செட்டிநாட்டில் எந்த ஒரு மங்கள நிகழ்வாக இருந்தாலும் அவற்றுள் முதன்மனையாக இடம் பெறுபவை. நடுவீட்டு கோலம், குத்து விளக்கு மற்றும் மங்கள சங்கு ஒலி இவை முற்றும் முதலுமாக இடம்பெறுபவை இவற்றை கொண்டே துவங்குவார்கள். தை திங்கள், பிள்ளையார் நோன்பு, படைப்பு , திருமணம் , திருமணத்துக்கு அழைத்தல் , சடங்கு கழித்தல் , முற்றோதல், காவடிப்பூசை போன்ற எந்த ஒரு முக்கிய நிகழ்வுகளின்போது இந்தக் கோலம் தனிப்பட்ட நிகழ்விலும் பொது நிகழ்வானாலும் போடப்படும்.
இது ஒரு மங்களத்தின் அடையாள சின்னமாக கருதப்படுகின்றது.
பச்சரிசி மாவை அரைத்துத் துணியில் நனைத்து எடுத்து மோதிர விரலால் போடப்படும். இந்த கோலம் சாமி வீட்டின் அறையில் போடுவர் அதுவே நடுவீட்டு கோலம் என்று அழைக்கப்படும். மேலும்
சாமி வீட்டு நிலை வாசல் , நலைபடியில் நெருக்க கட்டம் அடைப்பர் அதனை நிலைப்படி கோலம் என்று வழங்கப்படும். திருமணத்தின் போது மணமக்கள் அமரும் மணவறையின் மீது போடப்படும் கோலம் மணைக் கோலம். மாப்பிள்ளை அழைப்புக்கா வாயிலில் இடும் கோலத்தை மாப்பிள்ளை அழைப்பு கோலம் என்பர். இது நடுவீட்டு கோலத்தில் இருந்து சற்று வேறுபட்டிருக்கும். பொங்கல் விழாவின் போது இடும் கோலத்தை பொங்கல் கோலம் என்று பெயர். இதுவும் நடுவீட்டு கோலத்தில் இருந்து சற்றும் மாறுபட்டு இருக்கும். இது செவ்வக வடிவில் அமைந்திருக்கும்.
நடுவீட்டுக் கோலத்தில் முதலில் ஒரு சதுரத்தை வரைவர் அது வீட்டை(வளவு) குறிக்கும். அதன் உட்புறம் நெருக்கமாக நெளிவுகள் கோடுகள், கட்டங்கள் கொண்டு அடைப்பர். இது நமது உறவுகளின் நெருக்கத்தை குறிக்கும்.அதன் அருகில் வரையப்படும் கால்கள் விட்டின் தூண்களையும் எட்டுதிக்கை குறிக்கும் . நான்கு திசையிலும் வரையப்படும் கோபுர அமைப்பு வீட்டின் மேற்கூரை (மேங்கோப்பை)குறிக்கும் வாழ்வில் கோபுரம் போல் உயரவேண்டும் என்ற அடையாளமாக காட்டப்படுகிறது. இந்த கோபுரத்தின் உட்புறத்திலும் நெளிகட்டம் , கோடுகள் கொண்டு நெருக்கமான அடைப்பர். மேலும் வெளிப்புற நான்கு கால்களின் அருகில் சங்கு , கலவடை , பூக்கள், மாங்காய் போன்ற உருவங்கள் வரைவர். சங்கு நகரத்தார்களின் வாழ்வியலில் இன்றியமையாத மங்கள சின்னம்.
இது எல்லா திசைகளில் இருந்தது மங்கள செய்திகள் வந்தடைவதை குறிக்கும். மாங்காய், பூக்கள் இவை வாழ்வின் வளம் என்றுரென்றும் குறையாது செழுமையின் சின்னமாகவும் கலவடை என்பது 16 செல்வமும் பெற்று வாழ்வில் மங்களம் பெருக்கத்தை குறிக்கும். இந்த கோலத்தை சுற்றி வெளிப்புற இரட்டை வரிசையாக நெருக்க புள்ளி குத்துவர். இது கணவன் மனைவியை குறிக்கும். நடுவீட்டுக்கோலத்தில் குத்தப்படும் புள்ளிகளை போல் நமது வீட்டிலும் புள்ளிகள் பெருகவேண்டும் என்பதையும் குறிக்கும். புள்ளி என்பது
///
புள்ளி ஒருமுழுமையின் குறியீடு. ஆகவே தான் நமது நகரத்தார்கள் புள்ளி என்ற சொல்லாட்சியை மிக கவனமாகவும், பொருளார்ந்ததாகவும் பயன்படுத்தினர். புள்ளி என்பது நிறைவானது, குறையில்லாதது. ஆகவே புள்ளி என்ற சொல்லாட்சி - நாட்டுக் கோட்டை நகரத்தார் குடிமரபில், இன்றியமையா பொறுப்புகளை, பொருள்கொண்ட வாழ்வியலை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஒருவருக்கு, அதாவது - ஒரு நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆண் மகனுக்கும் அந்த மரபு வழி வந்த பெண் மகளுக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு, பாக்கு வைத்து, திருமணம் சொல்லி உற்றார் உறவினர் கூடி ஊரார் வாழ்த்துரைக்கநடைபெற்ற கணத்திலேயே அந்த இணையர், ஒரு முழுமை பெற்ற புள்ளியாகி விடுகின்றனர். இவர்கள் சமூக செயல்பாடுகளிலும், அதன் மரபுசார் நியமங்களிலும் தங்களின்பங்களிப்பை முறைப்படி செயவதற்கு உரிமையுடையவர்களாய் உள்ளனர். இப்படிப்பட்டவர்களே சமூகநிகழ்வுகள், கோயிற் காரியங்களில் நேரடியாய் ஈடுபட்டு பங்கெடுத்தல், சமூக உறவு முறைகளிடம் விவாதங்கள், கருத்துரைத்தல் ஆகிய பல்வேறு முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட தகுதி உடையவர்களாகின்றனர்
----- நெற்குப்பை காசிவிசுவநாதன் ///
முன்பு ஆச்சிகள் 1950 வரை வீட்டில் முடைந்த் தடுக்குகள் , மேட்டி பைகள், மனைவிரிப்புகள் , போன்றவற்றில் நடுவீட்டுக்கோலம் இட்டு அழகுபடுத்தி வைத்திருப்பர். இவை அழகுசாதன பொருளாக இருந்தன. சுப நிகழ்வுகளில் நடுவீட்டுக் கோலமிட்டு அதன் மீதே தங்கள் கைவண்ணத்தில் செய்த விரிப்பையோ தடுக்கையோ இட்டு பயன்படுத்தினர்.
இன்று பலர் காலத்தையும் நேரத்தையும் மேற்கத்திய நாடுகளில் வசிப்பதையும் போன்ற பல காரணங்களை சொல்லி பிளாஷ்டிக் ஷீட்டுகள் காட்போடிலும் வரைந்ததை வாங்கி வைத்து கொண்டு தங்களின் கடமை முடிந்துவிட்டது என்ற நிலையில் நகர்கின்றனர். தற்போது அயல்நாட்டிலும் நகர்புரத்தில் வசிக்கும் பிள்ளைகளுக்கு நடுவீட்டு கோலம் இடதெரிவது இல்லை. இது ஒரு தனித்துவமான அடையாளம். ஒவ்வொரு நகரத்தார் வீட்டுக்கும் நடுவீட்டு கோலம் இப்படி இப்படிதான் இடவேண்டும் எனும் சில வழிமுறைகள் உண்டு. இந்த கோலம் நல்ல நேரம் பார்த்து வீடுகளில் / விழாக்களில் இடுவர் அது போலவே இந்த கோலத்தை விழா முடிந்ததும் நல்ல நாள் நேரம் பார்த்து ஒற்றை படையில் வரும் நாளில் கோலத்தை சுத்தமான துணியினை கொண்டு மொழுகுவர். அதன் பின்னர வீட்டார் தொலைதூர பிரயாணம் மேற்கோள்வதாக இருந்தால் மேற்கொள்வர்.
---று. நா.இராமு
No comments:
Post a Comment