேரன் பிடுங்கி வந்த மரக்கன்றுகளை கண்மாய்க்கும் அருகிலே அங்கு கிடந்த சரட்டையும் குச்சியில் உதவி கொண்டு ஓரமாக குழி தோண்டி கன்றுகளை ஊணி வைத்தனர் .மாலியும் ஐயாவும் அருகில் இருந்த அடிபைபில் அடித்து கை கால்களை சுத்தம் செய்து கொண்டு சரட்டையில் நீர் கொண்டு வந்து ஊற்றி விட்டு கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்


                      வீட்டுக்கு வந்ததும் தன் சாளியாச்சி அப்பத்தாவிடம் நடந்ததை கூறினான் மாலி அப்பாதா உடனே மகிழ்ச்சியுடன் சிரித்துகொண்டே எம்புட்டு மாலியா சமத்தா என்று சொல்லி கட்டி தழுவி முதம்மிட்டால் சாலியாச்சி. உடனே போசஹாளுக்கு போய் உத்திரத்தில் தொங்கவிட்டு இருந்த அதிரச தூக்குசட்டியையும் மாவுருண்டை வைத்திருந்த பரங்கிக்காய் சட்டியையும் எடுத்து ரெண்டும் அதிரசமும் ரெண்டு மாவுருண்டையும் எடுத்து ஒரு கிண்ணியில் வைத்து பேரனுக்கும் கொடுத்தாள் சாலியாச்சி . மாலிஉடனே நாளைக்கு அப்பாதா நீங்களும் வாங்க நானும் ஐயாவும் வச்ச செட்டியகட்டுறேன் என்றான் . அப்பத்தா சிருசுகிட்டே அதுக்கு என்ன அப்பச்சி நாளைக்கும் நானும் ஐயாவோட வரே மூணு பெரும் பொய்த்து வருவோம் என்று சொன்னார் சாலியாச்சி. மாலி நாளை போகைல ஒரு ரப்பர் போனியும் கொண்டுபோகணும் அப்பாதா செடிக்கு தண்ணி ஊத்த என்றான் மாலி .


                       இதுபோல் எல்லோரும் தங்கள் ஊர்களில் அல்லது வீட்டுக்கு அருகில் மரம் நட்டு பராமரிப்போம். நம வீட்டுப் பிஞ்சுகள் மனதில் மரம் நடுவது பற்றி விதை விதைப்போம். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் கருப்பையாவும் ஒரு மாலியும் இருந்தால் நன்றாக இருக்கும் . நாம் நடும் மரங்கள் எல்லாம் ஒரு அடையாள சின்னம் . நாம் இந்த மண்ணை விட்டு சென்றாலும் நம் மரங்கள் நமது புகழ் பாடும் அடையாள சின்னமாக திகழும்.


Wednesday 19 November 2014

ஆவணம்


ஆவணப்படுத்துவோம் என்ற தலையில் சில நாட்கள் முன்பு எழுதிய ஒரு பதிவு இந்த பதிவு முலம் தற்போது உள்ள நகரத்தார் இல்லதையாவது அவற்றின் வரலாற்றை அறிந்து ஆவணம் செய்து பாத்துக்காபடும் என்று நம்புகிறேன் .



ஆவணப்படுத்துவோம்


அனைத்து நகரத்தார்கள் வணக்கம் .

நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் பகுதி செட்டிநாட்டு .நம் பகுதியை நம் வீடுகளை unsico பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது . இது நகரத்தார்களுக்கு பெருமை சேர்க்கும் செய்தி . இன்று பல வெளிநாட்டவர்களும் பார்த்து வியக்கும் வகையில் அமைப்புகள் கொண்ட வீடுகள் கொண்டுள்ளோம் . அது மட்டும் இல்லது நம் கொண்டுவிற்றது பல எண்ணற்ற தேசங்கள் சென்று செல்வங்களை ஈட்டினர். அதுமட்டும் இல்லது அவர்களை தங்களது நேர்மையையும் நாணயத்தையும் நிலைநாட்டினர் . உடன் சைவத்தையும் தங்கள் சென்ற தேசத்திற்கும் கொண்டு சென்றனர் .


நம் ஐயாக்கள் கட்டிவைத்த வீடுகள் தான் நம் வீடுகள் நம் செட்டிநாட்டில் உள்ளன. நம் வீடுகளையும் நம் ஐயாக்கள் அப்பத்தாகள் பார்த்து பார்த்து கட்டிய வீடுகள் . அவற்றை பற்றி இன்று நாம் பலர் கவனிக்காமல் விட்டுவிடுகிறோம் . நம் வீடுகளையும் நம்மையும் நம் வீட்டின் வரலாற்றையும் ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் . இன்று ஆவணப்படுத்துவதால் நம் நாம் வரலாற்றை வரும்கால நம் பிள்ளைகளுக்கும் பொய்சேரும் . இன்று நம் ஒரு வீட்டின் ஆவணம் நாளை ஒரு சமுகத்தின் வரலாற்றை எடுத்து பேசும் . நம் குடி தமிழ் சமுகத்தின் ஆலமரமாக திகழ்ந்தது . ஒவ்வொரு நகரத்தாரும் சற்று நேரம் ஒதுக்கி இவற்றை நாம் செய்தால் நாளை வரும் நம் தலைமுறை தன் வீட்டின் வரலாறு தெளிவாக அறிந்துகொள்ள உதவும் . ஆவணப்படுத்து போது இவற்றையும் நாம் தெளிவாக முடிந்த வரை வீட்டுப் பெரியவர்கள் மூலமாக தெரிந்து வெறும்வாய்மொழிச் செய்தியாக மட்டும் அறிந்து கொள்ளாமல் அவற்றை நாம் எழுத்துப் பூர்வம்மாக ஆவணம் செய்யுங்கள் .

கண்ணப்ப செட்டியார் வளவு ஆ.தெக்கூர்

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பெருமையுண்டு . ஒவ்வொரு வீட்டிற்கு பின்பும் ஒரு வரலாறு கண்டிப்பாக இருக்கும் .

வீட்டை யார் கட்டினார் . எப்படி கட்டினார் ???
நம் ஐயாக்கள் பெயர்கள் ??? அவர்களின் குடிகளே நாம் பங்காளிகளாக கொள்கிறோம் ஆற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்
நம் பாட்டி ஆயாள் பிறந்த ஊர் எது ?? கோயில் எது ???
எங்கு கொண்டு விற்க சென்றாகள் ???
என்னென்ன கொண்டு விற்றார்கள் ???
இந்த கோயிலை புனரமைத்தார்கள் ???
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு விலாசம் உண்டு
அது என்ன ???
ஏன் அந்த விலாசம் ஏற்பட்டது ???
வீட்டிற்கு ஒரு புனை பெயர் உண்டு (பட்டை பெயர் ) அது என்ன ??? எப்படி வந்தது ஏன் ???
நகர சிவன்கோயிலில் ஏதேனும் நிகழ்விற்கு பொறுப்பு ஏற்று கொண்டார்களா ??
ஊரின் போது விழாக்களில் எவற்றுகாவது பொறுப்பேற்று செய்தார்களா ( வடித்து போடுதல் / தண்ணீர்பந்தல் ) ???
நம் வீட்டில் படைப்பு யாருக்காக படைக்கபடுகிறது ??
ஏன் படைக்கப்படுகிறது ???
என்ன பொருட்கள் வைத்து படைகபடுகிறது ???




இவற்றை எல்லாம் உடனே ஆவணம் செய்வது சற்று கடினம்தான் ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் இணங்க நாம் முடிந்தவரை ஆவணம் படுத்தோம் .
சிறுதுளி பெருவெள்ளமாக மாறும் அதுபோல நாமும் நம் வீட்டை பற்றி பொறுமையாக சேகரித்து வைப்பது அவசியம்.நம் வீட்டில் ஐயாக்கள் எழுதிய கணக்கு புத்தகங்கள் , வரவு செலவு சிட்டைகள் , கல்யாணம் செலவு செய்த சிட்டைகள் , கொண்டு விற்ற பொருட்களின் வரவு செலவுகள் , லேவாதேவி தோழி செய்தபோது எழுதிய கணக்குகள் எல்லாம் கேட்பாரற்று மூலையில் சில வீடுகலில் கிடக்கின்றன் இன்னும் சில வீடுகளில் கரையான்கள் அரித்துக்கொண்டிருக்கின்றன .சில வீடுகளில் இவற்றை பத்திரமாக பாதுகாத்தும் வைத்துள்ளனர் . இவைகள்தான் நம் வரலாற்றை பற்றி பேசும் ஆதாரங்கள் . இவற்றை பாதுகாக்க வேண்டும் .நம் ஐயாக்கள் வாழ்ந்தன் வாழ்விற்கும் அர்த்தமுள்ளதாக இருந்ததற்கும் கட்டிய வீடுகளும் செய்த கோயில் திருப்பணிகளும் , ஊருக்கும் பயணாக வெட்டிவைத்த ஊரணிகளும் அவர்களின் புகழை பேசும். அனால் நாமோ அவர்கள் புகழை வீட்டின் புகழையும் மட்டும் பேசிவிட்டுச் செல்லாமல் நாமும் நம்மால் இயன்றதை செய்து நம் புகழையும் நாளை பேசும் வண்ணம் செய்துவிட்டு செல்வோம் .





இன்று நாம் பொருளாதார அடிப்படையில் நாம் விழுந்துவிட்டது உண்மை . ஆனால் நம்மால் முடிந்ததை செய்து நம் செட்டிநாட்டு கிராமத்தையும் நம் வீடுகளையும் பாதுகாப்போம் . நகரத்தார்கள் பற்றிய வரலாற்றையும் திருப்பணியையும் பலர் எழுதிவிட்டனர் பின் ஏன் நாம் ஆவணம் செய்ய வேண்டும் என்று கேள்வி எழும் எழுப்புவர் அதற்கும் பதில் இதோ நகரத்தார்கள் என்று பொதுவில் நகரத்தார்கள் பலர் எழுதியுள்ளனர் . இது நம்மை நம் வீட்டை பற்றிய வரலாறு . நம் ஐயாக்கள் அப்பத்தா , பாட்டிஆயாக்கள் வாழ்ந்தது . ஒவ்வொரு வட்டகையிலும் ஒவ்வொரு வழக்கம் உண்டு அவற்றை பல தொகுத்து வெளியிட்டிருப்பர்.ஒவ்வொரு ஊரிலும் சில சடங்குககளில் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் . அதுபோல் வீட்டின் வழக்கங்களும் இருக்கும் .உதாரணமாக 6௦ 7௦ , 80 என்று கலியாணம் நகரத்தார்கள் வெகுசிறப்பாக செய்துகொள்வர் என்று அனைவருக்கும் தெரியும் . சில வீடுகளில் இந்த முறை செய்யமாட்டார்கள் .காரணம் அவர்களுக்கு ராசி இல்லாமல் இருக்கலாம் அல்லது வேறு சில காரணங்கள் இருக்கும் . மற்றொரு உதாரணம் நகரத்தார்கள் திருமணத்தில் முதல் நாள் மதியம் அல்லது இரவு கசாப்பு சமைத்து விருந்து வைப்பது வழக்கம் . சில வீடுகளில் இது போன்ற வழக்கம் இருக்காது காரணம் . அங்கு வேல் பூசை ,முருகவழிபாடு போன்றவைகள் நிகழும் அதனால் இங்கு சைவம் மட்டும் தான் உண்ணுவர் இதுபோன்ற பல செய்திகள் நம் வீடுகளையும் நம் குடும்பம் பற்றி ஆவணம் செய்யும்போது தெரியவரும் .


யாம் இட்ட இந்த பதிவின் நோக்கம் தங்கள் விருப்பங்கலையும் பாராட்டையும் பெரும் நோக்கில் பதிவிடவில்லை . இந்த பதிவை கண்டு யாரேனும் தங்கள் வீட்டையும் தங்களது வரலாற்றை ஆவணமாக பதிவு செய்தலே யான் இட்ட பதிவின் நோக்கத்திற்கும் கிடைத்த உண்மையான வெற்றியாகும் . அல்லது இவற்றை பற்றி நகரத்தார்கள் கூடும் இடத்தில இவற்றை பற்றி எடுத்து கூறி பிற நகரத்தார்களிடம் இந்த செய்தி சேருவது இந்த பதிவிற்கும் கிடைத்த அளவில்லா வெற்றியாகும் . இந்த பதிவி யாரையும் புன்படும் படி யான் இப்பதிவை இயற்றவில்லை .அப்படி இருப்பின் மன்னிக்கவும் . எல்லாம் சுப்பையன் அருளால் எல்லாம் இனிதே நிகழட்டும் .

http://nnagarathars.blogspot.in/

*** நன்றி***

வேணும்
தொட்டியதுத் கருப்பர் துணை


- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

Monday 17 November 2014

வீடு



செட்டிநாட்டு வீடுகள் :

செட்டிநாட்டு வீடு


மண்டிப்போன காடுகளையும் மரங்களையும் வெட்டி
நிலத்தையும் பக்குவமா சமபடுத்திக்
கடல் கடந்து நாடுவிட்டு நாடுசென்று
சிக்கனமாய் பொருள் சேர்த்து
பக்குவமாய் வீடுகட்டிக் கொண்டடிருக்கு செட்டியாரும்
மோப்பினிலே பலபலக்கும் பளிங்குத்தூணும்
இத்தாலிய டைல்சும் பெல்ஜியம் கண்ணாடியும் கொண்டு
பார்த்து பார்த்து பதிச்சுவச்சு
கலைநயமிக்க வாசலுக்கோ பர்மாதேக்கு கொண்டு
ஆளுயர சன்னளுடன் கதவுமிட்டு
உட்புறத்து திண்ணையிலே பிரும்மாண்ட தூண்களுடன்
வழுவழுப்பான பளிங்கு தரைகளுடன்
வளவசுத்தி ஓரத்தில் பட்டியக்கல்லும் பதிச்சி
மத்தியிலே ஆணடிக்கல்லும் ஒட்டி
நல்லதொரு விசாலமாய் முதற்கட்டும் கட்டியதை
தாங்கிநிற்கும் கல்லுத் தூண்களுமே
கட்டினிலே சுத்தியுள்ள அறைகளிலே ஒன்றைப்
படைக்கவே ஒதிக்கி கொண்டனரே
மேற்படியா ஆச்சிகளுக்கே பட்டாசாளையும் ஜன்னல்களில்
பிரித்தானிய கம்பிகொண்டு மேருகேற்றினரே
அதன்மேற்புறத்தில் வண்ணஓவியமும் தீட்டிசுற்றி சீனப்போம்மைகளுடன்
விளக்கு வைக்க மாடமும் அமைச்சாக
ஊருக்கே விருந்து வைக்க அகலமான
போசன் ஹாலும் எழுபிவச்சு
மேங்கோப்பு கூரையுமே தட்டோடும் சீமையோடும்
கொண்டு சென்சு பதிச்சுவச்சாக
ஆச்சிகளும் புழங்கிடவே சுருக்கமாய் இரண்டாங்
கட்டும் கட்டிவச்சு மகிழ்ந்தாக
உக்குரான அறையயுமே ரெண்டாங்கட்டுக்குள் ளேயமைத்து
பக்குவமாய் தானியமும் சேர்த்துவைத்தார்
வந்தவரும் பசியாற வக்கனையாய் சமைபதர்க்கு
கூடமுமே மூன்றங் கட்டினிலே
அதிலமைத்து சுள்ளிகளும் விரகுகளும் பதமாகக்
அடைவதற்கே சாளையையும் சேர்தமைதார்
பின்கட்டில் மாடுகட்ட தொழுவமும் கூட்டுவண்டி
நிற்பதற்கே ஒட்டுக்கூடமும் அமைத்து
புழங்குவதற்கே வற்றாத கிணறும் வெட்டிவைத்துச்
சலவைக்கல்லும் ஊன்றி வைத்தார்
பறந்து கிடக்கும் தோட்டமுடன் வண்டிமாடு
வந்துசெல்ல வழியும் அமைத்தனரே
காரைச்சுவர்கள் டாலடிக்க வெள்ளைக் கருவுடன்
சுண்ணாம்பும் சேர்த்து பூசிவித்தோம்
வாயிலுக்கு மேற்புறத்தில் புடைசூழத் சுதயாக
திருவா னவலும் நின்றாலே
அலங்கம் அலங்கமாய் கோட்டைபோல் வீடு
கட்டையிலே திருமகளும் வந்தால்
குளம்போல தேங்காமல் கடல்போலப் பெருகி
வாழ்வில் வளம் சேர்த்து நின்றாள்
கோட்டைபோல் வீடமைத்து வாழ்ந்தாலே நாட்டுக்
கோட்டையார் எனப்பெயரும் பெற்றோம்




வாயிலுக்கும் மேல் உள்ள திரு 

பாரம்பரிய உடையணிந்து வளவுக்கும் மத்தியில் வண்ணப் புள்ளி மயில் போல நடனம் புரியும் பெண்பாவைகள்

ஆறுமாதம் முன்பு என் சிந்தனையில் உதித்த இந்த கவிதையை இங்கு இன்று பகிர்ந்ததில் மையற்ற மகிழ்ச்சி .

                                                                 -- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு