Tuesday 7 January 2020

குமரியின் ஊஞ்சல்



சீர்மேவும் வளங்களுடை சிந்தாமணி கிரகத்தில் நித்தியமாய்  திகழும் பைங்கிளியாய் மேவும் ..
சின்னஞ்சிறு வாலைப் பெண்ணவளும் மகிழ்ந்திடவே
கன்னல் தமிழ் திருவூஞ்சல் தனிலே வைத்து அதனில்
களித்தாட ஊஞ்சலிசை  பாடிஏத்த..
 முழுமுதற்பொருளாய்  வளந் திகழும் கணபதியார்
 செஞ்சரணம் காப்பு தாமே.. 


வேத நாற்பவளத் தூண் விளங்க நாட்டி
விரிந்த ஆகமம் அதனைவயிர விட்டம் பூட்டி
நாதமாம் கலை ஞானக் கயிறது மாட்டியதில்
பீஜாச்சரங்கள் அனைத்தும் காரமெனும் பீடம் தேக்கதாக
 மருவுதமிழ்த்  திருவூஞ்சல் தனிலே வாலை பூங்கொடியாள்  ஆடீர் ஊஞ்சல்.... 1

ஊர்வசியும் மேனகையும் வடம்தொட்டாட்ட உற்ற திலோத்தமையும் ரம்பையும் இசைகள் கூட்ட 
நாமகளும் சுகேசியும் நல்லருகு சூட்ட 
இலக்குமியும் பிரம்மலோச்சதையும்  சுடர்கள் நீட்ட
பரிமளையும் கிருதாசியும் காலாஞ்சிகள் ஏந்த
சித்திரமோத்த இந்திராணியும் சித்திரலேகையும் கவரிகள் வீச..
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும்
வாலை பூங்கொடியே  ஆடீர் ஊஞ்சல்.... 2

சதுர்முகனும் திருமாலும் இருபால்சூழ நந்தியார் வட்டம் தூக்க
அசுவினிதேவ குமாரர்கள் மதுகுடமும் பாற்குடமும் நீட்ட
பறந்ததிருவும் கதிரனும்  சீவிகை தாங்க வாக்கியமார் காமனுமே ரதியுடன் ஆடிக்காட்ட 
முற்றும் துறந்தவரும் முனிவர்களும் கொடிகள் பற்ற சூழ்கமல கந்தர்வரும் கின்னரரும்  பூமாரி பொழிய 
வரங்கள் தரும் காமேசுவரன் உரை ஸ்ரீபுரத்தில் திகழும்
வாலை பூங்கொடியே  ஆடீர் ஊஞ்சல்.... 3

பண்டனின் ஐயாறு புத்திரர்களை  நோடிப் பொழுதில் அழித்து 
அறம்காத்த 
எங்கள் வாலை பெண்ணே   நின்னை கண்டு மந்திரினியாம் சியாமலையும் சேனாபதியாள் வாராகியும் வியக்க வாக்தேவியர்கள் நின்புகழ்தனை பாடியபடியே அட்டமங்களங்கள் காட்ட
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும் வாலைபூங்கொடியே  வெற்றிக் களிப்புடனே ஆடீர் ஊஞ்சல்... 4

ஞானம்தனை நல்கிடவே அக்கமாலையுடன் ஏடும் தாங்கிய குமரியே ஆடீர் ஊஞ்சல்..
மோகமும் போகமும் அற்றுபோக செய்யுத்திடும் சிட்டே சிமிழே  ஆடீர் ஊஞ்சல்.. 
விட்டகுறை தொட்டகுறை நீக்கி முற்றும் முழுதும் பரிபூரணத்துவம் 
அடைந்திடசெய்யும் மழலை திருவே ஆடீர் ஊஞ்சல்..
சொர்ணம் மரகத வர்ண ரத்தினமாக ஐந்தோழில்கள் செய்யும் பாவையே ஆடீர் ஊஞ்சல்..
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும் வாலைபூங்கொடியே  களிப்புடனே ஆடீர் ஊஞ்சல் ... 5

குழவியேநின் புன்சிரிப்பு முகமாட சூரிய சந்திர பிறையுடனே பொன்சடைகள் அசைந்து  ஆட
அழகான செவிமடுவில் வைரதோடு
 கொப்பும் குழையும் அசைந்திட சங்கு கழுத்திலே வைரத்தில் இழைத்த கண்டசரமுடன் மாணிக்க பதக்கமும் மோகன மாலையும் தாளங்கள் போட
சிற்றிடையில் நலினமாய் திழந்திடும் மேகலையும் ஒலியும்கூட்ட 
பாங்கான மேனியில் தவழ்ந்திடும் பச்சைபட்டும் இச்சையாய் காற்றில் சலசலத்திட 
தாழம்பூயத்தினிலே வங்கியுடன் வைரவலையும் ரத்தினவலையும் ஆட
பிஞ்சு கால்களில் தண்டைகளும் ஆட 
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும் வாலைபூங்கொடியே  களிப்புடனே ஆடீர் ஊஞ்சல்... 6

வாலையின் முகமலர்வு கண்ட
கற்பக வரனனுடன் வேலவரு அசைந்து ஆட 
வீர நற்புதல்வர் ஐயன் வைரவரும் சுழன்று ஆட பாலை நிலத்தவளாம் கொற்றவையும் கலைமானோடு தனை மறந்தாட
நின் குறுநகையில் ஈரேழு உலகையும் வசப்படுத்தி
ஸ்ரீபுரத்தில் நித்தியமாய் உரைந்திடும் வாலைபூங்கொடியே  உவகையுடனே ஆடீர் ஊஞ்சல்... 7

செஞ்சொல் மதுரதமிழ் பாமாலை சாத்தி சிந்தனை வந்தெனை அமர்த்தும் திருநாமத்தாள் கஞ்ச மலர் அடிபரவ துதிப்பவர்க்கும் உள்ளம் கசிந்து துதிப்பவர்க்கும் உச்சிகாலை மாலை வஞ்சன நோய் வறுமை இன்மை
மருமைக்கும் நரகினுக்கும் பிறவி நோய்க்கு அஞ்சேல் அஞ்சேலேன 
சீர்மேவும் ஸ்ரீபுரத்தில் உரையும் வாலைபூங்கொடியே மோகன சிரிப்போடு ஆடீர் ஊஞ்சல்... 8



சீர்பெரு ஆவினம் வாழி நான்மறை வேதம் வாழி பார்பெருகு விளைநிலங்கள் வாழி செல்வப்பெருகு மழை வாழி நற்பெறும் தமிழர்கலைகள் வாழி
 தார்பெருகு தமிழ் வாழி 
தெய்வப்பூசை தவம் செய் தொண்டடியார் வாழி 
ஸ்ரீபுர நகரம் வாழி
வாலைக்குமரியாள் பொன்னடிகள் வாழி வாழி வாழி ...

ஐங்கரர்க்கும்  ஆறுமுகநாதருக்கும் மங்களம் காமேஷ்வருக்கும் காமேஷ்வஷ்வரிக்கும் மங்களம்!
தன்னடியார் யாவர்க்கும் மங்களம்!
லலிதா மகாதிரிபுர சுந்தரிக்கும் மங்களம் சுபமங்களம் ஜெயமங்களம் !!!
--- று.நா.இராமு 
15ஜூலை2018 சென்னையில் இருந்து சிதம்பரம் செல்லும் போது எழுதியது

No comments: