Monday 20 January 2020

தாராசுரம் சக்கராயி அம்மன்

தாராசுரம் சக்கராயி அம்மன் கோயில் 
 
பாதாமி அருங்காட்சியகத்தில் உள்ள லஜ்ஜாகௌரி 

தஞ்சாவூர் மாவட்டத்தில் தாராசுரம் வட்டம் எலுமிச்சங்காபாளையத்தில் கீழப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது இந்த அம்மன் கோயில். சக்கராயி அம்மன் என்றும் லஜ்ஜா கௌரி என்றும் அறியப்படுபவள் இந்த பெண் தெய்வம் தலையற்ற நிலையில் பத்மத்தை தலையாகக் கொண்டு குத்த வைத்திருக்கும்  அமைப்பில் உள்ள ஒர்  தெய்வம்.
 சக்கராயி அம்மன் : 

பெரும்பாலும் தலை இல்லாமல் காணப்படும் இப்பெண் உருவம் தனது இரு கால்களையும் மடித்து அகற்றி பிறப்புறுப்பை முன்னிலைப்படுத்தும் விதமாக தரையில் உடலை அழுத்தி, குத்திட்டு அமர்ந்திருக்கும் வகையில் முழங் கைகளை முழங்கால்களின் மேல் ஊன்றி, இருகைகளிளும் மலர்ந்த தாமரை மலரை ஏந்தியபடி மேல்நோக்கி உயர்ந்திருக்கின்றன. மார்பகங்கள் பெரிதாகவுள்ள அவ்வுருவம் அமைந்துள்ளது. தலை இருக்கவேண்டிய இடத்தில் அளவில் பெரிய மலர்ந்த தாமரை பொருத்தப்பட்டுள்ளது.

பிள்ளைப்பேறு இல்லாத பெண்களால் மகவு வேண்டித் தொழப்படுகிற தெய்வம் சக்கராயி அம்மன்.பிள்ளைப்பேறு வேண்டி மட்டும் இன்றி, மழையின்மையால் தோன்றும் வரட்சி நீங்கவும், பயிர்கள் செழிக்கவும் கூட மக்கள் சக்கராயி அம்மனை வழிபடுகின்றனர். இவ்வகை உருவச் சிலைகள் பெரும்பாலும் நீர்ச்சுனை, அருவி, கிணறு போன்ற நீர் சார்ந்த பகுதிகளிலேயே அமையப்பெற்றுள்ளன. இன்றளவும் வழிபடும் முறை மாற்றமில்லாமல் பரவலாக மக்களிடையே உள்ளது. 
தமிழகத்தில் உள்ள இந்த கோவிலும் ஒர் குளத்தின் அருகில் அமைந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநில பகுதிகளில் இத்தெய்வத்தை வழிபாடு பரவலாக உள்ளது. இன்றும் இந்தியாவில் பல ஊர்களில் இந்த தெய்வத்துக்கு ஆலயங்கள் உள்ளன. தமிழகத்தில் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள தாராசுரத்தில் இருந்து எலுமிச்சாப் பாளையம் செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்கும் மேற்கூறிய அமைப்பில் தான் வழிபடப்படுகின்றனர் ஆனால் சேலைகள், மாலை, ஆபரணங்கள் சாற்றியும். கீழ்பகுதியில் ஒரு சுதையில் செய்த தலையையும் வைத்து வழிபடுகின்றனர்.

கோவில் அமைப்பு :

இக்கோயில் தற்கால கட்டுமானத்தில் முகமண்டபம், கருவறை, விமானம் போன்ற அமைப்புகளுடன் காணப்படுகிறது. சன்னதியின் வலப்புறம் நந்தன விநாயகர், பைரவர், தட்சிணாமூர்த்தி, திருமுகலட்சுமி  ஆகியோர் உள்ளனர். மகாவிஷ்ணுபாதமும் திரிசூலமும் இங்கு காணப்படுகின்றன. இடது புறம் மாரியம்மன், விநாயகர், அய்யனார், நந்தனகாளி, வீரபத்திரர் காணப்படுகின்றனர்.
இங்கு மூலவராக சக்கராயி அம்மன் உள்ளார். வாயிலின் வலது மற்றும் இடதுபுறம் தற்கால அமைப்பில் பச்சைக்காளி பவளக்காளியர் நின்ற கோலத்தில் அருளுகிறார்கள். மூலவர் திருமேனி அமைப்பு சக்தி வழிபாட்டில்  உயரிய தாய்மையின் வடிவமாகப் போற்றப்படும்  அமைப்பாகும்.  தமிழகத்தில் இவ்வகை அமைப்பிலான வழிபாட்டை காண்பது அரிதாகும். இங்கு கோவிலின் வாயில் அருகே ஒர் கல்வெட்டும் அருகில் சிறிய துண்டாக வாயுதேவரின் புடைப்பு சிறப்பமாக அமைந்துள்ளது. 
 இக்கோயில் தாரசுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் எலுமிச்சங்கா பாளையத்தில் அமைந்துள்ளது.

Lajja Gauri is a lotus-headed Hindu Goddess associated with  abundance , fertility and sexuality, sometimes euphemistically described as Lajja ("modesty"). She is sometimes shown in abirthing posture, but without outward signs of pregnancy.
This Goddess have been still worshipped around the  Tribal areas of Central India, Andhra Pradesh, Karnataka, Gujarat and Maharashtra. We can see this form deity at town of Badami, known for the Badami Cave Temples, has a sculpture of the deity preserved at the local Archeological Museum, originally found in Naganatha Temple, Naganathakolla, Bijapur District. In Tamilnadu  near darasuram region lajja gauri is worshiped in the  charayii Amman. I hope this is the only place were lajja gauri worship is still exist in Tamil nadu.
---Ramu. Rm.N


Wednesday 15 January 2020

மஞ்சுவிரட்டு காளை!!

நாள்தோறும் உனை சீராட்டி பாராட்டி, 
பசும்புல் பருத்தி துவரை ஊட்டி, 
தொய்வின்றி  பசியாற்றி, 
 உடல் நலம் பேண பதறி பிதற்றி, 
காலாண்டில் சத்துருண்டை ஊட்டி, 
ஊர் உறவு காணாது, ஊண் உறக்கமின்றி, உனை சீராட்டி காத்து பாங்காக உனை சிங்காரித்து ,கொம்புக்கு காவி பூசி , நெற்றிக்கு பட்டம் சூட்டி , கழுத்துக்கு கச்சை,சலங்கை,பூமாலை என பூட்டி அழகுபார்த்து!! 

வாடிவாசல் வழி திறந்து, 
விருட்டெனவே  சீறிப்பாய்ந்து , 
குளம்படிகள் ஆழமாய் பதிந்து, 
வாடியிலே நீ விளையாடும் அழகும்  
உன் மிடுக்கும் சொல்லும் உன் திறனை!!
உன் திமில் அணைக்க தயங்கிடும் தருனமே கூறிடும்  உந்தன் வெற்றி,  இவை சொல்லுமடா உன்னை எப்படி போற்றி வளர்த்தோம் என்று! நீ எங்கள் மழலை செல்வதினும் மேலான நடமாடு தெய்வமடா!!!

இனிய மாட்டுபொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!!

---இராம.நா.இராமு


Tuesday 14 January 2020

தை மகளே வருக!

வருக! வருக! தைமகளே வருக!
தமிழர்கள் கொண்டாடும் தலைமகளே வருக!
நாணிச்சிவந்த நெற்கழனிகளின் 
 உவகை காண வருக!!.

நின்வரவை புத்தாடை உடுத்திப் புத்தரிசி கொண்டு புதுமுட்டியிலே பொங்கல் வைத்து தமிழர்கள் கொண்டாடும் உயர்ந்த திருமகளே வருக!!..

ஆதவனின் வலசையினை  காட்டும் திருநிறையே வருக! வருக! வருக! தைமகளே எங்கள் வாழ்வில் குன்றாத வளமையைத் தந்திடுக!!..
 
தமிழரின் இல்லங்களில் பால்பொங்கி 
பட்டிகள் பெருகி  கழனிகள் செழிக்க 
தைமகளே மங்களசங்கு ஒலித்து வருக!!!  வருக!!..

 அனைவருக்கும் தித்திக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் 
 நல்வாழ்த்துகள்

--று.நா.இராமு(15/1/20)

Monday 13 January 2020

செட்டிநாட்டு பொங்கல் விழா

செட்டிநாட்டு பொங்கல் விழா நிகழ்வு பற்றிய ஒரு முழு தொகுப்பு :
பொங்கல் பண்டிகை என்பது தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் அனவைரும் கொண்டாடி மகிழும் ஒரு சமத்துவ விழா . இந்த விழா செட்டிநாட்டில் எப்படி நகரத்தார்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் /மகிழ்கின்றனர் என்பதே இந்த கட்டுரை
செட்டிநாட்டு வீடுகளும் உணவுகளும் உணவுவகைகளுக்கு  மட்டும் பிரம்மாண்டமானவை அல்ல திருமணத்திற்கும் பின் பெண் பிள்ளைக்கும் அனுப்பும் பொங்கல் பானையும் பிரமாண்டமானவையே 

செட்டிநாட்டில் பொங்கப்பானை:
செட்டிநாட்டில் பிறந்த ஒவ்வொரு ஆச்சிகளுக்கும் அவர்களது தாய் வீட்டில் இருந்து பொங்கப்பானை கொண்டு வருவது ஒரு வழக்கம் . இதன் பொருள் என்னவென்றால் உன்னை நாங்கள் மறக்கவில்லை என்று எங்களோடு நினைவில் என்றும் நீ உள்ளாய் .பொங்கபானையை பெண்ணின் அப்பசியோ ,தம்பியோ அல்லது அண்ணனோ கொண்டுவந்து தருவது வழக்கமாகும் . 
தனது சகோதரி அல்லது மகள் வீட்டுக்கு பொங்கல் இட தேவையான பச்சருசி , நெய் , தேங்காய் , வாழைப்பழம், வாழை இலை , வெற்றிலை, பாக்கு, கூட்டுகாய் குழம்பு வைக்க தேவையான சக்கரவல்லிக்கிழங்கு , அவரைக்காய்  ,மொச்சைக்காய் , தட்டப்பைத்தங்காய் ,நெல்லிக்காய், வெண்டிக்காய் , கத்தரிக்காய் , மாவத்தல் , காரட் , உருளைக்கிழங்கு ,பரங்கிக்காய் ,வாழைக்காய் ,புடலங்காய் ,முருங்கைக்காய் போன்ற காய்கறிகள் , பொரிப்பதற்கு வல்லிகிழங்கு ,பாலாக்காய் , அவியலுக்கு பரங்கிக்காய் போன்ற காய்கறிகள் பொங்கப் பானையின் வாயில் கட்டுவதர்க்கு மஞ்சள்கொத்து போன்றவைகளுடன் கரும்பு வாங்கிவருவார் . முன்பு பெண்வீட்டு இரண்டு கட்டு கொண்டுவந்து கொடுப்பர் . தலைப்பொங்கல் என்றாள் பெண்ணுக்கு மாப்பிளைக்கு கெண்டைசீலை கெண்டை வெட்டி கொண்டுவந்து கொடுப்பர் . அவற்றை வாங்குவதர்க்கு முன் வீட்டில் விளக்கேற்றி வைத்து தடுக்கு போட்டு வைத்து அதில் தன் தமயனையோ அல்லது அப்பச்சியையோ அமரவைத்து பொங்கப் பானையை பெற்றுக்கொண்டு வயதில் பெரியவர் என்றால் ஆசிர்வாதமும் பெற்றுகொள்வது வழக்கம் .பொங்கப்பானை கொண்டுவரும் தம் உடன்பிறந்த அண்ணன் / அப்பச்சி / தம்பிகளுக்கு பாசத்துடன் முட்டை அவித்து வைத்து கசாப்பு எடுத்து குழம்பு வைத்தோ அல்லது புலால் மறுத்தவராக இருப்பின் சைவ உணவு சமைத்து  பரிமாறுவாள் . பின் அவர்கள் சொல்லிக்கொண்டு கிளம்புகையில் ஒரு புது சட்டியில் அவரவர் புகுந்த வீட்டு முறைப்படி 11ருபாய்
21 ருபாய் 51ருபாய் 101 ருபாய் என்று வைத்து கொடுத்து வழியணுப்புவாள் .
முதல் பொங்கல் என்றாள் கெண்டைசீலை கெண்டை வெட்டி கொண்டுவந்து கொடுப்பது சிலர் இல்லத்தில் உள்ள மரபு அல்லது சீலைக்கு என்று 101 301 501 என்று தங்கள் வசதிக்கு தக்க ரூபாயை கையில் சிலர்கொடுப்பர் . பெண்பிள்ளையுடன் இரண்டு மூன்று ஆண்பிள்ளைகள் பிறந்திருந்தால் வருடம் ஒருவர் என்ற சுழற்சி முறையில் பொங்கல் பானை கொண்டு வருவர். தற்போது சிலர் பொங்கலுக்கு என்று ஒருதொகையை வங்கியில் தங்கள் சகோதரிகள் கணக்கில் செலுத்திவிடுகின்றனர் .முன்பு அனைவரும் ஒன்றாக அருகில் இருந்தனர் வீடுகளுக்கு மிகவும் சிறப்பாக பொங்கப் பானையை கொண்டு சென்று கொடுத்து வந்தார்கள் .இன்று இந்த நிலை மாறிவருகிறது இன்று சில வீடுகளில் இத்தனை வருடங்கள் பொங்கப்பானை தருகிறோம் என்று பேசிக்கொள்கின்றனர் அன்று அன்பு பாசம் ஆகியற்றின் வெளிப்பாடாக நிகழ்ந்த ஒரு செயல் இன்று சில பகுதிகளில் சடங்காகவும் நிகழ்கிறது .
ஆனால் இன்றும் சில வீடுகளில் முன்பு போல் இந்த நிகழ்வை ஆடம்பரமாக தடபுடலாக நிகழாவிட்டாலும் அவரவர் சத்திக்கும் இயன்றதை செய்து வருகின்றனர்.
அம்பிகை மீனாட்சியம்மைக்கு பொங்கப் பானை :

நம் செட்டிநாட்டில் ஆச்சிகளுக்கு எப்படி பொங்களுக்கு முன் தங்கள் பிறந்த வீட்டில் இருந்து பொங்கப்பானை வருகிறதோ அதே போல் நம் செட்டிநாட்டிளும் பரவலாக உள்ள நகரசிவன் கோயில்களில் உள்ள அம்பிகைக்கு அந்த அந்த ஊர் நகரத்தார்கள் சார்பில் பொங்கல் பானை கொண்டு வந்து கொடுப்பர் . பொங்களுக்கு முதல் நாள் அல்லது காலையில் அந்த ஊரில் உள்ள நகரத்தார்கள் (செட்டியார்கள்/ ஆச்சிகள் ) ஒன்றாக கூடி (அருசி , பருப்பு , வெல்லம் , தேங்காய் , காய்கறிகள் )அவற்றுடன் சுவாமிக்கு அம்பாளுக்கும் பட்டாடை கொண்டுவருவர் . அவற்றை கோயிலில் அம்பிகை முன் வைத்து வழிபட்டு கோயிலில் உள்ள மடப்பள்ளியில் கொடுத்துவிட்டு வருவர் . 
பொங்கலன்று காலை கோயிலில் உள்ள பரிவார தேவதைகளுக்கு அம்மை(மீனாக்ஷி ) அப்பன்னுக்கும் (சுந்தரேஸ்வரர் ) சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று பின் புத்தாடை சாத்தப்படும் . தை மாதப் பிறப்பு நல்ல நேரம் பார்த்து கோயிலில் பொங்கல் இடப்படும் . நகரசிவன் கோயிலில் பொங்கப்பானை அடுப்பில் ஏற்றிய பிறகே பொங்கல் பானையில் பால் பொங்கிய பின் ஆச்சிகள் வீட்டில் பொங்கப்பானையை அடுப்பில் ஏற்றுவர். இதன் பொருள் என்னவென்றால் முதலில் அம்பிகை மீனாக்ஷி யின் பானையில் முதில் பால் பொங்கவேண்டும் என்று நோக்கத்தில் இவ்வாறு செய்கின்றனர் காரணம் உமையவளை தங்கள் ஆத்தாவாக பாவிக்கின்றனர் .அதுபோல மீனாட்சியம்மையை தங்கள் மகளாக நினைத்து பொங்கப்பானைகொண்டு குடுப்பது வழக்கம். மேலும் சில நகரத்தார் ஊர்களில் அம்பிகையின் பொங்கல் பானை அடுப்பில் ஏற்றிய பிறகே பொங்கலிடும் வழக்கமும் இன்றளவும் உள்ளது.
செட்டிநாட்டுப் பொங்கல் :

பொதுவாக தமிழகத்தில் தைத் திங்களன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் வைத்து கதிரவனுக்கு படைத்தது வழிபடுவர் . எங்கள் செட்டிநாட்டில் மூன்று பொங்கல் இடுவர் . இதற்காக பெண்ணின் திருமணத்தின் பொது மூன்று இரும்படுப்பு மூன்று முரிசொம்பு திருமணத்தின்போது வைப்பர் இதை கொண்டு பொங்கல் வைப்பது வழக்கம் .ஒன்று அதிகாலையில் அரசமரத்தின் அடியில் உள்ள பிள்ளையாருக்கு முதலில் சக்கரைப்பொங்கல் வைத்து வழிபாடு செய்வர் இதன் பொருள் ஆதி முதற்பொருளான விநாயகருக்கும் முதல் வணக்கம் நன்றி தெரிவிக்க இந்த பொங்கல்.வீட்டின் வாயில் மாக்கோலம் இட்டு வாயிலில் மாவிலை தோரணம் மற்றும் வீட்டின் வாயிலில் கண்ணுபில்லை பூ , மாவிலை , நெற்கதிர் , ஆவாரம்பூ போன்றவைகளை ஒன்றாக இணைத்து ஒரு கொத்தை வீட்டின் முகப்பிலும் படைகின்ற வீட்டின் வாயில் மற்றும் கட்டுதரையிலும் சொருகிவைபர். 
பின் பெரிய வீட்டில் அவரவர் அறையின் வாசலில் வளவில் செட்டிநாட்டுப் பொங்கக் கோலம் இடுவர் மற்றும் படைக்கும் வீட்டில் நடுவீட்டுக் கோலம் இடுவர் . பின் வளவில் அல்லது அவரவர் அறையின் முன் பொங்கல் வைப்பர் . பொங்கலிடும் பொங்கர்பானையில் கோலம் இட்டு, விளக்குசட்டியிலும் அதன் மூடியிலும் பொங்கலிடும் அடுப்பிலும் கோலமிட்டுவர். நகரக் கோயிலில் நல்ல நேரம் பார்த்து பொங்கப் பானை ஏற்றிய பின் அவரவர் வீட்டில் ஆச்சிகள் அடுப்பில் தீமூட்டுவர். பின் ஆண்கள் வீட்டின் பெரியவர் செட்டியார்கள் தலையில் விருமாப்பு கட்டி அடுப்பை பொங்கப்பானையால் சுற்றி அடுப்பில் ஏற்றுவர் அப்போது மங்கல் சங்கு ஒலிக்கச்செய்து அடுப்பில் ஏற்றுவர் . மகனுக்கும் திருமணம் செய்து ஒன்றாக இருந்தால் தன் மகன் வீட்டுக்கு சேர்த்து மூன்று பொங்கல் வைப்பர் இரண்டு சர்க்கரைப் பொங்கல் ஒரு வெண்பொங்கல் வைப்பர் . பால் பொங்கும் பொது மங்கள் சங்கு ஒலிக்கச்செய்து வீட்டின் பெரிய ஆச்சி புத்தருசியை பொங்கப்பானையின் வாயை சுற்றி பொங்கல் பானையில் இடுவர்.
அனைத்து காய்களையும் கலந்து ஒரு குழம்பு செய்தும் பலாக்காய் ,பரங்கிக்காய் அல்லது வல்லிக்கிழங்கு பொரித்து மொச்சைகாய் கூட்டு சமைத்து பருப்பு மசித்து வைத்து வைப்பர்.அடுப்பின் முன்பு பொங்கர்பானைகள் சமைத்த பொருட்களை வைத்தும் உடன் சிறிது துண்டு கருப்பு , வாழைப்பழம் , வெற்றிலை பாக்கு தேங்காய் , சிறிது பூ , விளக்கு சட்டி விளக்கு இரண்டை ஏற்றி வைத்து நெற்கதிர்கள் , பனங்கிழங்கு சிறிது பூக்கள் வைத்து வாழை இலையில் சமைத்த காய்கள் பொங்கல் போன்றவைகள் வைத்து கதிரவனை நினைத்து வழிபடுவர். சில வீடுகளில் மூன்று இலை ஐந்து இலை எழு இலை என்று அவரவர் வீட்டின் முறைக்கும் ஏற்ப இலையில் படைத்தது வழிபடுவர்.
பின் சாமி வீட்டில் வீட்டின் பெரிய ஆச்சி விளக்கு வைத்து பின் வீட்டின் ஆண்மகன்கள் இணைந்து சுலகின் மீது இலையை ஒன்றன் மீது ஒன்று வைத்து சாமிவீட்டுக்குள் கொண்டு சென்று வைத்து பின் மீண்டும் வீட்டின் ஆண்கள் ஒன்றிணைந்து விளக்கு சட்டிக்குள் மாவிலை, கண்ணுபில்லைபூ,h,நெற்கதிர் வைத்து பின் ஒரு விளக்கு சட்டி பிள்ளையாரை வைத்து உடன் தேங்காய் பூ , பழம், பனங்கிழங்கு , கரும்புத் துண்டு வைத்து அதில் இரண்டு விளக்குசட்டி விளக்கையும் வைத்து அதை விளக்குசட்டியின் மூடியை பாதி மூடியபடி வீட்டின் ஆண்மக்கள் சேர்ந்து சட்டியை படைக்கும் வீட்டில் கொண்டு சென்று வைத்து வழிபாடுகள் செய்வர்.பின் ஒரு இலையில் இட்டதை  காக்கைக்கு இட்டபின் அனைவரும் உண்ணுவர். 

மாட்டுப்பொங்கலும் கொப்புகொட்டு பழக்கமும் :

மாட்டுப்பொங்கல் அன்று கட்டுதரையை சுத்தம் செய்து சில நாட்கள் முன்பு சுவற்றில் வண்ணம் தீட்டியும் மாடுகளுக்கும் கொம்பு சீவி வண்ணம் தீட்டியும் மாட்டுப்பொங்கல் அன்று கட்டுதரையில் மாடுகளை நீராட்டி மஞ்சள் குங்குமம் இட்டு கழுத்தில் சலங்கைகள் மற்றும் குஞ்சங்கள் கட்டுயும் விவசாயத்திற்கும் பயன்படுத்திய கதிரரிவாள் , ஏர் , கலப்பை போன்றவைகளையும் வைத்து நல்ல நேரம் பார்த்து காலை அல்லது மாலையில் வெண்பொங்கல் வைத்து தேங்காய் வெற்றிலை பாக்கு கரும்பு துண்டுகள் வைத்து மூன்று ஐந்து இலை போட்டு வெண்பொங்கல் வைத்து அதில் சிறிது நெய்யும் வெல்லமும் வைத்து இலைக்கு ஒரு கரும்பு துண்டு வைத்து வழிபடுவர் பின் சமைத்த பொங்கல் மற்றும் கரும்பு துண்டு நெற்கதிர்களையும் பழங்களையும் மாடுகளுக்கு உண்ணக்கொடுப்பர்.

தைப்பொங்கல் அன்று விளக்கு சட்டியில் வைத்த பொருட்களை மாலையில் பெண்கள் கோயிலுக்கு கொண்டு சென்று ஒன்று கூடி அவரவர் வீட்டில் இருந்து கொண்டுவந்த விளக்கு சட்டியில் இருந்த பொருட்களை ஒரு இடமாக வைத்து ஒன்றினைந்து கோப்புகொட்டுவர் . கும்மி கொட்டுதல் என்பதையே கோப்பு கொட்டுதல் என்று செட்டிநாட்டில் அழைப்படும். இந்த கொப்புகொட்டுதல் என்பது செட்டிநாட்டில் தேவகோட்டை , காரைக்குடி , பள்ளத்தூர் போன்ற பகுதிகளில் நிகழும் . முன்பு கோப்பு கொட்ட பெண்ணின் திருமணத்தின் பொது வெள்ளியில் தேங்காய் , சக்கரவல்லிகிழங்கு , கத்தரிக்காய் , அவரைக்காய் ,வெற்றிலை பாக்கு கரும்புத் துண்டு போன்ற பொருட்களை செய்து கொடுப்பர்.இவற்றை முன்பு பெண்கள் கோயிலுக்கு கொண்டு சென்று வைத்து கொப்புகொட்டிவிட்டு வீட்டுக் திரும்புவர். இன்று இந்த கொப்புகொட்டும் வழக்கம் அருகிப்போய்விட்டது. 
கொப்புகொட்டும் பொது சிறுபெண்கள் முதல் பெரிய ஆச்சிகள் வரை வந்து ஒன்று சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்வர்.
நகரத்தார்கள் தங்கள் வீடுகளில் நிகழும் பொங்கல் போன்ற சுப நிகழ்சிகளுக்கு இந்த கோலத்தை இடுவர். நடுவீட்டுக்கோலம் பொங்கல்கோலம் போன்றவைகளை இட்ட பின் நகரத்தார்கள் அசுபநிகழ்வுகள் மற்றும் நீண்ட பயணம் போன்றவைகளை நகரத்தார்கள் செய்வது இல்லை அப்படி செல்லுவதற்கு முன் அருசிமாவால் இட்ட நடுவீட்டுக் கோலத்தை கலைத்து விட்டு அசுபநிகழ்வுவுக்கோ அல்லது நீண்ட பயணத்தையோ மேற்கொள்வர். இந்த நடுவீட்டுக் கோலத்தை 3 அல்லது 5 நாட்கள் என்று ஒற்றை படையாக எண்ணிகையில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கணக்கு இருக்கும் அதன்படி கோலத்தை கலைப்பார்கள்.

- ஆ.தெக்கூர் கரு.கண.இராம.நா.இராமு

செட்டிநாட்டு_நடுவீட்டு_கோலம்

செட்டிநாட்டில் எந்த ஒரு மங்கள நிகழ்வாக இருந்தாலும் அவற்றுள் முதன்மனையாக இடம் பெறுபவை. நடுவீட்டு கோலம், குத்து விளக்கு மற்றும்  மங்கள சங்கு ஒலி இவை முற்றும் முதலுமாக இடம்பெறுபவை இவற்றை கொண்டே துவங்குவார்கள். தை திங்கள், பிள்ளையார் நோன்பு, படைப்பு , திருமணம் , திருமணத்துக்கு அழைத்தல் , சடங்கு  கழித்தல் , முற்றோதல், காவடிப்பூசை  போன்ற  எந்த ஒரு முக்கிய நிகழ்வுகளின்போது இந்தக் கோலம் தனிப்பட்ட நிகழ்விலும் பொது நிகழ்வானாலும் போடப்படும்.
இது ஒரு மங்களத்தின் அடையாள சின்னமாக கருதப்படுகின்றது.
பச்சரிசி மாவை அரைத்துத் துணியில் நனைத்து  எடுத்து மோதிர விரலால் போடப்படும். இந்த கோலம் சாமி வீட்டின் அறையில் போடுவர் அதுவே நடுவீட்டு கோலம் என்று அழைக்கப்படும். மேலும் 
 சாமி வீட்டு நிலை வாசல் , நலைபடியில் நெருக்க கட்டம் அடைப்பர்  அதனை நிலைப்படி கோலம் என்று வழங்கப்படும். திருமணத்தின் போது மணமக்கள் அமரும் மணவறையின் மீது போடப்படும் கோலம் மணைக் கோலம். மாப்பிள்ளை அழைப்புக்கா வாயிலில் இடும் கோலத்தை மாப்பிள்ளை அழைப்பு கோலம் என்பர். இது நடுவீட்டு கோலத்தில் இருந்து சற்று வேறுபட்டிருக்கும். பொங்கல் விழாவின் போது இடும் கோலத்தை பொங்கல் கோலம் என்று பெயர். இதுவும் நடுவீட்டு கோலத்தில் இருந்து சற்றும் மாறுபட்டு இருக்கும். இது செவ்வக வடிவில் அமைந்திருக்கும்.

நடுவீட்டுக் கோலத்தில் முதலில் ஒரு சதுரத்தை வரைவர் அது வீட்டை(வளவு) குறிக்கும். அதன் உட்புறம் நெருக்கமாக  நெளிவுகள் கோடுகள், கட்டங்கள் கொண்டு அடைப்பர். இது நமது உறவுகளின் நெருக்கத்தை குறிக்கும்.அதன் அருகில் வரையப்படும் கால்கள் விட்டின் தூண்களையும் எட்டுதிக்கை குறிக்கும் . நான்கு திசையிலும் வரையப்படும் கோபுர அமைப்பு  வீட்டின் மேற்கூரை (மேங்கோப்பை)குறிக்கும் வாழ்வில் கோபுரம் போல் உயரவேண்டும் என்ற அடையாளமாக காட்டப்படுகிறது. இந்த கோபுரத்தின் உட்புறத்திலும் நெளிகட்டம் , கோடுகள் கொண்டு நெருக்கமான அடைப்பர். மேலும் வெளிப்புற நான்கு கால்களின் அருகில்  சங்கு , கலவடை , பூக்கள், மாங்காய் போன்ற உருவங்கள் வரைவர். சங்கு  நகரத்தார்களின் வாழ்வியலில் இன்றியமையாத மங்கள  சின்னம்.
இது எல்லா திசைகளில் இருந்தது மங்கள செய்திகள் வந்தடைவதை குறிக்கும். மாங்காய், பூக்கள் இவை வாழ்வின் வளம் என்றுரென்றும் குறையாது செழுமையின் சின்னமாகவும் கலவடை என்பது 16 செல்வமும் பெற்று வாழ்வில் மங்களம் பெருக்கத்தை குறிக்கும். இந்த கோலத்தை சுற்றி வெளிப்புற இரட்டை வரிசையாக நெருக்க புள்ளி குத்துவர். இது கணவன் மனைவியை குறிக்கும். நடுவீட்டுக்கோலத்தில் குத்தப்படும் புள்ளிகளை போல்  நமது வீட்டிலும் புள்ளிகள் பெருகவேண்டும் என்பதையும் குறிக்கும். புள்ளி என்பது 
///
புள்ளி ஒருமுழுமையின் குறியீடு. ஆகவே  தான் நமது  நகரத்தார்கள் புள்ளி என்ற சொல்லாட்சியை மிக  கவனமாகவும், பொருளார்ந்ததாகவும் பயன்படுத்தினர்.  புள்ளி என்பது  நிறைவானது,  குறையில்லாதது. ஆகவே புள்ளி என்ற சொல்லாட்சி  - நாட்டுக் கோட்டை  நகரத்தார்  குடிமரபில்,  இன்றியமையா பொறுப்புகளை, பொருள்கொண்ட வாழ்வியலை  தன்னகத்தே  கொண்டுள்ளது.
ஒருவருக்கு, அதாவது - ஒரு நாட்டுக்கோட்டை  நகரத்தார் ஆண்  மகனுக்கும்  அந்த  மரபு வழி வந்த  பெண் மகளுக்கும் திருமணம் உறுதி  செய்யப்பட்டு,  பாக்கு  வைத்து, திருமணம் சொல்லி உற்றார்  உறவினர் கூடி ஊரார் வாழ்த்துரைக்கநடைபெற்ற கணத்திலேயே அந்த இணையர், ஒரு  முழுமை  பெற்ற புள்ளியாகி  விடுகின்றனர். இவர்கள்  சமூக செயல்பாடுகளிலும், அதன் மரபுசார் நியமங்களிலும் தங்களின்பங்களிப்பை முறைப்படி செயவதற்கு  உரிமையுடையவர்களாய்  உள்ளனர். இப்படிப்பட்டவர்களே சமூகநிகழ்வுகள், கோயிற் காரியங்களில் நேரடியாய் ஈடுபட்டு பங்கெடுத்தல், சமூக  உறவு  முறைகளிடம் விவாதங்கள், கருத்துரைத்தல் ஆகிய  பல்வேறு முக்கிய  நடவடிக்கைகளில் ஈடுபட  தகுதி  உடையவர்களாகின்றனர்
----- நெற்குப்பை காசிவிசுவநாதன் ///
முன்பு ஆச்சிகள் 1950 வரை வீட்டில் முடைந்த் தடுக்குகள் , மேட்டி பைகள், மனைவிரிப்புகள் , போன்றவற்றில் நடுவீட்டுக்கோலம் இட்டு அழகுபடுத்தி வைத்திருப்பர். இவை அழகுசாதன பொருளாக இருந்தன. சுப நிகழ்வுகளில் நடுவீட்டுக் கோலமிட்டு அதன் மீதே தங்கள் கைவண்ணத்தில் செய்த விரிப்பையோ தடுக்கையோ இட்டு பயன்படுத்தினர். 
 இன்று பலர் காலத்தையும் நேரத்தையும் மேற்கத்திய நாடுகளில் வசிப்பதையும் போன்ற பல காரணங்களை சொல்லி பிளாஷ்டிக் ஷீட்டுகள் காட்போடிலும் வரைந்ததை வாங்கி வைத்து கொண்டு தங்களின் கடமை முடிந்துவிட்டது என்ற நிலையில் நகர்கின்றனர்.  தற்போது  அயல்நாட்டிலும் நகர்புரத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு நடுவீட்டு கோலம் இடதெரிவது இல்லை. இது  ஒரு தனித்துவமான அடையாளம். ஒவ்வொரு நகரத்தார் வீட்டுக்கும் நடுவீட்டு கோலம் இப்படி இப்படிதான் இடவேண்டும் எனும் சில வழிமுறைகள் உண்டு. இந்த கோலம் நல்ல நேரம் பார்த்து வீடுகளில் / விழாக்களில் இடுவர் அது போலவே இந்த கோலத்தை விழா முடிந்ததும் நல்ல நாள்  நேரம் பார்த்து ஒற்றை படையில் வரும் நாளில் கோலத்தை சுத்தமான துணியினை கொண்டு மொழுகுவர். அதன் பின்னர வீட்டார் தொலைதூர பிரயாணம் மேற்கோள்வதாக இருந்தால் மேற்கொள்வர்.

---று. நா.இராமு

Tuesday 7 January 2020

பத்தினி தெய்வத்தின் அழகு :

பத்தினி தெய்வத்தின்  அழகு :

கண்டுகொண்டே  கண்டுகொண்டேன்  அம்மையின் அழகை 
கண்ணாரக் கண்டுகொண்டேன் ஆத்தாள் அழகை 
மாதர்தம் போற்றித்தொழும் குலக்கொழுந்தினை கண்டேன் 
பத்தினியர்  போற்றும்  அம்மையை கண்டு அகமிழ்ந்தேன் 
அம்மையின்  வரவை  காட்டிய அத்தரும் அகில்மனமும் 
திக்கெங்கும் பரவியுரைத்ததே அம்மையின் எழில்மனத்தை
குங்குமப்பூ மேனி நிறத்தாளை  கண்டுகொண்டேன் 
சீனப்பட்டிழையும்  பொன்னிழையும் ஒருசேரநெய்திட்ட 
பச்சை வண்ணச்சீலை மேனியில் தவழக்கண்டேன்
வேள்வணிகர்  குலவதுவை  கண்டுகளிபுற்றேன்  
ஆதவனின்  கதிர்களைபோன்ற பொலிவு முகங்கொண்டவளே

மஞ்சள் முகத்தழகில்  திருச்சாந்தும் கார்மேகக் கூந்தலும்
அஞ்சனம்  தீட்டிய மைவிழியும்  கொவ்வை செவ்வாய்
இதழ்களில்  புன்முறுவல்பூத்து அம்மையவள் 
உலகத்தில்  அறம்தன்னை  நிலைநாட்டிமங்கையவள் 
சூடிய நகைவகைகள் அணிமணிகள் அழகுதனை 
விளம்பிடவே நாவும்மனமும் எழவில்லை அவளழகுதனில் 
கூந்தலில்  சண்பகமுல்லையும்  நறுமணம்  கமலசூடிநிற்பவள்
தலையணி வகைப்பூவில்  தாழம்பூ,தாமரைப்பூ,சொருகுப்பூவும் 
பிறை ,புல்லகம் ,பூரப்பாளை,சடைநாகம் அணிந்து 
சடைத்திருகு,சந்திரப்பிரபை,சரம்,சுடிகையும்  
குச்சம்,குஞ்சம்,கஞ்சரம்,சேகரமும் பொன்வாகையும்
சூடிய பத்தினியர் தொழும் தெய்வத்தம்மையவள்  
அழகுற செவிமடலில் வைரத்தொடும் ரத்தினக்கோப்பும் 
குழையும்,குவளையும்,கன்னம்பூவும், வல்லிகையும் 
 பூட்டியழகு ததும்பி அருளும் நீலியவள்
வலம்புரி கழுத்தில்  ததும்பும் அணிமணியோ 
தேர்ந்த வைரமும் மாணிக்க கண்டசரமும் பூச்சரமும்
மங்கலச்சரமும் மலர்ச்சரம் மாதுளம்காய்மாலையுடன்  
அணிமணி மாலைவகையில் கடுமணி,மிளகு,நெல்லி,மாங்காயும்
பாண்டிநகர்தனில் விளைந்த முத்துமாலைகளும் அவற்றின்மகுடமாய் 
கோவலன்பூட்டிய மங்களச்சரமும் கழுத்திருவும் பவளத்திருவும் 
ஒற்றை கொங்கையுடையாளின் கண்டத்தில் தவழ்கின்றதுவே 

வஞ்சியவள்  தாழம்பூ புயங்களில்  அழகுததும்பிடவே 
கொந்திக்காயும்  பவளவங்கியும் தரித்த குலக்கொடியின்
கைகளில்  சங்குவளையும் ,திருகு, ரத்தினக்காப்பு 
கொந்திகாய்ப்பூ, நெளிவலவி ,கிங்கிணிவளவி தரித்தவள் 
செங்காந்தாள் விரலுடையாளின் விரல்களிலோ சிவந்திபூவும் 
இரத்தின அரும்தடைகளுடன் வங்கிமோதிரங்களும் 
வட்டப்பூக்களுடன் அம்மையவள் விரல்களில்   
செம்மைநிறத்துடைய சிறந்த  மருதாணிபூசியவள்  
வலதுகரத்தில்  நீதியைநிலைநாட்ட மாணிக்கபர்ல்கொண்ட 
பொர்சிலம்புடையோலே நீதிவழுவாது காக்கும் தெய்வமே
சிங்களபவுத்தர்கள்  போற்றும் வேள்வணிகர் தெய்வமே  
அன்னையவள்  சிற்றிடையில் அழகுததும்பு ஒட்டியானமும்
இடையினை ஒட்டிய கிங்கினிமணிகள் அம்மையவள் வருகையைபாடும்
மாரியாய் நின்று வெம்மைதனித்து மழைதனை  தருபவளாம்
காடுகரைசெழிக்க வழிவகைசெய்ய காவணங்கள் பலகொண்டவளாம் 
திருவடிதரமரையில் அழகுபொங்கு அணிமணிவகைகளோ 
வளையும் தண்டையும் ஆலங்காய் அத்திக்காய் கொலுசுகள்அதிர்
அம்மையவள்  கால்விரலணிகளிலே  காலாழி.,நல்லணி,பில்லணை 
பீலி,மிஞ்சி இவையோடு அம்மையவள்  பொற்பதம்  அழகுபூண்டதுவே 

பொன்னகையும் புன்னகையுன்  பூத்துக் குலுங்கக்கண்டேன் 
நானிலத்தில் திக்கெட்டும் உனதுபுகழ் பரவக்கண்டோம்
நாகநாட்டாரின் வணிகக்குடியுடை  குலத்துதித்த வதுவே 
மூவேந்தர்களும் உன்திருப்புகழ் பாடிப்பணியக் கண்டுகொண்டேன் 
சிங்களநாட்டில் இருந்துவந்த  செங்காள் அம்மையே
சோழவளநாட்டில் வந்துதித்த பொன்மணியே திருவே 
சங்கத்தமிழ்வளர்த்த பாண்டிமாநகர்தனில் அறத்தை நிலைனட்டியம்மையே
சேரமலைநாடு புகந்து ஆடிஅனுஷத்தில் விண்ணுலகு சென்றஅம்மையே 
உன்தன் சிலையுருவும் பெயர்வுருவும் மாறினாலும் 
கனிவான அருளும்  பொருளும்  தருவதில் குறையேதுமில்லை 
உன்வரலாரும் உன்புகழும் எதுகொண்டு மறைத்தாலும் 
மறைத்தவரையும் வழிபட்டவர்கள் வாழ்வை வழமையாகியவளே 
அறம்வோங்கவும்  நீதியும்நேர்மையும்  நிலைபெற்றதம்மா 
உணதுருவில்  கலைமகளின்  வடிவங்களை ஒருங்கக் கண்டேனம்மா

இல்லரத்தாரும்  துறவரத்தாரும் உனைபோற்றுவாரம்மா
நோய்யற்ற  வாழ்வையும்  நல்லறத்தையும் தரவேண்டுமம்மா
ஆநிரைகளும் திருவுடன்கூடிய வீடுமனையும் அருளுகவம்மா 
தானதருமங்கள்  செய்திடவே போன்னும்போருளும் தருவாயம்மா
எம்குலம்தழைத்திட பதினாறுபெறுபேற்று விளங்கிட பிள்ளை
வரும்தரும்  கற்பகத்தருவே உன்புகழைதிக்கெங்கும் பரவக்கண்டேன் 
துறவோர்க்கு பிறவாநிலையும் அறவோர்க்கு மனவலிமையும்
கன்னியர்க்கு நல்மணவாளனும் காளையர்க்கு தொழில்மேன்மையும் 
கேட்பவர்க்கும்  வேண்டியபொது  வேண்டியவண்ணம்  தருபவளே 
வாழ்வில்  என்றும்  இனிமைகள்  நிறைந்திட வேண்டுமாமம்மா 
உன்னருள் மழையில் வாழ்வில்  நனைய வேண்டும் 
உனை மறவாது என்றென்றும்  இருக்கவேண்டும் 

-------- று.நா.இராமு 
21மார்ச்2015 வலைப்பூவில் எழுதியது 

pillaiyar nombu

Pillaiyar nombu
Pillayar Nonbu is a very unique and important festival for the people of Chettinadu i.e. Naattukottai Nagarathars. On this day Lord Vinayagar/Ganpati is worshiped by observing a fast. It is celebrated once in a year in December/January ( Tamil month : margali), on the 21st day after Thiru Karthikai or Periya Karthikai as the way we call it. The Nonbu / fasting which is for 21 days begins on the Thiru Karthigai day. On these days, only one meal (palagaram) a day is taken. Generally in varalakshmi nombu , ketharagowri , karadaiyan nombu women's used to fast but in chettinad during pillaiyar nombu men's used to fast an start the rituals in this nombu men plays a vital role. 
Once, some nagarathars gathered together and made the journey from Kaveripumpattinam. At that time, of karthikai Deepam the sailors were got affected by  tornadoes in the sea and the ship was diverted and the sailors werev unable to reach the terrain. At that time they Rememberd  maragathavinayagar an they prayed to him.From that day  onwards they  took a thread from their dhoti to calculate the no of days. After 21 days they reached the shore of an island. On the auspicious day of sasti an Sathya nakshtra. They made a small pyramid shaped pillayars with a rice flour, jaggery ,ghee and small wick, consisting of 21 threads they lighted those lamps  an thanked to maragathavinayagar with avarampoo. After some days they returned to Kaveripoompatnam.
Note: The above is a brief history of how Pillyar Nonbu originated. There is no written record about this festival. The story has been passed down from generation to generation by word of mouth. 
The 21st day, the last day of the nonbu, is the day when Sasti converges with Sathaya Nakshatram.  It is a day of total fasting and the regular meal recommences after the final prayer has been offered to Pillayar.  During the 21 days a thread from a new Veshti/Dhothi is drawn and kept before the God. On the 21st day all these 21 threads are collected and twisted together to make the wicks needed for the function.

    On the day of the Nonbu a special pillayar is placed on the Nadu Veetu Kolam a special kolam which is put  for auspicious occasions in chettinad.  in the pooja room together with a bunch of flowers avarmpoo(Tanner's cassia) , kannupillai(Aerva lanata) tender paddy bunches , mango Leaves were, tied around a small stick.  This is the symbol of prosperity. The pillayar is beautifully decorated with flowers and garlands. 
The very important prasadam on this day is Karupatti Paniyaram, which is a paniyaram made using rice, jaggery and karupatti. This dough is also used make small pyramid shaped pillayars with a small wick, consisting of 21 threads, dipped in ghee is kept in centre of the pyramid. This is called Elai. Then comes  Vellai Paniyaram made using raw rice, Ulundu vadai, Thirattupaal made using milk. The other offerings are puffed gingerly seeds, puffed rice, puffed maize, puffed millet, Kadalai(peanuts) urundai, Ellu Urundai, fruits, beetle nut leaves, paaku, etc.  
After all the preparations for the function is over, the ceremony/function is started with the blowing of the sacred conch shell(sangu). The eldest person will wear a turban in the function lights the Elai Lamp i.e. the small pyramid shaped maavu with the wick in the centre. The first one he takes in the name of the God. Then the next one he takes for himself. And then gives one Elai for each those present in the function. It is the custom of the recipients to worship Pillayar, then receive the Elai and swallow it whole which symbolises that the Holy Spirit will become part of the devotee. An expectant mother receives two Elais. The number of Elai will be kept  in odd numbers. Suppose if a family have 4 members in the family, then the no.of Elai will be 5. 

 This is a unique practice which is followed in chettinad. Apart from chettinad region we can see this event in sri Lankan Tamil temples especially in pillaiyar temples. They call it as pillaiyar kathai. They use to read pillaiyar stories for 21 days .

-- Ramu. Rm.N
#Pillayar_Nonbu #pillaiyar #chettinad #joy celebration rituals happy #family_time  1January 2020

பொன்சிரிப்பில் பூத்தவளே!

பொன்சிரிப்பில்  பூத்திருக்கும் பூரணி வசந்தாளை வாழ்த்திடவே
அம்மான்கள் நாங்கள் இனைந்து வருகின்றோம் 
தேனமுதாய் இனிக்கின்ற தென்பாண்டி சங்கத் 
தமிழ்கொண்டு  வண்ணமுற  வாழ்வாங்கு வாழ்த்துகிறோம் !! 

கோதைமீனாள் அருள் சுரக்கும் ஆ.தெக்கூரின் நற்குடியில்
மதுவநேசன் ஐயா  விசாலாட்சி ஆயாவும் 
அட்டி ஆண்டில்  உதித்த பொற்கொடியாளாம் 
எங்கள் வாலைச்சிறுமி வாழ்வாங்கு வாழ்ந்திடவே !! 

கற்பகத்தான் புகழ்பாடும் சிராவயலின் பெருங்குடியாம்
கதிரேசன் ஐயா வசந்தா அப்பத்தாவின் 
பேராக நாகப்பன் சிவநத்தினி பெற்றமகள்
பூரணிவசந்தாவேனும் பேரழகியதேரின் எழில்சொல்லும் சிராவயல் நகர்..

இல்லத்தின் தலைமகளே அருகுபோல் வேரூன்றி
மருதாணிக்  கைசிவக்க மல்லிகைபோல் மணம்பரப்பி
வண்ணமகள்  எண்ணமதில் வசந்தங்கள் நிறைந்திருக்க 
உலகத்தார்மெச்ச திருவினாள்வாழ தில்லைசிவகாமியை வேண்டுகிறோம்..
பூத்தமுகத் தாமரையாய் புன்னகைக்கும் பொன்மயிலே 
பட்டங்கள் பலபெற்று வின்முட்ட வளர்ந்தாளும் 
பகட்டின்றி எளிமையுடன் செட்டாக சிக்கனமாய் 
செயலாற்றும் செட்டிநாட்டவரின் செல்வக் களஞ்சியமே !! 

வேணும் மலையாளத் தொட்டியத்து கருப்பர் துணை

அன்புடைய அம்மான்
இராம.நா.இராமநாதன்..

-- று.நா.இராமு
30மே2019 எழுதியது

குமரியின் ஊஞ்சல்



சீர்மேவும் வளங்களுடை சிந்தாமணி கிரகத்தில் நித்தியமாய்  திகழும் பைங்கிளியாய் மேவும் ..
சின்னஞ்சிறு வாலைப் பெண்ணவளும் மகிழ்ந்திடவே
கன்னல் தமிழ் திருவூஞ்சல் தனிலே வைத்து அதனில்
களித்தாட ஊஞ்சலிசை  பாடிஏத்த..
 முழுமுதற்பொருளாய்  வளந் திகழும் கணபதியார்
 செஞ்சரணம் காப்பு தாமே.. 


வேத நாற்பவளத் தூண் விளங்க நாட்டி
விரிந்த ஆகமம் அதனைவயிர விட்டம் பூட்டி
நாதமாம் கலை ஞானக் கயிறது மாட்டியதில்
பீஜாச்சரங்கள் அனைத்தும் காரமெனும் பீடம் தேக்கதாக
 மருவுதமிழ்த்  திருவூஞ்சல் தனிலே வாலை பூங்கொடியாள்  ஆடீர் ஊஞ்சல்.... 1

ஊர்வசியும் மேனகையும் வடம்தொட்டாட்ட உற்ற திலோத்தமையும் ரம்பையும் இசைகள் கூட்ட 
நாமகளும் சுகேசியும் நல்லருகு சூட்ட 
இலக்குமியும் பிரம்மலோச்சதையும்  சுடர்கள் நீட்ட
பரிமளையும் கிருதாசியும் காலாஞ்சிகள் ஏந்த
சித்திரமோத்த இந்திராணியும் சித்திரலேகையும் கவரிகள் வீச..
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும்
வாலை பூங்கொடியே  ஆடீர் ஊஞ்சல்.... 2

சதுர்முகனும் திருமாலும் இருபால்சூழ நந்தியார் வட்டம் தூக்க
அசுவினிதேவ குமாரர்கள் மதுகுடமும் பாற்குடமும் நீட்ட
பறந்ததிருவும் கதிரனும்  சீவிகை தாங்க வாக்கியமார் காமனுமே ரதியுடன் ஆடிக்காட்ட 
முற்றும் துறந்தவரும் முனிவர்களும் கொடிகள் பற்ற சூழ்கமல கந்தர்வரும் கின்னரரும்  பூமாரி பொழிய 
வரங்கள் தரும் காமேசுவரன் உரை ஸ்ரீபுரத்தில் திகழும்
வாலை பூங்கொடியே  ஆடீர் ஊஞ்சல்.... 3

பண்டனின் ஐயாறு புத்திரர்களை  நோடிப் பொழுதில் அழித்து 
அறம்காத்த 
எங்கள் வாலை பெண்ணே   நின்னை கண்டு மந்திரினியாம் சியாமலையும் சேனாபதியாள் வாராகியும் வியக்க வாக்தேவியர்கள் நின்புகழ்தனை பாடியபடியே அட்டமங்களங்கள் காட்ட
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும் வாலைபூங்கொடியே  வெற்றிக் களிப்புடனே ஆடீர் ஊஞ்சல்... 4

ஞானம்தனை நல்கிடவே அக்கமாலையுடன் ஏடும் தாங்கிய குமரியே ஆடீர் ஊஞ்சல்..
மோகமும் போகமும் அற்றுபோக செய்யுத்திடும் சிட்டே சிமிழே  ஆடீர் ஊஞ்சல்.. 
விட்டகுறை தொட்டகுறை நீக்கி முற்றும் முழுதும் பரிபூரணத்துவம் 
அடைந்திடசெய்யும் மழலை திருவே ஆடீர் ஊஞ்சல்..
சொர்ணம் மரகத வர்ண ரத்தினமாக ஐந்தோழில்கள் செய்யும் பாவையே ஆடீர் ஊஞ்சல்..
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும் வாலைபூங்கொடியே  களிப்புடனே ஆடீர் ஊஞ்சல் ... 5

குழவியேநின் புன்சிரிப்பு முகமாட சூரிய சந்திர பிறையுடனே பொன்சடைகள் அசைந்து  ஆட
அழகான செவிமடுவில் வைரதோடு
 கொப்பும் குழையும் அசைந்திட சங்கு கழுத்திலே வைரத்தில் இழைத்த கண்டசரமுடன் மாணிக்க பதக்கமும் மோகன மாலையும் தாளங்கள் போட
சிற்றிடையில் நலினமாய் திழந்திடும் மேகலையும் ஒலியும்கூட்ட 
பாங்கான மேனியில் தவழ்ந்திடும் பச்சைபட்டும் இச்சையாய் காற்றில் சலசலத்திட 
தாழம்பூயத்தினிலே வங்கியுடன் வைரவலையும் ரத்தினவலையும் ஆட
பிஞ்சு கால்களில் தண்டைகளும் ஆட 
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும் வாலைபூங்கொடியே  களிப்புடனே ஆடீர் ஊஞ்சல்... 6

வாலையின் முகமலர்வு கண்ட
கற்பக வரனனுடன் வேலவரு அசைந்து ஆட 
வீர நற்புதல்வர் ஐயன் வைரவரும் சுழன்று ஆட பாலை நிலத்தவளாம் கொற்றவையும் கலைமானோடு தனை மறந்தாட
நின் குறுநகையில் ஈரேழு உலகையும் வசப்படுத்தி
ஸ்ரீபுரத்தில் நித்தியமாய் உரைந்திடும் வாலைபூங்கொடியே  உவகையுடனே ஆடீர் ஊஞ்சல்... 7

செஞ்சொல் மதுரதமிழ் பாமாலை சாத்தி சிந்தனை வந்தெனை அமர்த்தும் திருநாமத்தாள் கஞ்ச மலர் அடிபரவ துதிப்பவர்க்கும் உள்ளம் கசிந்து துதிப்பவர்க்கும் உச்சிகாலை மாலை வஞ்சன நோய் வறுமை இன்மை
மருமைக்கும் நரகினுக்கும் பிறவி நோய்க்கு அஞ்சேல் அஞ்சேலேன 
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும் வாலைபூங்கொடியே மோகன சிரிப்போடு ஆடீர் ஊஞ்சல்... 8



சீர்பெரு ஆவினம் வாழி நான்மறை வேதம் வாழி பார்பெருகு விளைநிலங்கள் வாழி செல்வப்பெருகு மழை வாழி நற்பெறும் தமிழர்கலைகள் வாழி
 தார்பெருகு தமிழ் வாழி 
தெய்வப்பூசை தவம் செய் தொண்டடியார் வாழி 
ஸ்ரீபுர நகரம் வாழி
வாலைக்குமரியாள் பொன்னடிகள் வாழி வாழி வாழி ...

ஐங்கரர்க்கும்  ஆறுமுகநாதருக்கும் மங்களம் காமேஷ்வருக்கும் காமேஷ்வஷ்வரிக்கும் மங்களம்!
தன்னடியார் யாவர்க்கும் மங்களம்!
லலிதா மகாதிரிபுர சுந்தரிக்கும் மங்களம் சுபமங்களம் ஜெயமங்களம் !!!
--- று.நா.இராமு 
15ஜூலை2018 சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் போது எழுதியது