பத்தினி தெய்வத்தின் அழகு :
கண்டுகொண்டே கண்டுகொண்டேன் அம்மையின் அழகை
கண்ணாரக் கண்டுகொண்டேன் ஆத்தாள் அழகை
மாதர்தம் போற்றித்தொழும் குலக்கொழுந்தினை கண்டேன்
பத்தினியர் போற்றும் அம்மையை கண்டு அகமிழ்ந்தேன்
அம்மையின் வரவை காட்டிய அத்தரும் அகில்மனமும்
திக்கெங்கும் பரவியுரைத்ததே அம்மையின் எழில்மனத்தை
குங்குமப்பூ மேனி நிறத்தாளை கண்டுகொண்டேன்
சீனப்பட்டிழையும் பொன்னிழையும் ஒருசேரநெய்திட்ட
பச்சை வண்ணச்சீலை மேனியில் தவழக்கண்டேன்
வேள்வணிகர் குலவதுவை கண்டுகளிபுற்றேன்
ஆதவனின் கதிர்களைபோன்ற பொலிவு முகங்கொண்டவளே
மஞ்சள் முகத்தழகில் திருச்சாந்தும் கார்மேகக் கூந்தலும்
அஞ்சனம் தீட்டிய மைவிழியும் கொவ்வை செவ்வாய்
இதழ்களில் புன்முறுவல்பூத்து அம்மையவள்
உலகத்தில் அறம்தன்னை நிலைநாட்டிமங்கையவள்
சூடிய நகைவகைகள் அணிமணிகள் அழகுதனை
விளம்பிடவே நாவும்மனமும் எழவில்லை அவளழகுதனில்
கூந்தலில் சண்பகமுல்லையும் நறுமணம் கமலசூடிநிற்பவள்
தலையணி வகைப்பூவில் தாழம்பூ,தாமரைப்பூ,சொருகுப்பூவும்
பிறை ,புல்லகம் ,பூரப்பாளை,சடைநாகம் அணிந்து
சடைத்திருகு,சந்திரப்பிரபை,சரம்,சுடிகையும்
குச்சம்,குஞ்சம்,கஞ்சரம்,சேகரமும் பொன்வாகையும்
சூடிய பத்தினியர் தொழும் தெய்வத்தம்மையவள்
அழகுற செவிமடலில் வைரத்தொடும் ரத்தினக்கோப்பும்
குழையும்,குவளையும்,கன்னம்பூவும், வல்லிகையும்
பூட்டியழகு ததும்பி அருளும் நீலியவள்
வலம்புரி கழுத்தில் ததும்பும் அணிமணியோ
தேர்ந்த வைரமும் மாணிக்க கண்டசரமும் பூச்சரமும்
மங்கலச்சரமும் மலர்ச்சரம் மாதுளம்காய்மாலையுடன்
அணிமணி மாலைவகையில் கடுமணி,மிளகு,நெல்லி,மாங்காயும்
பாண்டிநகர்தனில் விளைந்த முத்துமாலைகளும் அவற்றின்மகுடமாய்
கோவலன்பூட்டிய மங்களச்சரமும் கழுத்திருவும் பவளத்திருவும்
ஒற்றை கொங்கையுடையாளின் கண்டத்தில் தவழ்கின்றதுவே
வஞ்சியவள் தாழம்பூ புயங்களில் அழகுததும்பிடவே
கொந்திக்காயும் பவளவங்கியும் தரித்த குலக்கொடியின்
கைகளில் சங்குவளையும் ,திருகு, ரத்தினக்காப்பு
கொந்திகாய்ப்பூ, நெளிவலவி ,கிங்கிணிவளவி தரித்தவள்
செங்காந்தாள் விரலுடையாளின் விரல்களிலோ சிவந்திபூவும்
இரத்தின அரும்தடைகளுடன் வங்கிமோதிரங்களும்
வட்டப்பூக்களுடன் அம்மையவள் விரல்களில்
செம்மைநிறத்துடைய சிறந்த மருதாணிபூசியவள்
வலதுகரத்தில் நீதியைநிலைநாட்ட மாணிக்கபர்ல்கொண்ட
பொர்சிலம்புடையோலே நீதிவழுவாது காக்கும் தெய்வமே
சிங்களபவுத்தர்கள் போற்றும் வேள்வணிகர் தெய்வமே
அன்னையவள் சிற்றிடையில் அழகுததும்பு ஒட்டியானமும்
இடையினை ஒட்டிய கிங்கினிமணிகள் அம்மையவள் வருகையைபாடும்
மாரியாய் நின்று வெம்மைதனித்து மழைதனை தருபவளாம்
காடுகரைசெழிக்க வழிவகைசெய்ய காவணங்கள் பலகொண்டவளாம்
திருவடிதரமரையில் அழகுபொங்கு அணிமணிவகைகளோ
வளையும் தண்டையும் ஆலங்காய் அத்திக்காய் கொலுசுகள்அதிர்
அம்மையவள் கால்விரலணிகளிலே காலாழி.,நல்லணி,பில்லணை
பீலி,மிஞ்சி இவையோடு அம்மையவள் பொற்பதம் அழகுபூண்டதுவே
பொன்னகையும் புன்னகையுன் பூத்துக் குலுங்கக்கண்டேன்
நானிலத்தில் திக்கெட்டும் உனதுபுகழ் பரவக்கண்டோம்
நாகநாட்டாரின் வணிகக்குடியுடை குலத்துதித்த வதுவே
மூவேந்தர்களும் உன்திருப்புகழ் பாடிப்பணியக் கண்டுகொண்டேன்
சிங்களநாட்டில் இருந்துவந்த செங்காள் அம்மையே
சோழவளநாட்டில் வந்துதித்த பொன்மணியே திருவே
சங்கத்தமிழ்வளர்த்த பாண்டிமாநகர்தனில் அறத்தை நிலைனட்டியம்மையே
சேரமலைநாடு புகந்து ஆடிஅனுஷத்தில் விண்ணுலகு சென்றஅம்மையே
உன்தன் சிலையுருவும் பெயர்வுருவும் மாறினாலும்
கனிவான அருளும் பொருளும் தருவதில் குறையேதுமில்லை
உன்வரலாரும் உன்புகழும் எதுகொண்டு மறைத்தாலும்
மறைத்தவரையும் வழிபட்டவர்கள் வாழ்வை வழமையாகியவளே
அறம்வோங்கவும் நீதியும்நேர்மையும் நிலைபெற்றதம்மா
உணதுருவில் கலைமகளின் வடிவங்களை ஒருங்கக் கண்டேனம்மா
இல்லரத்தாரும் துறவரத்தாரும் உனைபோற்றுவாரம்மா
நோய்யற்ற வாழ்வையும் நல்லறத்தையும் தரவேண்டுமம்மா
ஆநிரைகளும் திருவுடன்கூடிய வீடுமனையும் அருளுகவம்மா
தானதருமங்கள் செய்திடவே போன்னும்போருளும் தருவாயம்மா
எம்குலம்தழைத்திட பதினாறுபெறுபேற்று விளங்கிட பிள்ளை
வரும்தரும் கற்பகத்தருவே உன்புகழைதிக்கெங்கும் பரவக்கண்டேன்
துறவோர்க்கு பிறவாநிலையும் அறவோர்க்கு மனவலிமையும்
கன்னியர்க்கு நல்மணவாளனும் காளையர்க்கு தொழில்மேன்மையும்
கேட்பவர்க்கும் வேண்டியபொது வேண்டியவண்ணம் தருபவளே
வாழ்வில் என்றும் இனிமைகள் நிறைந்திட வேண்டுமாமம்மா
உன்னருள் மழையில் வாழ்வில் நனைய வேண்டும்
உனை மறவாது என்றென்றும் இருக்கவேண்டும்
-------- று.நா.இராமு
21மார்ச்2015 வலைப்பூவில் எழுதியது
No comments:
Post a Comment